BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 November 2014

தமிழரின் அறிவியல் : விடுகதை


ஒருவரின் நுண்ணறிவை ஒருவர் அறிவதற்கு எழுப்புகின்ற புதிர்களே விடுகதைகள் எனப்படும். ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியம் என்று விடுகதைகளைக் கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விடுகதைகள் போடுவதைக் காணலாம்.இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவார்கள். பொதுவாக விடுகதைகள் இரண்டு வகையாக அமைந்துள்ளன. ஒன்று கவிதை நடையில் அமைந்துள்ளவை; மற்றொன்று உரைநடையில் அமைந்தவை. மக்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் விடுகதைகள் பெரிய அளவில் காட்டுகின்றன.சில விடுகதைகள் எதுகை - மோனையுடன் அழகான சொல்லாட்சி பெற்று விளங்குகின்றன. 

எல்லாக் காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்டின்புறும் வகையில் அமைந்திருப்பது விடுகதைகள் ஆகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஓய்வு நேரத்தில் விளையாட்டாக விடுகதை போட்டுப் பாருங்களேன்...ஒரே மகிழ்ச்சியலை எழும்பும். வேடிக்கை என்ன வென்றால் ...நாம் போட்ட விடுகதைகளை பிறகு வீட்டிற்கு வருபரையெல்லாம் பார்த்து குழந்தைகள் மழலை மொழியில் 'அது என்ன ?...அது என்ன ? ' என்று கேட்கும் விதமே தனி அழகு விடுகதைகளைப் பெரும்பாலும் யாரும் எழுதி வைப்பதில்லை.(என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்) குறைந்த அளவிலேயே விடுகதைகள் பற்றிய புத்தகங்களைப் பார்த்திருக்கின்றேன். அது ஒரு புறம் இருக்கட்டும். சரி, இப்போது சில விடுகதைகள் போடட்டுமா? (என்ன எங்களையும் குழத்தைகள் பட்டியலில் சேர்த்து விட்டீர்களா.? என்று கேட்பது புரிகிறது. உங்களை வளர்ந்த குழந்தை உள்ளம் கொண்டவர்கள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா ? 

1. அகத்தில் அகம் 
சிறந்த அகம். 
அது என்ன அகம் ? 

2. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி 
அது என்ன ? 

3. குட்டைப் பெண்ணுக்குப் 
பட்டுப் புலவை. 
அது என்ன ? 

4. ஆயிரம் தச்சர் கூடி 
அழகான மண்டபம் கட்டி 
ஒருவன் கண்பட்டு 
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? 

விடை தெரிந்தால் பதில் போடுங்கள்; வீட்டில் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்

உணவே மருந்து : நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்



இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!


பங்குச்சந்தை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு



மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் குறைந்து 61.51 ரூபாயாக இருந்தது. அந்நிய செலாவணிச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கனா அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகா எல்லையில் தற்கொலைத் தாக்குதல்: 55 பேர் பலி



இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச் சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 3 பேர் உள்பட 55 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள நுழைவுப்பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்த மர்மநபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலுக்கு, பெஷாவரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஆண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தி 78 பேரைக் கொன்ற அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜந்துல்லா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வசிரிஸ்தான், ஜார்ப்-இ-அஜப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 20 வயது இளைஞர் ஒருவர், 25 கிலோ வரை வெடி பொருள்களை தனது உடலில் கட்டிவந்து வெடிக்கச் செய்தது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

கருப்புப் பணம் முழுவதையும் மீட்போம்: பிரதமர் மோடி உறுதி



வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முழுவதுமாக மீட்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம் "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இதைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் எந்தக் குறைபாடும் இல்லை. உங்கள் (மக்களின்) ஆதரவு தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இந்த விவகாரத்தில், முதன்மைச் சேவகனான என் மீது இந்த நாடு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த நாட்டின் ஏழை மக்களுக்குச் சொந்தமான பணம் வெளியே சென்றுள்ளது. அதன் ஒவ்வொரு பைசாவும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எனது லட்சியமாகும்.

வெளிநாடுகளில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமும் இது தொடர்பான மதிப்பீடு ஏதும் இல்லை. கருப்புப் பணத்தின் அளவு குறித்து அவரவரும் சொந்தமாக ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளனர். அந்த மதிப்பீடுகள் குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் விரைவில் எடுக்கப்படும். கல்வி உதவித்தொகை: நாட்டில் உள்ள சிறப்புத் திறன் வாய்ந்த குழந்தைகள் 1000 பேருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக கேந்திரீய வித்யாலயப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். நாட்டில் நல்ல தொடக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை பிரபலங்களும், பொதுமக்களும் பாராட்டுக்குரியவர்கள். இது தேசிய அளவிலான பிரசார இயக்கமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்தார்களா? இதற்கு மக்களின் விழிப்புணர்ச்சியே காரணம் என்றார் மோடி.

"பொது மக்கள் தகவல் கொடுக்கலாம்'

கருப்புப் பண பதுக்கல் தொடர்பாக உறுதியானத் தகவல்கள் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, அந்தக் குழுவின் துணைத் தலைவர் அரிஜித் பசாயத், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கருப்புப் பண பதுக்கல் தொடர்பான ரகசியத் தகவல்களை பொதுமக்கள் அளிக்கும் வகையில் புதிய வழிமுறைகளை நீதிபதி எம்.பி.ஷா விரைவில் அறிவிக்கவுள்ளார். கருப்புப் பணம் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் தரும் தகவல்கள், சட்ட விரோதமாகவும், வரி ஏய்ப்பு மூலமாகவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கண்டறிவதற்கு உதவும்.

எனினும், அனுப்பப்படும் தகவல்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.
கருப்புப் பணம் வைத்திருப்பவரின் பெயர், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை அனுப்பி வைத்தால், அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும். கருப்புப் பணத்தை மீட்பதில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் பொதுமக்களும் இணைந்து பங்காற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரிஜித் பசாயத் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media