BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 November 2014

உணவே மருந்து : முக்கனிகளில் முக்கியமான கனி - மாம்பழம்


என்ன சத்து : வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வைட்டமின் சியும் உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது. மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ளது.

என்ன பலன்கள் :
வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது பலர் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். இப்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. 

சருமத்துக்கு மிகவும் நல்லது : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்துக்கு மிகவும் நல்லது. வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும்

சுவையான பழத்தைப் பற்றிய சுவையான தகவல் : இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி இப்பொது உலகெங்கும் மாம்பழங்கள் 1000 வகைகள் உள்ளன. இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

தவறான புரிதல்  : மாம்பழம் சூடு என்று சிலர் சொல்வார்கள். காரணம் மாம்பழத்தை சாப்பிடுகையில் அதன் சுவையில் ஈர்க்கப்பட்டு அளவு தெரியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம். அதனால் தான் பிரச்னை. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் விஷம். எனவே இந்த சீசனில் அளவோடு மாம்பழத்தை சுவைத்து அதன் முழுப் பலன்களையும் பெறலாம். (அப்பறம் என்ன, உடனே சாப்பிடுங்க )

தென் சீனக் கடல் பகுதியில் தீவு உருவாக்கி வருகிறது சீனா

தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி போல் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை கூறியது: தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.அங்கு விமான தளம் அமைக்கும் விதத்தில் தீவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கடற்பகுதியில் பல்வேறு இடங்களில் மணலை நிரப்பி, நிலப் பரப்பை சீனா விஸ்தரித்து வருகிறது. எனினும், இந்தக் குறிப்பிட்ட தீவில் நடைபெறும் பணி மூலம், விமான தளம் அமைக்கும் அளவுக்கான புதிய நிலப் பரப்பை அந்நாடு உருவாக்குகிறது.

இதைத் தவிர, பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல்களும் போர் கப்பல்களும் நிறுத்தும் அளவுள்ள ஒரு துறைமுகம் அந்தத் தீவின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். கடந்த மூன்று மாதங்களாக, மணல் வாரும் பெரும் இயந்திரங்கள் மூலம் மணல் நிரப்பி ஏறத்தாழ 3 கி.மீ. நீளம், 200-300 மீட்டர் அகலத்துக்கு ஒரு தீவை சீனா உருவாக்கி வருகிறது என்று ஜேன்ஸ் டிஃபன்ஸ் என்கிற பாதுகாப்புத் துறை விவகாரங்களுக்கான பிரபல ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்தில் ஃபயரி கிராஸ் என்ற பகுதியில், 3 தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது. நான்காவதாக உருவாக்கி வரும் தீவு தொடர்பான பணிகள் கடந்த 12 முதல் 18 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.இதன் நிலப் பரப்பு முன்னர் உருவாக்கியதைவிட மிகப் பெரியதாகும் என அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. வியத்நாமுக்கு கிழக்கே, தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்துக்கு, சீனா, வியத்நாம், தைவான், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை சொந்தம் கொண்டாடி வருகின்றன.

காவிரியில் தடுப்பணைகள் கட்ட எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் மறியல், கடையடைப்பு

காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் 2 தடுப்பணைகள் கட்டும் அந்த மாநில அரசின் முடிவை கண்டித்து, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சனிக்கிழமை சாலை, ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட 3,148 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி, மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் வந்த தொண்டர்களும் போலீஸாரின் காவலை மீறி காலை 10.30 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்து திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்தனர்.

இதையடுத்து, வைகோ, நல்லதுரை, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட 750 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட 665 பேரை போலீஸார் கைது செய்தனர். மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.திருவாரூர்: திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மன்னார்குடியில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்த அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகி ப.ஞானசேகரன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர 3 இடங்களில் ஆர்ப்பாட்டம், 35 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்டதாக 192 பேரும், சாலை மறியலில் ஈடுபட்டதாக 1,187 பேர் என மொத்தம் 1,379 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை: நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் செய்த 225 பேர், சாலை மறியலில் ஈடுபட்ட 129 பேர் என மொத்தம் 354 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.நாகை புதிய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சேரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.கீழ்வேளூரில், திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலை மறிக்க முயற்சித்த காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் தனபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையில் ரயில் மறியலுக்குச் சென்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆறுபாதி கல்யாணம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வணிகர் சங்கப் பேரவை நாகை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் த. வெள்ளையன் பங்கேற்றார்.

காவிரி விவகாரத்தை அரசியலாக்க முயற்சி : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முற்படாமல், போராட்டம் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டினார்.பாஜக சார்பில் இந்தியா முழுவதும் உறுப்பினர் சேர்க்கைக்காகக் கட்டணமில்லா தொலைபேசி எண் "18002662020' மூலம் "மிஸ்டு கால்' செய்யும் திட்டம் தொடர்பான கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழிசை சௌந்தரராஜன் உள்பட அனைத்து மாநில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் "மிஸ்டு கால்' செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக செயல்படுத்துவது குறித்து மாநிலத் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தை ஓட்டு வங்கிக்காகவோ, சுய லாபத்துக்காகவோ பாஜக பயன்படுத்தாது. பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் தொடர்ச்சியான அக்கறை, தலையீட்டால்தான் ஐந்து பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கை சிறையில் வேறு வழக்குகளின் கீழ் அடைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பாஜக செயல்படும்' என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.இதையடுத்து, பாஜக கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவர்களில் ஒருவரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் காவிரி நதி நீர் விவகாரத்துக்காக போராடி வரும் நிலையில், தமிழக பாஜக மட்டும் தொடர்ந்து மெüனம் காத்து வருவது குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு, "காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. கர்நாடக அரசே தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முற்படாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் போராட்டம் நடத்தி அரசியலாக்க முயற்சிக்கின்றனர். கூட்டணிக் கட்சியில் இருப்பதாக அவர்கள் கருதுவார்களேயானால், நேரடியாகச் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரை அவர்கள் அணுகி கோரிக்கை வைக்கலாம்' என்றார் தமிழிசை செüந்தரராஜன்.

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் : 67 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடர், 22 அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.முந்தைய கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது புதிய மசோதாக்கள், 15-ஆவது மக்களவையில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது) நிலுவையில் உள்ள 47 மசோதாக்கள், அதற்கு முந்தைய மக்களவையில் நிலுவையில் உள்ள 18 மசோதாக்கள் உள்பட மொத்தம் 67 மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நிலுவை மசோதாக்கள்: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு கடந்த மே மாதம் அமைந்த பிறகு, கடந்த ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிகழாண்டுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு முன்னுரிமை கொடுத்தது.இதனால், மத்திய சுகாதாரத் துறை தொடர்புடைய மன நல பராமரிப்பு சட்டத் திருத்த மசோதா; மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா; ஹெச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சட்டத் திருத்த மசோதா; மத்திய தொழிலாளர் நலத் துறையுடன் தொடர்புடைய பயிற்சியாளர்கள் சட்டத் திருத்த மசோதா; தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா; குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் விதிகளை முறைப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா; கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மட்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதேபோல, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா, சிறார் நீதி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, தீர்ப்பாயங்கள் சேவை மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் 49 சதவீத அளவுக்கு நேரடி முதலீடு செய்ய வகை செய்யும் காப்பீட்டுச் சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், அந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் (செலக்ட் கமிட்டி) ஆய்வுக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பி வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரிச் சுரங்கம் (சிறப்பு பிரிவு) அவசரச் சட்டத்தையும், ஜவுளி நிறுவனங்களை தேசியமயமாக்க வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. அவற்றை முறைப்படி இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.புதிய மசோதாக்கள்: இதே போல, உயிரி மருத்துவ ஆராய்ச்சி; திட்டமிடல், கட்டடக்கலை கல்லூரி உள்ளிட்டவை தொடர்பான சில முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த தேர்வெழுதுவோர் பிரச்னையாக்கினர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வெழுதுவோரின் வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே, வரும் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று தெரிகிறது.

முந்தைய கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. அண்மையில் நடந்து முடிந்த மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டணி பலம் குறைந்த நிலையில், வரும் கூட்டத்தொடரை காங்கிரஸ் எதிர்கொள்ளவுள்ளது.முதலாம் நாள் அலுவல்: பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கந்தமால் தொகுதி உறுப்பினர் ஹேமேந்திர சந்திர சிங் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் கிருஷ்ண தாகூர் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதியும் காலமானார்கள். இதையடுத்து, அவை வழக்கத்தின்படி மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு முதல் நாள் அலுவல் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படும் என்று மக்களவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட்டை நிறைவேற்ற முன்னுரிமை அளித்த நிகழ்வாக இருந்தது. ஆனால், எதிர்வரும் கூட்டத்தொடர்தான் உண்மையிலேயே மோடி அரசின் செயல்திறனுக்கு சவால் விடுக்கும் நிகழ்வாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மாநிலப் பிரச்னைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டுகோள் : வரும் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தில்லியில் சனிக்கிழமை இரவு கூட்டினார். இதில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மக்களவை அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால், லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநில நலன்கள் சார்ந்து உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரச்னைகளை அவையில் எழுப்ப நேரம் ஒதுக்க வேண்டும் என்று சுமித்ரா மகாஜனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கேட்டுக் கொண்டனர். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media