கடலூர் முதுநகரில் 1717-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தூய தாவீது மேனிலைப்பள்ளி தனது 300-வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகி வருகிறது. கடலூரில் துவக்கப்பட்ட முதல் தமிழ்வழி ஆரம்பப் பள்ளியான தூய தாவீது, டென்மார்க்கிலிருந்து கிடைத்த நிதியுதவியைக் கொண்டு பள்ளி தொடர்ந்து செயல் படத் தொடங்கியது. 1756 முதல் 1760-ம் ஆண்டு வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வுக்கு இப்பள்ளி வளாகத்தில் ஓய்வறை ஒன்று இருந்தது.
இதுவரை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் இப்பள்ளியில் பயின்றுள்ளனர். தானே புயலால் பொலிவிழந்து காணப்படும் நிலையில் பள்ளியின் 300-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன், கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் பூவராகவன், டிஜிஎஸ் தினகரன் உள்ளிட்டோர் இப்பள்ளியில் படித்தவர்கள். இதைப் பற்றி வீரமணி கூறுகையில், 1944 முதல் 1950-ம் ஆண்டு வரை, தான் இப்பள்ளியில் படித்ததாகவும், தன்னுடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயகாந்தனும் சில நாட்கள் பள்ளியில் பயின்றதாகவும் கூறினார்.