BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 December 2014

உணவே மருந்து : பழங்களின் மகத்துவம்

மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும். தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக்கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளை ஜூஸை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பேரீச்சம்பழம் நகங்களுக்கு வலு தரும். தினமும் இரண்டு பேரீச்சம்பழமும் ஒரு கப் பாலும் சாப்பிட்டால் அழகிய நகம் வளரும்.

சில விசாரணை முறைகள் வெறுக்கத்தக்கவை : சி.ஐ.ஏ. ஒப்புதல்

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதம் தொடர்பான கைதிகளை விசாரிக்க அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. பயன்படுத்திய வழிமுறைகளில் சில வெறுக்கத்தக்கவை எனவும், அரசால் அனுமதிக்கப்படாதவை எனவும் அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் பிரென்னன் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரிலுள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 2,990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது, சி.ஐ.ஏ. உளவு அமைப்பு கைதிகளிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து, உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மேலவைக் குழு விசாரித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், போலி மரண தண்டனை நிறைவேற்றம், நிர்வாணப்படுத்துதல், தூங்கவிடாமல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விசாரணை முறைகளை கைதிகளிடம் சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இது, உலக நாடுகளின் கண்டனத்தை அமெரிக்காவுக்குப் பெற்றுத் தந்தது. இந்நிலையில், சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரென்னன் செய்தியாளர்களுக்கு அளித்த தன்னிலை விளக்கத்தில் தெரிவித்ததாவது: சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் "மேம்படுத்தப்பட்ட விசாரணை முறை'களை பயன்படுத்திய பிறகே ஒசாமா பின் லேடனைப் பற்றிய விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விசாரணை முறைகளால்தான் கைதிகளிடமிருந்து விவரங்களைப் பெற முடிந்ததா, அல்லது வேறு வழிமுறைகளிலேயே விவரங்களைப் பெற முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் ஆய்வுக்குரியது. விசாரணை அதிகாரிகள் பற்றாக்குறை: இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ. அமைப்பின் தயார் நிலைக்கும் மீறிய உத்தரவுகள் எங்களுக்கு இடப்பட்டன. விசாரணை மேற்கொள்வதில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில், பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் பணிக்கப்பட்டோம்.எங்களது பல அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் சி.ஐ.ஏ. அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர்.
வெறுக்கத்தக்கவை: இந்தச் சூழலில், கைதிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு சில நேரங்களில் வெறுக்கத்தக்க, அரசால் அனுமதிக்கப்படாத சில வழிமுறைகளை சில அதிகாரிகள் கடைப்பிடித்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் ஜான் பிரென்னன்.

நூலகக் கட்டடத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த மூன்று ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வரும் நிலையிலும், அங்கு போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் கிராம கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களில் வகுப்பறைகள் இயங்கி வருகின்றன. கடந்த 1968ம் ஆண்டு அப்போதைய உணவு, வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.மதியழகனால் தொடங்கப்பட்ட இந்த அரசு தொடக்கப்பள்ளி, 1991ம் ஆண்டு அரசு நடுநிலைப்பள்ளியாகவும், 2005ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது, மாகாண்யம், மலைப்பட்டு, அழகூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300}க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்ட கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இதனால், பள்ளிக்கு வகுப்பறைகள் அமைப்பதற்கான புதிய கூடுதல் கட்டடங்கள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய வகுப்பறை வசதி இல்லாததால் நூலகக் கட்டடம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களை மாணவர்கள் தற்போது வகுப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் கிராமசபா கூட்டம், ஊராட்சி சம்பந்தப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் வெட்ட வெளியில், வெயிலில் அமர்ந்து பாடம் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிப் பகுதியிலேயே பல ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடங்களை பள்ளிக்கு ஒதுக்க ஊராட்சி நிர்வாகம் தயாராகவே உள்ளது. அவற்றில் கட்டடங்களை கட்டித்தர சில தனிநபர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் மாவட்டக் கல்வி நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் கடந்த பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று வருகின்றனர். போதுமான வகுப்பறைகள் உள்ளிட்ட அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தால் அவர்களின் கல்வித் தரம் உயரும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடத்தை கட்ட மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 4 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கூட கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர், நேரமுக எழுத்தர் உள்ளிட்ட குரூப் 2-ஏ பிரிவில் அடங்கிய 2 ஆயிரத்து 846 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை எழுத 4 லட்சத்து 21 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 339 பேரின் தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Community wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவற்றை, தங்களது பதிவு எண்ணை (Register Number) பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பத் தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position), இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு : மது கோடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, அந்த மாநில முன்னாள் தலைமைச் செயலர் அசோக் குமார் பாசு உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்னிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அப்போது விசாரணை அதிகாரி தெரிவிக்கையில், இந்த வழக்குக்கு தேவைப்படும் ஆதாரங்களை இன்னும் சில தினங்களில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி பராசர், குற்றப்பத்திரிகை வரும் 22ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மது கோடா, பாசு தவிர்த்து, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியார் நிறுவனமான வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட்டின் இயக்குநர் வைபவ் துல்சியா மற்றும் விஜய் ஜோஷி என்பவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் 8 பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐயால் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இந்த ஊழல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஜ்ஹராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால், அந்த நிறுவனம், அதன் இயக்குநர்கள் சஞ்சீவ் குமார், பிரசாந்த், வைபவ், நிஷா, விமல் குமார், நிர்மலா, ஹேமந்த் குமார் அகர்வால், நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், ஜார்க்கண்ட் அரசு உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்தது. இதுதொடர்பாக சிபிஐ முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்காமல் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. எனவே, நீதிமன்றத்தில் சிபிஐ மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.

ஹிண்டால்கோ நிறுவன விவகாரம்: டிச.16-இல் உத்தரவு
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை மீது வரும் 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இதை அறிவித்தார். ஒடிஸா மாநிலம், தலாபிராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை தொழிலபதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்குச் சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பாக குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பாரேக் உள்ளிட்டோர் மீதும் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. ஆனால், பிறகு அவர்களுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இது, மேற்கு வங்க அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மதன் மித்ராவுக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால், விசாரணை தள்ளிப்போனது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார். அவரிடம் அதிகாரிகள் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த சிறிது நேரத்தில் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். அவர், சாரதா குழுமத்தின் ஓர் அங்கமான சாரதா ரியால்டி நிறுவனத்தின் மூலம் சதி, ஏமாற்றுதல், பணம் கையாடல் ஆகியவற்றைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாரதா ரியால்டி நிறுவனம், மேற்கு வங்கத்தில் ரியல் எஸ்டேட் சேவையை செய்து வந்தது.

அமைச்சரைத் தவிர, சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென்னின் ஆலோசகராக செயல்பட்ட நரேஷ் பலோடியாவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக, அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ அலுவலகம் சென்றதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில், இதற்கு முன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களான குணால் கோஷ், சிருஞ்சய் போஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மம்தா பதவி விலகக் கோரிக்கை: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: இந்த மோசடி வழக்கு விசாரணை மெதுவாக மம்தாவின் வீட்டை நோக்கிச் செல்கிறது. இந்த ஊழலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கழுத்து வரை ஊறித் திளைப்பதை மதன் மித்ராவின் கைது காட்டுகிறது. இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டிய நேரம் இது. தற்போது குணால், சிருஞ்சய், மதன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்த வரிசையில் அடுத்ததாக முகுல், மம்தா ஆகியோர் இனிவரும் ஆண்டுகளில் இடம்பெறுவார்கள் என்றார் சித்தார்த் நாத் சிங். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சூர்யகாந்த மிஸ்ரா கூறுகையில், ""சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முதல்வர் மம்தாவிடம் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான முகமது சலீம் கூறியதாவது: மதன் மித்ரா ஓர் அமைச்சர் மட்டுமின்றி, மம்தா பானர்ஜியின் நெருங்கிய சகாவாகவும் இருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு ஆள்களைத் திரட்டும் நபராகவும் இருக்கிறார். மேற்கு வங்க மக்கள் தற்போது பொறுமை இழந்து வருகின்றனர். சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.மதன் மித்ரா கைது விவகாரம் தொடர்பாக மம்தா விளக்கமளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னனும் கோரியுள்ளார். குணால் கோஷுக்கு காவல் நீட்டிப்பு: இதனிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷின் நீதிமன்றக் காவல் இம்மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:  மாநில அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நடந்துள்ளது (அமைச்சர் கைது) சட்டவிரோதம் மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கு எதிரானதுமாகும். ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கான அபாயகரமான நடவடிக்கை இது. மதன் மித்ராவின் கைதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமின்றி, மலிவான சதிச் செயலுமாகும். என்னை முதலில் கைது செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கில் மதன் மித்ராவை முதலில் சாட்சி என்று கூறினர். தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். மதன் மித்ராவை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது அங்கு அவரைச் சந்திக்க உள்ளேன். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்களிடம் உள்ள போலீஸாரைக் கொண்டு என்னைக் கைது செய்யட்டும். அவர்களின் முகத்திரையைக் கிழிப்போம். அவர்களை எதிர்த்து நாங்கள் தில்லியில் போராட்டம் நடத்துவோம். சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நபர் (அமித் ஷா) தற்போது எங்களை நோக்கி புகார் கூறுகிறார். மதன் மித்ரா கைதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை முதல் தெருக்களில் இறங்கிப் போராடும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றார் மம்தா.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media