BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 November 2014

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் : நவ. 28-இல் பிரான்ஸ் முடிவு



பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் இம்மாதம் 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாகத் தெரிகிறது.முன்னதாக, இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தருணம் வந்துள்ளது.எனினும், எப்போது, எப்படி அந்த முடிவை எடுப்பது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.பாலஸ்தீனப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையைப் போக்கும் விதமாக, அந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்று லாரண்ட் ஃபேபியஸ் தெரிவித்திருந்தார்.பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கி பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த மாதம் 13-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.அதனைத் தொடர்ந்து சுவீடன் நாடாளுமன்றமும் பாலஸ்தீனத்தை தனி நாடாக 30-ஆம் தேதி அங்கீகரித்தது.

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் : ஆசியான் நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ள "ஆசியான்' அமைப்பின் உச்சிமாநாடு மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் புதன்கிழமை நடைபெற்றது. தற்போது மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சிமாநாட்டில் ஹிந்தி மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவும், ஆசியானும் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்க முடியும்.
இந்த அமைப்புடனான எங்கள் நாட்டின் உறவுகளுக்கு நான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தியாவில் புதிய பொருளாதாரப் பாதையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில் இந்தப் புதிய சூழலுக்கு (முதலீடு செய்வதற்கு) உங்களை வரவேற்கிறோம். நமது உறவில் நெருடலான எந்த அம்சமும் இல்லை. உலகில் ஊக்கமளிக்கக் கூடிய வாய்ப்புகளையும் சவால்களையும் நாம் ஒரேமாதிரியாகக் காண்கிறோம். இந்தியா-ஆசியான் உறவுகளுக்கான வாய்ப்புகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு அதிகமாக உள்ளன.இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், ஆசியானும் ஆர்வமாக உள்ளன. எனது அரசு பதவிக்கு வந்து 6 மாதங்களாகிறது. கீழை நாடுகளுடனான எங்கள் தோழமை அதிகரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்துக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பாகும்.

ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளில் ஒவ்வொன்றுடனும் இந்தியா நெருங்கிய இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. அதே முக்கியத்துவத்துடன் ஆசியானுடனான உறவுகளை இந்தியா கருதுகிறது.இன்றைய காலகட்டத்தில் நேரடித் தொடர்பை விட தகவல் தொடர்புக்கே அதிக அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் மோடி.ஆசியான் அமைப்பின் மொத்த வர்த்தகத்தில் வெறும் 3 சதவீதப் பங்கை மட்டுமே அந்த அமைப்பின் நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ளது. தற்போது, இந்தியா-ஆசியான் நாடுகளிடையிலான வர்த்தகத்தின் அளவு இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. இதை அடுத்த ஆண்டுக்குள் (2015) சுமார் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிக்க இரு தரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

சீனாவுக்கு மறைமுக அறிவுரை :

ஆசியான் உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றியபோது, அனைத்து நாடுகளுக்கும் கடல்சார் விவகாரங்களில் உலகளாவிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்று வலியுறுத்தினார். அவர் எந்த நாட்டின் பெயரையும் அப்போது குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும், சீனா தனது அண்டை நாடுகளான ஜப்பான், வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ளதால் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவுக்கு அவர் மறைமுகமாக அறிவுரை கூறியதாகவே இந்தக் கருத்து அமைந்துள்ளது.

சீன ஊடுருவல் தீவிரமான பிரச்னை அல்ல : பாரிக்கர்

அருணாசலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது தீவிரமான பிரச்னை அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவர் முதன் முறையாக தன் சொந்த மாநிலமான கோவாவுக்கு வந்தார். தலைநகர் பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீன ஊடுருவல் என்பது ஒரு தீவிரமான பிரச்னை அல்ல. அது ஊடகங்களுக்குதான் தீவிரமான பிரச்னை. சீனாவின் ஊடுருவல்கள் என்பவை சிறிய விஷயமாகும். அதை ராணுவத் தளபதி அல்லது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நமது ராணுவ கமாண்டர் திறம்பட சமாளிக்கின்றனர். கற்பனையான எல்லைக்கோட்டையொட்டி ஏராளமான நிலப்பரப்புகள் உள்ளன. அவற்றை படைவீரர்கள் அடிக்கடி கடந்து விடுகின்றனர். நமது நிலப்பரப்புக்குள் சீனத் தரப்பு முகாம்களை அமைத்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

படைவீரர்கள் எல்லை மீறி வரும் அனைத்து சம்பவங்களையும் பெரிய அளவிலான ஊடுருவல் என்று அழைப்பது சரியல்ல. அவை எல்லை மீறல்கள் மட்டுமே என்றார் பாரிக்கர்.

பெட்ரோல், டீசல் விலை மேலும் ரூ. 1 குறைகிறது

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, மேலும் ரூ. 1 இந்த வார இறுதியில் குறைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விலை நிலவரத்தின்படி, உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை மாற்றியமைக்கவுள்ளன. தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், அதன் எதிரொலியாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்படலாம் என எண்ணெய் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு குறைக்கப்பட்டால், கடந்த மாதம் (அக்டோபர்) டீசல் விலைக் கட்டுப்பாட்டு முறை அகற்றப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மூன்றாவது டீசல் விலைக் குறைப்பாக இது இருக்கும். அதேபோல், பெட்ரோலைப் பொருத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இது 7-ஆவது விலைக் குறைப்பாக இருக்கும். இதற்கு முன்னர், கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.41-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25-ம் குறைக்கப்பட்டன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media