மதுவிலக்கை அமல்படுத்த கேரள மாநிலம் வழியில் தமிழக அரசு துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் குடிப்பகங்களில் 418 குடிப்பகங்களை அதிரடியாக மூட வைத்துள்ளார். தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடிப்பகங்களை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனையும், வருத்தமும் தான் விஞ்சுகிறது. மதுவால் தமிழகம் எதிர்கொண்ட சீரழிவுகள் ஏராளம்.
சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் முதலிடம், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம், குடியால் இறந்த கணவர்களால் உருவான இளம் விதவைகளின் எண்ணிக்கையில் முதலிடம் என எத்தனையோ அவமானச் சின்னங்களை தமிழகம் சுமந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலக்கு வைத்து மது விற்பனை செய்வதில் தான் தமிழக ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
மது வருமானத்தில் தான் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்க முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணம் இதற்கு ஒரு காரணமென்றால், அ.தி.மு.க. ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிப்பது இன்னொரு காரணம் ஆகும்.
கேரள அரசுக்கு கடந்த ஆண்டு வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,542 கோடி. இதில் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.9300 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகம். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் எனத் தெரிந்தும், முழுமையான மதுவிலக்கின் முதல் கட்டமாக குடிப்பகங்களை கேரள அரசு மூடியிருக்கிறது.
ஆனால், தமிழக அரசோ கடந்த ஆண்டு கிடைத்த ரூ. 23,401 கோடி வருவாய் போதாதென்று, நடப்பாண்டில் ரூ.26,292 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து தெருக்கள் தோறும் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்து வருகிறது. மக்கள் நலனில் இரு மாநில அரசுகளுக்குமான வித்தியாசம் இதுதான்.
மது விற்று, மக்களை சீரழிப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான மது விலக்கு ஏற்படுத்தப்படும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, மாதத்திற்கு 20 விழுக்காடு கடைகள் வீதம் மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.