BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 May 2014

வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை செல்ல 40 நிமிடங்கள் எடுக்கும் மெட்ரோ ரயில், கட்டணம் ரூ.40

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் இரு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறைவேற்றப்படுகின்றன. முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்கிடையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரெயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்ததாக ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 என முழுத் தொகையாகவே கட்டணம் வசூலிக்கப்படும். 

சென்னை மெட்ரோ ரெயிலுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்.

ஒரு நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒன்று முதல் 2 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையம் வந்து விடும் என்பதால் மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 40 நிமிடங்களில் போய் சேர முடியும். சிக்னல், கிராசிங் போன்ற இடையூறுகள் இல்லை என்பதால் தாமத மின்றி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்து காங்கிரஸ் சர்ச்சை, சோனியா என்ன படித்துவிட்டார் என பதிலடி கொடுக்கும் பாஜக‌

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், ஸ்மிருதி இரானி. மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், 'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தான் கல்வித் துறையை கவனிப்பார். அந்தத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்புகூட படிக்காதவர்." எனக் கூறியுள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர் மது கிஷ்வார் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா? 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா?" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவினர் குறித்து குற்றம் கண்டுப்பிடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த அகந்தையால்தான் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். மக்களின் முடிவை காங்கிரஸ் ஏற்றுதான் ஆகவேண்டும். முதலில் அவர்கள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு சுயபரிசோதனை செய்தால் நல்லது" என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கருத்து கூறும்போது, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைவராக இருந்து, அரசுக்கு ஆலோசனைகளைக் கூறிவந்தவர். அவரது கல்வித் தகுதிச் சான்றிதழைப் பார்க்க வேண்டும்" என்றார்.

முதல்முறையாக மக்களவையில்ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை

2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களில் ஒருவர் கூட இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடப்படத்தக்கது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 482 வேட்பாளர்களை பாஜக களமிறக்கியது, அதில் 7 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள், ஆனால் அவர்களில் யாரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. மக்களவையில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாதது இதுவே முதல் முறை.

மக்களவையில் உள்ள எம்.பிக்களின் மொத்த எண்ணிக்கை 543, இதில் 23 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள், ஆனால் இதில் ஒருவர் கூட உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இல்லை. அம்மாநிலத்தில் மட்டுமே பாஜக 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்காளத்தில் இருந்து அதிகபட்சமாக 7 இஸ்லாமிய வேட்பாளர்களும், இதற்கடுத்து பீகாரில் இருந்து 4 இஸ்லாமிய வேட்பாளர்களும்  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு மோடி பெயரை வைத்த முன்னாள் அமைச்சர் மீது பெற்றோர் போலீஸில் புகார்


மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் மைசூரில் உள்ள அரசு செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. அப்போது மருத்துவமனைக்கு வந்த கர்நாடக மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான எஸ்.ஏ. ராமதாஸ், அங்கிருந்த அனை வருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு `நரேந்திர கிருஷ்ணா மோடி' என்றும், பெண் குழந்தைக்கு `தன்மயி மோடி' எனவும் பெயரை சூட்டினார். அந்த குழந்தைகளுக்கு காவி நிறத்தில் புதிய உடைகளையும் வழங்கினார்.

இந்நிலையில் மோடியின் பெயரைச் சூட்டிய அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் எஸ்.ஏ.ராமதாஸ் மீது போலீஸில் புகார் அளித்துள் ளனர்.

இது தொடர்பாக தன்மயி மோடி என்ற குழந்தையின் தந்தை மஞ்சுநாத் கவுடா பேசுகையில், ``குழந்தை பிறந்தபோது நான் மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது குழந் தைக்கு பெயர் சூட்டியுள்ளார். என்னுடைய மனைவியிடமோ, உறவினர்களிடமோ கூட அனுமதி பெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஏற் கெனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கி, தற் கொலைக்கு முயற்சித்தவர் ராமதாஸ். அவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இப் படிப்பட்ட ராமதாஸுக்கு என் னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் தகுதியில்லை.

நான் என்னுடைய தாயின் பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனையும் அவர் சூட்டிய பெயரையே பிறப்பு சான்றிதழில் குறிப்பிட உள்ளது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

சிவகங்கையில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 59 வயது ஆசாமிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது


சிவகங்கை மாவட்டத்தில், 13 வயது சிறுமியின் வயிறு பெரிதானதால், அவரது தாயார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 59 வயது மெய்யப்பன் என்ற முதியவர், தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ரூ.20 கொடுத்து தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுமாறும், யாரி டமும் இதை தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும், பலமுறை தன்னி டம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொத்தமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பலாத் காரம் செய்த முதியவருக்கு திருமணமான மகளும், திருமணமாகாத 2 மகன்களும் உள்ளனர்.

காவலர்கள் தேடுவதை அறிந்து தலைமறைவான மெய்யப்பன் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

13 வயது சிறுமியை 59 வயது முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது வெட் ககரமான சம்பவம். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுக்கு குறையாமல் தண்டனை கிடைக்கும். இதுபோன்ற வழக்குகளில், முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது மட்டும் அல்ல; அந்த தண்டனையால், இது போன்ற குற்றங்களில் இனிமேல் யாரும் ஈடுபடக் கூடாது என்ற பயமும் ஏற் படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் பலாத் காரச் சம்பவங்கள் பெண் இனத்தின் மாண்புக்கு தீராத களங்கத்தை ஏற்படுத் தும். பெண்களின் கண்ணியத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.

இந்த வழக்கின் தன்மை மற்றும் இதுபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, மனுதாரருக்கு முன் ஜாமீன் மட்டும் அல்ல, ஜாமீனும் வழங்கக் கூடாது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது. இந்த வழக்கில் விரைவில் நீதி வழங்க வேண்டும். கீழ் நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண் டும். குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலை யில், மனுதாரரின் வயதைக் கருத்தில் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கொலை, சிபிஐ விசாரணையில் 20 வருடங்களுக்கு பிறகு தெரிய வந்தது


பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை, மோகன் என்பவர் காதலித்து, சென்னைக்குக் கடத்திச் சென்று 1994 ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி, இந்த காதலுக்கு வேப்பூரைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் உதவியிருப்பதாகச் சந்தேகித்து, அவரை அழைத்துச் சென்று விசாரித்தார்.

இந்தநிலையில் பருத்திக்காட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் பாண்டியன் சடலம் கிடந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், தனது கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக பாண்டியனின் மனைவி அஞ்சலை, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாண்டியன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அஞ்சலை அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. பிறகு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ போலீஸார், பாண்டியன் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி (தற்போது மதுரை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர்) மற்றும் அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்த ரவி (தற்போது திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்) ஆகியோரை சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நிம்மதி, நியாயம் கிடைக்க வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்திய மோடி


பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார். 

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நிம்மதி, நியாயம் கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கை கட்டமைப்புக்குள் தேசிய சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ராஜபக்சேவை மோடி வலியுறுத்தினார். இதற்கு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல் செய்வதுடன் அதைத்தாண்டியும் உரிய நடவடிக்கை எடுப்பது உதவும் எனவும் ராஜபக்சேவிடம் எடுத்துரைத்தார் மோடி.

இலங்கை- இந்தியா இரு தரப்பு உறவு, வர்த்தக-பொருளாதார கூட்டுறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, இலங்கை திரிகோணமலை மாவட்டம், சாம்பூரில் 500 மெகாவாட் அனல்மின் நிலையத்தை விரைவில் தொடங்குவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் மோடி விவாதித்தார். இந்த பிரச்சினையில் இரு தரப்பிலுமே சம்பந்தப்படுபவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கான தேவை பற்றி இரு தலைவர்களின் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media