எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் - இயக்குனர் சேரனின் உருக்கமான பேட்டி, யார் இந்த சந்த்ரு?
தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் ஏழை பணக்காரன், சாதி மத வித்தியாசம் பார்ப்பவனில்லை என்றும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே...? என்றும் மிக உருக்கமாக இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் இயக்குனர் சேரன்.
தனது மகள் காதலை முதலில் தான் எதிர்க்கவில்லை என்றும் மகளுக்கு சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிப்படைந்த போது தனது மகள் சேரனிடம் அவரது காதலர் சந்துரு மிரட்டுவதாக கூறியதாகவும் பிடிக்கவில்லை என்றால் அந்த பையனை விட்டுவிடு என்று கூறினாராம், மேலும் 10 நாட்களுக்கு முன் கமிஷனரிடம் தனது மகள் தாமினியை அவரது காதலன் சந்துரு மிரட்டுவதாக புகார் அளித்ததாகவும் இடையில் தனது மகளை மூளைச்சலவை செய்து தனக்கு எதிராக புகார் அளிக்க வைத்துள்ளதாகவும் இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி தான் சந்துரு என்ற உதவி இயக்குனரை காதலிப்பதாகவும் அவர்கள் காதலை மறுத்த சேரன் சந்துருவை கொலை செய்ய முயன்றதாகவும் நேற்று போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார், சேரன் சில நாட்களுக்கு முன் போலிஸ் கமிஷனரை சந்தித்து விட்டு வந்த போது நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு சொந்த விஷயமாக கமிஷனரை சந்தித்ததாகவும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறியவர் தற்போது சந்துரு மீது புகார் அளித்ததாக கூறியுள்ளார்.
சந்துரு என்பவர் சென்னை சூளை மேட்டில் வசிப்பவர், திரைத்துரையில் உதவி இயக்குனராகவும் டான்சராகவும் உள்ளார், இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆடி ஒரு சீசனில் முதல் பரிசை வென்றவர். சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சந்துருவின் அப்பா திரைத்துரையில் சில காலம் வேலை பார்த்தவர். இவரது அம்மா பத்மா ஆந்திராவை சேர்ந்தவர். சந்துருவின் அப்பா, அம்மாவும் திரைத்துறையில் இருந்த பழக்கத்தால் கலப்பு மணம் செய்து கொண்டனர். சந்துருவின் அக்கா கவுரி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அதிமுக சீனிக்கட்டியின் மைத்துனர் முகம்மது இலியாஸை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் நேற்றிலிருந்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சேரன் மற்றும் சேரனுக்கு ஆதரவாக இயக்குனர்கள் அமீர், பாலா, சமுத்ரகனி உட்பட பல இயக்குனர்களும் காவல்துறையுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் தானே திருமணம் செய்துவைப்பதாக சேரன் கூறியும் சேரனின் மகளோ பிடிவாதமாக சேரனுடன் செல்ல மறுத்துவிட்டார், சேரனுக்கு பல இயக்குனர்கள் துணையிருந்தாலும் சந்த்ருவுக்கோ யாரும் ஆதரவாக இல்லை, மீடியா உன்னிப்பாக இந்த கேசை கவனித்து வருவது மட்டுமே சந்த்ருவின் ஒரே ஆறுதல்.
சாதிக்கு எதிராகவும் காதலுக்கும் ஆதரவாகவும் படம் எடுப்பது மட்டுமின்றி மைக் கிடைத்தால் போட்டு தாக்கும் அனைத்து டைரக்டர்களும் ஒரு காதலை பிரிக்க ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்வதை பார்க்கும் போது உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேட்க தோன்றுகிறது.
# சேரன் சார் ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனுக்கும் இதே எதிர்பார்ப்பு உண்டு என்பது , காதல் புனிதமானது, காதலுக்கு கண்ணில்லை, காதல் சாதி, மதம், ஏழை பணக்காரன் வித்யாசம் பார்க்காது என்று சினிமாவில் காட்டுவதும் நீயா? நானா? போன்ற ஷோக்களில் ஷோ காட்டும் போது ஏன் உங்களை போன்றோர்களுக்கு புரியவில்லை?