BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நிதி ஒதுக்கி இருக்கும் நாடு

இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் சிறுவர்கள், ஆண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அரசு வெளியிட்டு இருக்கும் ஒரு புள்ளி விவரத்தில், அந்நாட்டில் பலாத்காரம் அல்லது பாலியல் ரீதியான கொடுமைகளால் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ஆண்கள் பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் டேமியன் கிரீன் கூறியதாவது:

பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தில் இருந்து வெளிவந்து மற்றவர்களை போல இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரை, கவுன்சலிங், ஆலோசனை வழங்க அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.  பலாத்கார பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட்டு வாழ ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை மின்சார ரயிலில் மறுபடியும் இன்று தீ விபத்து



இன்று மாலை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது,  திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ர‌யில் உடனடியாக நிறுத்தப்பட்டது.  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், தாம்பரம்- கடற்கரை இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இன்று காலை பல்லாவரம் அருகிலும் ஒரு மின்சார ரெயிலில் தீப்பிடித்தது. ஒரே நாளில் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் செயல்படும் "மக்கள் ஆட்டோ" நிறுவனத்தை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்

கோவையில் குறைந்த விலையில் செயல்படுத்தப்படும் "மக்கள் ஆட்டோ" நிறுவனத்தை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்

கோலி சோடா படத்தில் நடித்ததற்கு தனக்கு பணம் தரவில்லை:பவர் ஸ்டார்


இன்றைய சினிமா எனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், கோலி சோடா படத்தில் நடித்த தனக்கு அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் மில்டன் பணம் தராமல் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார்.

விழாவில் அவர் பேசியதாவது: "கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்கள். இதில் நடிக்க ஒரு சிறிய தொகையை மட்டும் முதலில் கொடுத்தார்கள். மீதிப் பணத்தை பிறகு தருவதாக கூறியவர்கள், கடைசி வரைக்கும் தரவே இல்லை. இதைப் பற்றி கேட்ட போது, "கொடுக்க முடியாது போய்யா.. யார் கிட்ட வேணா சொல்லிக்க'ன்னு கேவலமாக பேசுகிறார்கள். ஆனால் பலரும் நான்தான் அடுத்தவர்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்கள். உண்மையில் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அந்த உழைப்புக்குக் கூட உரிய பணம் தராமல் ஏமாற்றுகிறார்கள்."

திருச்சி திமுக மாநாட்டில் தலைவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த 3 பேர் மரணம்


திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்திருந்தனர். இவர்களில் சேலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் (வயது 70), தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50), கரூர் மாவட்டத்தை சேர்ந்த‌ டி. கிருஷ்ணன் (வயது 55) ஆகியோர் மாநாட்டு வளாகத்திலேயே உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராஜனுக்கு, மாநாட்டு பந்தலில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மு.க. ஸ்டாலின், நேரு ஆகியோர் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காமராஜ், கார் பார்க்கிங் பகுதியில் வாகனத்தில் அமர்ந்தபடியே தலைவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்தபடியே உயிரிழந்தார். கிருஷ்ணனும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் மோதல்

நடிகர் விஜய், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை, தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தி, இனி மன்றம் குறித்து தன் தந்தை சந்திரசேகரிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டாராம். இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் சந்திரசேகர் பெயரை, படத்தைப் போடக்கூடாது. குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம்.

மகன் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டுமென விரும்பிய சந்திரசேகர், தலைவா படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு, விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நின்று வருகிறார்.

வழக்கமாக ரசிகர்கள் உடனான கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும். ஆனால் "இனி அங்கு யாரும் போக வேண்டாம்.  நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள்." என்று விஜய் கூறிவிட்டாராம். தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார் என்று கூறியுள்ளார்.

சென்னை மின்சார ரயிலில் தீப்பிடித்தது



இன்று காலை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென தீப்பொறி ஏற்பட்டது. பிறகு, ரயில் டிரைவர் பகுதயில் இருந்து பய‌ங்கர சத்தத்துடன் தீ ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டதை அடுத்து, பயணிகள் அலறி அடித்து கொண்டு பெட்டியில் இருந்து வெளியேறினார்கள்.

தொழில்நுட்ப துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்கள் விரைந்து வந்தனர். மின்சாரத்தை சப்ளை செய்யக்கூடிய 'ராடு' உடைந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அதனை சரி செய்து ரயிலை இயக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனாலும் ரயில் இயங்கவில்லை. பின்னர், தாம்பரத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதான என்ஜினை இழுத்து சென்றது.

இந்த சம்பவத்தால் கடற்கரை–தாம்பரம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

மார்ச் 1ம் தேதி முதல், ரூ10,000க்கு மேல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருபவர்கள் படிவத்தில் குறிப்பிட வேண்டும்


வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் இந்திய ரூபாய் எவ்வளவு கொண்டு  வருகிறார்கள் என குறிப்பிட வேண்டும் என முதல்முறையாக சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி  அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு வருபவர்கள், அதுபற்றி இந்திய சுங்க அறிவிப்பு  விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். படிவத்தில் தவறான தகவல் தந்து வரி ஏய்ப்பு செய்திருந்தால்,  அவர்களுக்கு உண்மையாக செலுத்த வேண்டிய சுங்க வரியில் 300 சதவீதம் வரை அபராதம்  விதிக்கப்படுவதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 1ம்  தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடு  செல்லும்போதுதான் இந்த படிவத்தை நிரப்ப வேண்டும். திரும்பி வரும்போது படிவத்தை நிரப்ப  வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், இழவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது, 3 பேர் கவலைக்கிடம்

சென்னை மைலாப்பூரை சேர்ந்த அரிகரன் என்பவர், வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் உறவுக்கார பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஆறு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இழவு வீடே பரபரப்பானது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் ஆறு பேரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி மாநாட்டில், கருணாநிதி ஆற்றிய நிறைவுரை


திருச்சியில் நடந்த திமுக 10-வது மாநில மாநாட்டில், கருணாநிதி ஆற்றிய நிறைவுரையின் தொகுப்பு:

அண்ணா கண்ட கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்போரும், மதவாதத்தை எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களும் திமுக கூட்டணிக்கு வரலாம்.  மதவாத அரசு உருவாக இடமளிக்க மாட்டோம் என உறுதி எடுப்பவர்கள் தோழமை கட்சிகளாக வரலாம். சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் ஆதரவளிப்பவர்கள் இந்த அணியில் இடம்பெறுவார்கள்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வாய்தா கேட்டதன் காரணமாக இத்திட்டம் தொடங்க முடியாமல், ரூ.1000 கோடிக்கு மேல் செலவழிக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் கூட, அதை நிறைவேற்றக் கூடாது என அழுத்தம் திருத்தமாக ஜெயலலிதா இருப்பதின் நோக்கம் என்ன? திமுக அறிவித்த திட்டம் என்பதால், அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார் ஜெயலலிதா.

 குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், இந்த நீதிபதி கூடாது, இந்த நீதிபதி தான் வேண்டும் என சொன்னது உண்டா? அது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்தது. மனுப் போட்டும், வாய்தா வாங்கியுமே 10, 15 ஆண்டுகளாக வழக்கை இழுத்துக் கொண்டே போகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை இழுத்தடிக்க, வாய்தா வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதா தான் நீதி, நியாயம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது. மக்கள் நலனுக்கான எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை. இப்படிப்பட்ட ஜெயலலிதாவா தமிழகத்தை முன்னேற்றப் போகிறார். இவராலா தமிழகம் முன்னேறப் போகிறது?

இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டின் இறுதியில் நிறைவு உரையாற்றி இருந்தார்.

இடிந்தகரை போராட்டக்காரர்களை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டம்



கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களை தங்கள் கட்சியில் சேர்த்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதினைந்து எம்.பி. தொகுதிகளில் போட்டியிட வைக்க,  அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பதினைந்து தொகுதிகளில் ஊழல் செய்யாத புதுமுகங்களை தேர்தலை சந்திக்க‌ ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மியின் இந்த திட்டம், வரவேற்கபட வேண்டியது என நினைத்தால், லைக் போடுங்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media