நாடாளுமன்ற தேர்தலலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல் பெருமான், கே.எஸ்.அழகிரி உள்பட 30-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்கு காரணம் என்ன? தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரியாக செயல்படவில்லை.
மற்ற கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் முறையாக காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து கூட்டம் போடவில்லை. பிரச்சாரத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக்கூட்டம்கூட நடத்தவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை.
தலைமைப் பொறுப்பிலிருந்து முறையாக செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கான முழு பொறுப்பும் தமிழக காங்கிரஸ் தலைவரையே சேரும். இனி தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்றால், விவேகமாக செயல்படும் தலைமையை தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.