BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 4 April 2014

மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை

மும்பை சக்தி மில்ஸ் வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற புகைப்பட பெண் நிருபர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் ஜாதவ், (19), காசி்ம் பெங்காலி (21), முகம்மது சலீம் அன்சாரி (28), ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 376(இ) பிரிவின் கீழ் (திரும்பவும் பலாத்கார குற்றம் புரிதல்) குற்றம் இழைத்துள்ளவர்கள் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி அறிவித்தார்.

சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்த மூவரையும் குற்றவாளிகள் என ஏற்கெனவே அறிவித்து அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி இன்று தீர்ப்பளித்தார்.

"சிலர் பிரதமர் பதவியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர்."-கேஜ்ரிவால்

தெற்கு டெல்லிக்கு உட்பட்ட தக்‌ஷினாபுரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கேஜ்ரிவால் அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் இருந்து பாய்ந்த மர்ம நபர், கேஜ்ரிவால் முதுகில் கடுமையாக தாக்கினார். தொடர்ந்து அவரை கண்ணத்தில் தாக்கவும் முற்பட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர், அடையாளம் தெரியாத அந்த நபரை, போலீஸிடம் ஒப்படைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட கேஜ்ரிவால், "சிலர் பிரதமர் பதவியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர். அவர்கள் விரும்புவதை செய்யட்டும். ஆனால் எங்கள் மதம் அஹிம்சையை போதிக்கிறது. கைகள் ஓங்கினால் இந்த பேரியக்கம் முடிவுக்கு வந்துவிடும். எனவே, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" என்று கூறினார்.

ஏர் இந்தியாவின் குறிப்பிட்ட விமானங்களில் பயணக் கட்டணம் குறைப்பு

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை குறிப்பிட்ட விமானங்களின் பயணம் செய்ய கட்டணம் ரூ.1,599 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை -மும்பை மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண்கள் AI-569/343), சென்னை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் செல்லும் விமானம் ( AI-967), சென்னை-கோவா மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-975), சென்னை-கொச்சி மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-509), சென்னை- ஐதராபாத் மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-545/981), சென்னை-ஆமதாபாத் மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-981), சென்னை-டெல்லி மார்க் கத்தில் செல்லும் விமானம் (எண் AI-440/430) உட்பட 40 மார்க்கங்களில் செல்லும் 108 விமானங்களுக்கு இச்சலுகை கிடைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருட்டில் பதுங்கியிருந்து அன்புமணி மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்-ராமதாஸ்

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தாக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது நடத்தப்பட்டத் தாக்குதலை சாதாரணமான ஒன்றாக கருத முடியாது. அவரை படுகொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டே இக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சாலையில் வேகத்தடை அமைந்துள்ள பகுதியில், மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் ஊர்தி குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில், சாலையோர விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் பதுங்கியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட வன்முறை கும்பல் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சதிகாரர்களின் திட்டப்படி எல்லாமே நடந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாத மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் சாதாரண சாலை மறியல் செய்தால்கூட அவர்களை கொத்துக்கொத்தாக கைது செய்யும் காவல்துறையினர், இதற்கு காரணமான சமூகவிரோதிகளை கைது செய்து, அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்களை சீர்குலைக்க வேண்டும்; மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் உயிரைப் பறிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இத்தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் இதற்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டும்; எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்-மோடி

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. கூட்டத்தில் அவர் பேசியதாவது:

 "தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விபரத்தின்படி காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் வன் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆனால் இந்த பட்டியலில் ஒரே ஒரு பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலம் இடம் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளம் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அப்படியிருக்க இந்த தேசத்தின் பெண்கள் பாதுகாப்பு எப்படி அக்கட்சி உறுதி செய்யும்?

பெண்கள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. நிர்பயா நிதி என பெயரிடப்பட்ட இந்த நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட இதுவரை செலவு செய்யப்படவில்லை. இந்த நிதி என்னவாயிற்று?

இவ்வாறு பேசிய மோடி, டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும், மனைவியைக் கொன்று தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கில் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷில் சர்மாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையும் அவர் பேசும் போது சுட்டிக்காட்டினார்.

ராகுலுக்கு அமேதி வசிப்பிடச் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்

காங்கிரஸ் துணைத் தலைவரும் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமேதி வசிப்பிடச் சான்றிதழ் விநியோகிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளாட்சி நிர்வாகம் நிராகரித்தது. இதற்கான காரணங்கள் என்ன என்று  மாவட்ட ஆட்சியர் ஜகத்ராஜ் திரிபாதி கூறியதாவது:

இந்த மனுவை ராகுல் காந்தியே தனது கையொப்பமிட்டு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த மனுவில் அவரது கையொப்பமும் இல்லை. ராஜேந்திர சிங் என்பவர்தான் இந்த மனுவை கொடுத்திருக்கிறார், இது சட்ட மீறலாகும்.
மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய பிற ஆவணங்களும் இதில் இல்லை. ராகுல் காந்தி இந்த சான்று கோரி விண்ணப்பிப்பதாக இருந்தால் அவரே நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லை யெனில் மனுவில் கையொப்பமிட்டு, அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனிடையே இருப்பிடச்சான்று கோரி ராகுல் காந்தி மனு செய்யவில்லை என்றும் இது ஏமாற்று வேலை என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் இன்று மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து , பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும்.

கருணாநிதி அளவுக்கு ஜெயாவிடம் அடக்கமும் கிடையாது, கண்ணியமும் கிடையாது-ப.சிதம்பரம்

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.க.வை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிடம் அடக்கமும் கிடையாது, கண்ணியமும் கிடையாது. 20 நாள்களுக்கு முன்பு வரை அம்மா தான் பிரதமர் என்று அக்கட்சியினர் முழங்கினர். தற்போது அம்மாவே பிரதமர் என பேசவில்லை என்றவுடன், அதிமுகவினர் சும்மா இருக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் 12-வது ஆட்டக்காரர் ஒருவர் இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் செய்யக் கூடாது. ஆனால் ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம்பட்டாலோ வெளியேற முற்பட்டாலோ, 12-வது ஆட்டக்காரர் சென்று பீல்டு செய்யலாம். அதுபோன்று பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ 12-வது ஆட்டக்காரராக ஜெயலலிதா உள்ளார். பாஜகவின் ‘பி’ டீம் ஆக அவர் ரகசியமாகச் செயல்படுகிறார். இதனால்தான், பாஜக தலைவர்களை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மருகுகிறார்கள். இதனைத் தெளிவுபடுத்தாதவரை நான் ‘பி’ டீம் என்று ஜெயலலிதாவை குற்றஞ்சாட்டுவேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெ, சசிகலாவின் சில சொத்துகளை முடக்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது- உயர் நீதிமன்றம்


தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சில சொத்துகளை முடக்குமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2000-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, ஜெ.இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், சிறப்பு நீதிமன்ற உத்தரவு செல்லாது என கூறி, அதனை ரத்து செய்து புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை முடக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் தரப்பு கருத்துகளையும் கேட்டு, அதன் பிறகே சொத்துகள் முடக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். இவ்வாறு உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் வழக்கில் சேர்த்து, அவர்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின் சட்டப்படி இந்த வழக்கில் உரிய உத்தரவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ராஜாவுடன் நேரடி விவாதத்துக்கு தயாரா?- ஜெ.விற்கு கருணாநிதி சவால்

2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ராஜாவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெயலலிதா வருவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக என்று ஜெயலலிதா விமர்சனம் செய்கிறார். பல வழக்குகளில், பல நீதிமன்றங்களில் குற்றவாளி என்று கூறப்பட்டு, பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் மன்னிப்பும் வழங்கப்பட்டவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல்வேறு காரணங்களால், கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றிக் கவலைப்படாமல் கோவை கூட்டத்தில் ராஜாவைப் பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார். இதற்கு ராஜா அளித்த பதிலில், ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது, இது குறித்து, ஜெயலலிதா என்னுடன் நேரடியாக விவாதிக்கத் தயாரா என கேட்டுள்ளார். எனவே முதலமைச்சர் தனது பேச்சுக்கு முழு விளக்கம் பெற, பொதுமக்கள் முன்னிலையில் ராஜாவுடன் ஒரு முறை நேரடியாக விவாதிக்க முன்வரலாம் அல்லவா?

உங்கள் மனைவியும், மகளும் இயக்குநர்களாக இருந்த குடும்பத் தொலைக்காட்சியின் கணக்கில், 214 கோடி ரூபாய் பணம் யாருடைய கணக்கில் வந்தது என்றும், எதற்காகக் கொடுத்தார்கள் என்றும், இதை விளக்க கருணாநிதி தயாரா என்று கேட்டிருக்கிறார். இதுகுறித்து, ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் சரத்குமார் விரிவாகப் பதில் கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை யில் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடித்திருக்கும் நிலையில், அதிலிருந்து தப்பிக்கவும், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மீண்டும் ஜெயலலிதா முயற்சித்திருக்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media