
"தில்லியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்தலாம்' என்று குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவு செய்துள்ளார். "தில்லியில் ஆட்சி அமைக்க அதிக இடங்கள் பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜகவும் அதற்கு அடுத்தபடியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியும் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று செய்தியாளர்களிடம் நஜீப் ஜங் திங்கள்கிழமை கூறினார். தில்லியில் "ஆம் ஆத்மி' அரசு கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்ததும் சட்டப்பேரவையை கலைக்காமல் முடக்கி வைத்து, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க நஜீப் ஜங் தெரிவித்த யோசனையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, கடைசி வாய்ப்பாக தில்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க நஜீப் ஜங் திட்டமிட்டார். இதன்படி சட்டப்பேரவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் திங்கள்கிழமை அவர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதில், முதலாவதாக பங்கேற்ற தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், சட்டப்பேரவை பாஜக தலைவர் ஜெகதீஷ் முகி ஆகியோர், "தில்லியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் பாஜகவுக்கு இல்லை. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளிடம் பேசி ஆதரவைப் பெறுவதற்கான சூழல் எழவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எங்கள் கட்சி ஆராயவில்லை' என்று தெரிவித்தனர்.இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மணீஷ் சிúஸôடியா ஆகியோரும் நஜீப் ஜங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். "தில்லியில் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடக்கம் முதல் ஆம் ஆத்மி கட்சி வலியறுத்தி வருகிறது. இதில், தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்' என்று அவர்கள் நஜீப் ஜங்கிடம் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் மூன்றாவது நிலையில் உள்ள கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹாரூண் யூசுஃப், நஜீப் ஜங்கை சந்தித்து "ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க காங்கிரஸ் விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், "தில்லியில் தற்போதைய உறுப்பினர்கள் பலத்தை வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க யாரும் முன்வரவில்லை. இதனால், தில்லி பேரவைக்கு தேர்தல் நடத்துவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்' என்றார். இதற்கிடையே, கிருஷ்ணாநகர், மாளவியாநகர், துக்ளகாபாத் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 5 கடைசி நாள், வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 7, வேட்பு மனுவை திரும்பப் பெற நவம்பர் 10 கடைசி நாள் என்றும் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைக்கு முழுமையாக தேர்தல் நடத்த துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்தால், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது.