ஜில்லா படம் வெற்றிகரமாக ஒடி வருவதை அடுத்து, சென்னையில் உள்ள ரெஸிடென்ஸி டவர்ஸில் நடைபெற்ற வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய், இதற்கு காரணமான ரசிகர்கள், மக்களிடயே கொண்டு சேர்த்த ஊடக துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது: "ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர். தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம்."