தமிழகத்தில் மின் வெட்டுப் பிரச்சினையால், அரசு மருத்துவமனையில் நோயாளியின் உயிரைக் காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் நிலவி வரும் மின் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் கூறினேன். தேர்தலுக்காக மட்டுமே அதிமுக அரசு மின்பற்றாக்குறை இல்லாதது போலவும், மின்வெட்டு என்ற பேச்சே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற மாயத்தோற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.
கோடை காலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டின் சுயரூபம் தெரியும் என்று சொல்லி வந்தேன். அப்போது நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து தமிழகம் மின்மிகை மாநிலம் ஆனது போல முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆனால், நடப்பது என்ன?
சென்னையில் 4 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 8 முதல் 12 மணிநேரமும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தொழில் நகரங்கள் முடங்கிப்போய், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கோடையின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். மின்சாரம் இல்லாததால் விவசாயத்திற்கு நீர்ப்பாய்ச்ச முடியவில்லை. நீர் ஏற்று நிலையங்களில் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே உள்ள வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் மேலும் அதிகமாகி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல், உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருள் சூழ்ந்துள்ள நேரத்தில் கொள்ளை அடிப்பதும், வழிப்பறி செய்வதும் என சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போய் உள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனைகளும், நோயாளிகளும் இந்த மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாவும் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மின்தடையால் உயிர்பிழைக்க போராடியுள்ளனர். அதில் இரண்டு நோயாளிகள் உயிர் இறந்துள்ளனர்.
இந்தச் செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மின்தடையால் செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படவில்லை என்று தெரிகிறது. அந்த நேரத்தில் டாக்டர்கள் யாருமே இல்லாமல், நர்சுகள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அதன் பின் அங்கே வந்த டாக்டர்கள், இருவரும் இறக்கவில்லை என்று கூறி இறந்தவர்களின் உடல்களுக்கு, ரமணா படத்தில் வருவதைப் போல் செயற்கை சுவாசம் அளித்ததாகவும், உடன் இருந்த உறவினர்கள் தகராறு செய்த பிறகே, இறந்ததை உறுதி செய்ததாக சொல்லப்படுகிறது.
போதாக்குறைக்கு மருத்துவமனையின் சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்க ப்ரீசர் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த மின்வெட்டினால், பல உடல்கள் கெட்டுப்போய் அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை உள்ளது.
இந்த ஆட்சியில், நோயாளியின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவரின் உடலையும் பாதுகாக்க முடியவில்லை. உயிரைக் காப்பாற்ற வேண்டி, அரசு மருத்துவமனைக்கு வந்தால், உயிரை இழக்கக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது. இதைவிட கொடுமை வேறு என்ன தமிழகத்தில் இருக்க முடியும்.
சென்னையில் குண்டுவெடிப்பு, தமிழகம் முழுவதும் மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மக்கள் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வராமல், கொடநாட்டில் குளுகுளுவென ஓய்வெடுத்து வருகிறாரே இது நியாயமா?
இவருடைய செயலைப் பார்க்கும்போது, ரோம் நகரம் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பொன்முருகன், மாங்காட்டைச் சேர்ந்த ரவீந்திரன், ஆகியோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்ற வகையில் நிதியுதவியை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.