திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைப் பற்றி கருணாநிதி அளித்த பேட்டியில், அழகிரி தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியிருந்தார் என தெரிவித்தார். இந்நிலையில் தான், ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க கோரி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்த தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் பாதுகாப்புக் கோரி எழுதப்பட்ட கடிதம் கடந்த டிசம்பர் மாதமே எழுதப்பட்டது என்று தெரிவித்தார். அழகிரிக்கு பயந்து கொண்டு, ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தி தவறு என்பதை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.