நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் தலைவர்கள் அமர்ந்திருந்த முன் வரிசையில் மோடி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு அடுத்த படியாக அமர்ந்து இருந்தார்.
பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் வரவேற்று பேசுகையில் விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடும் போது உங்கள் மனைவி பிரேமலதா வந்திருக்கிறாரா? என்று கேட்டார். உடனே பிரேமலதா எழுந்து நின்று ராஜ்நாத் சிங்கை கை கூப்பி வணங்கினார்.
அதே போல் நரேந்திர மோடியும் விஜயகாந்தை எங்கே உங்கள் மனைவி பிரேமலதா என்று கேட்டார். அப்போது பிரேமலதா எழுந்து மோடியைப்பார்த்து வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் விஜயகாந்த் மோடிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடி விஜயகாந்த்தை கட்டித்தழுவினார். தொடர்ந்து மோடிக்கு காஞ்சிபுரம் வெண்பட்டு சால்வை போர்த்திய போதும் விஜயகாந்த் கன்னத்தை செல்லமாக வருடினார்.
பிறகு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களை சந்தித்த போது, "நான் மோடியிடம் தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை சேலம் கூட்டத்தின் போதே பட்டியலிட்டு கொடுத்தேன். அதை மீண்டும் வலியுறுத்தி மீனவர் பிரச்சினை, மின்சார பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம்." என்று கூறினார்.