Friday, 14 March 2014
ஆம் ஆத்மி உருவாகி ஒரே ஒரு வருடம்தான் ஆகிறது. அது ஒரு துடிப்பான குழந்தை - ஞாநி
மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
'இந்தியாவில் காங்கிரஸ், பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், தற்காலிக அரசியல் சிக்கல்களைச் சந்திக்கும் போக்கால், அது நடக்காமலேயே போய்விட்டது. தவிர, ஒற்றைச் சிந்தாந்த அடிப்படையில் இயங்கி, மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
நமக்கு காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயணகுரு, பாரதி, நேரு, பகத் சிங் என்று பலரிடம் இருந்தும் எடுத்துக்கொள்ளும் நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடம் இருந்து இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும், ஒருவரிடம் இருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்ற பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை.
எனவே, ஒற்றைச் சிந்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
டெல்லியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்க முடியும் என்று மக்கள் நம்பிக்கையைத் தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மி மீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.
ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் பற்றி கடு விமர்சனங்களை பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதன் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பாஜக கடும் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவை ஆம் ஆத்மி வளர வேண்டும் என்ற அக்கறையினால் சொல்பவை அது அழிய வேண்டும் என்ற ஆசையில் முன்வைப்போருடையவை அல்ல.
காங்கிரஸ் கட்சிக்கு வயது 129. பிஜேபிக்கு ஆர்.எஸ்.எஸ். தோன்றிய நாளில் இருந்து கணக்கிட்டால் 89 வயது. திராவிடக் கட்சிகளின் வயதை நீதிக் கட்சியில் இருந்து கணக்கிட்டால், வயது 97. ஆம் ஆத்மி உருவாகி ஒரே ஒரு வருடம்தான் ஆகிறது. துடிப்பான குழந்தை இது. நல்ல போஷாக்கான உணவு தரும் பெற்றோரும், நல்ல கல்வி தரும ஆசிரியர்களும்தான் குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்க முடியும். அப்படிப்பட்ட அக்கறையுள்ள பெற்றோர்களாக, ஆசிரியர்களாக நாடு முழுவதும் பல துறை அனுபவம் உடையவர்களும், அங்கே இன்று இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இந்தக் குழந்தை எங்கே உருப்படப் போகுது என்று கரித்துக் கொட்டும் எதிர்வீட்டுக்காரரின் அசல் பிரச்சினை, அவர் குழந்தைகள் உருப்படாமல் போய்விட்டதுதான்.
1967, 1977, 1987 என்று தேர்தல் அரசியலில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றிய வரிசையில், இது அடுத்த மாற்றம் தென்படும் காலம். முந்தைய மாற்றங்கள் எல்லாம் வீணானது போல இதுவும் ஆகிவிடக் கூடாது என்ற கவலையில், இதற்கான என் பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும் உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான் கட்சி, தேர்தல் அரசியலில் இறங்கியிருக்கிறேன்.
இவ்வாறு ஞாநி கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் இருப்பது 2 இலைகள், சிறிய பஸ்களில் 4 இலைகள், தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ஜெ. வழக்கு
வரவிருக்கும் தேர்தலை ஒட்டி, சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
"அரசு சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளது இரட்டை இலை சின்னமே அல்ல. இரட்டை இலை சின்னத்தில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். ஆனால் சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் படங்களில் நான்கு இலைகள் உள்ளன. இரட்டை இலை சின்னத்துக்கும், அரசு பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படத்துக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. தேர்தல் ஆணையம் இலைகளை மறைக்க உத்தரவிடும் முன்னர் எங்கள் கட்சியின் கருத்தை கேட்டறியவில்லை. உயர் நீதிமன்றத்தில் நேற்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தபோதுதான் அது பற்றி எங்களுக்கு தெரிய வநத்து. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமையான இலைகள்தான் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருவதற்கு முன்பாகவே சிறிய பஸ்களின் இயக்கம் தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்ட விரோதமானது ஆகும்.
ஆகவே, சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படங்களை மறைக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த தடை விதிப்பதோடு, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்", என்று ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை தொடக்க விழாவில், ரஹ்மான் மற்றும் ஏகான் கலை நிகழ்ச்சி
வருகிற 16ம் தேதி வங்க தேசத்தில் பங்காபந்து மைதானத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷைக்கா ஹசீனா, அவரை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் பங்கு பெறுவதற்கு இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷைக்கா ஹசீனா, அவரை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் பங்கு பெறுவதற்கு இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.
தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் 17 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் போட்டி
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகத்தில் 17 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஆகிய 18 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, திருவள்ளூர், தருமபுரி, புதுச்சேரி, கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தூளை, டீத்தூளுடன் கலந்து கடத்திய வாலிபர் கைது
இலங்கையில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, தங்கம் கடத்தியதற்காக பிடிப்பட்டார். அவர் பெயர் ரவிக்குமார், வயது 34, சென்னை பாலவாக்கம் கோவிந்த் நகரைச் சேர்ந்தவர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது 6 டீத் தூள் பாக்கெட்கள் இருந்தன. அவற்றை மெட்டல் டிடெக்டர் கருவியில் வைத்தபோது அலாரம் அடித்தது.
உடனே அதிகாரிகள் ஒரு டீத்தூள் பாக்கெட்டை திறந்து தண்ணீரில் கொட்டினர். அப்போது டீத்தூளுடன் கலக்கப்பட்டிருந்த தங்க துகள்கள் மட்டும் தனியாக பிரிந்து வந்தது. 6 பாக்கெட்களில் மொத்தம் ஒன்றரை கிலோ தங்கப்பொடி இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம்.
இதையடுத்து, ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"மோடியை பற்றி பொய்களை கூறி, புகழ்ச்சியா எழுதி பாருங்க.. ஜெயில் தான்" என ஊடகங்களை எச்சரிக்கும் கெஜ்ரிவால்
நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டன என கூறினார். "குஜராத்தில் ராம ராஜ்யம் நடப்பதாகவும் ஊழல் அழிந்துவிட்டதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி எந்த தொலைக்காட்சியிலும் செய்தி வரவில்லை. மாறாக மோடி புகழ் பாடுவதற்கு காரணம், நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதே ஆகும்" என கெஜ்ரிவால் ஊடகங்களை குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
மேலும் அவர், ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும், மோடி ஆதரவு ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர். மோடியை முன்னிலைப்படுத்துவதற்கு பாஜகவிடம் இருந்து டிவி சேனல்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் பேசியிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை செய்தியாளர்களிடம் படித்து விட்டு, வெளியே வந்தபோது, என் உள்ளம் என்னிடம் இல்லை-கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி, நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை, செய்தியாளர்களிடம் படித்து விட்டு, வெளியே வந்தபோது, என் உள்ளம் என்னிடம் இல்லை. காரணம் என்ன என்பதை, என்னை முழுவதும் அறிந்த நீ நன்றாகவே உணர்வாய். இந்த முறை தன்னலம் பாராமல் கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த, மூத்த சில உடன்பிறப்புகளின் விருப்பங் களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
அவர்கள் என்னிடம் கேட்ட போது, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று என்னால் கூறப்பட்ட போதிலும், கூட்டணி உணர்வையும், அவர்களுடைய உள்ளக் கிடக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டேன்.
தம்பி துரைமுருகன் 24 மணி நேரமும் என்னுடன் இருப்பவர். வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தவர். அவருடைய மகனுக்காக வேலூர் தொகுதி வேண்டுமென்று, விருப்பம் தெரிவித்தபோது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. ஆனால், நம்முடன் பல ஆண்டு காலமாகத் தோழமையிலுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதியை, அவர்கள் கேட்ட போது எங்களால் மறுக்க முடிய வில்லை.
மற்றொரு தொகுதி, என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி. அங்கு விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், டி.ஆர். பாலு. பழனிமாணிக்கம், அழகு திருநாவுக்கரசு முக்கியமானவர்கள்.
துரைமுருகன் ஆகட்டும், டி.ஆர்.பாலு ஆகட்டும், பழனிமாணிக்கம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் எனதருமைத் தம்பிகள், நான் வளர்த்தவர்கள். இதுபோலத்தான், சுப. தங்கவேலன், தன் மகன் சம்பத்துக்கு அனுமதி கோரினார். திருவண்ணாமலையில் கு. பிச்சாண்டி, தன் சகோதரர் கு. கருணாநிதிக்கும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தன் மகன் பைந்தமிழ் பாரிக்கும், திண்டுக்கல் ஐ.பெரியசாமியும், விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை எ.வ.வேலுவும் தங்களின் மகன்கள் போட்டியிடுவதற்குத் தயாராக இருந்த போதிலும், என் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவே இல்லை.
தற்போது நாடாளுமன்ற உறுப் பினர்களாக நன்றாகப் பணியாற்றி வந்த ஒன்பது பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியவில்லை. வேட்பாளர்கள் புதிய முகங்களாக இருக்க வேண்டும், இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்றும் யோசித்தோம். இரவு முழுவதும் தூங்காமல் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்து, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளோம். அவர்களையெல்லாம் வெற்றி வேட்பாளர்களாக ஆக்கிட வேண்டிய கடமையும், உரிமையும் உனக்குள்ளது.
ஒற்றுமை உணர்வோடு, தனிப்பட்ட காழ்ப்பு ணர்வுகளை கை கழுவி விட்டு, இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த முறை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதுதான் முக்கியமானது என்று பணிகளை ஆற்ற வேண்டும். நானோ, பொதுச் செயலாளரோ, ஒவ்வொரு நாளும் தொகுதி தொகுதியாகச் சென்று பிரச்சாரம் செய்ய இயலாவிட்டாலும், உடல்நிலை இடம் கொடுக்கும் வரையில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருவள்ளூரில் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்
பாஜகவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தொகுதிகள் பட்டியல் கிடைத்ததும், தே.மு.தி.க. வேட்பாளர்களை இன்று விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவள்ளூரில் மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கிறார். வரும் 27-ந்தேதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இன்று திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டி (மாலை 3 மணி), வடசென்னை தொகுதி கொளத்தூர் (மாலை 5 மணி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ஆரணி தொகுதி செய்யாறு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த், மாலை 7 மணிக்கு வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் 27-ந்தேதி வரை பல்வேறு பகுதிகளில் முதல் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஆம் ஆத்மியில் இன்று இணையும் ஞாநி, தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டி?
மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இன்று இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
கட்சியில் சேருவது குறித்து தொடக்கத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதிருந்த ஞாநி, தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று இன்னமும் இறுதிசெய்யப்படாவிட்டாலும் ஆ.ராசா, தயாநிதி மாறன் இருவருக்கும் எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில் மட்டும் உறுதியாக இருக்கிறது. ராசா நீலகிரியில் போட்டியிடும் சூழலில், ஞாநி அங்கு போட்டியிடும் வாய்ப்பு குறைவு. ஆகையால், தயாநிதி மாறனை எதிர்த்து அவர் களம் இறக்கப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் அழகிரி, எந்தவித பிரச்சினைகளுமின்றி இனிமையாக பணியாற்றினார்: இளங்கோவன்
நேற்று, மு.க.அழகிரி தனது ஆதரவு எம்.பி.க்களுடன் டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் "எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்." என்று, மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். இதனால் மு.க.அழகிரி வேறு கட்சியில் சேர்ந்து திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அழகிரியின் சந்திப்பு குறித்து, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மு.க.அழகிரி, எந்தவித பிரச்சினைகளுமின்றி இனிமையாக பணியாற்றினார். அவர் பிரதமரை சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமான தாகவே நினைக்கிறேன்.மிகப் பெரிய தேசிய கட்சி காங்கிரஸ் கட்சிக்கு அழகிரியை வைத்துத்தான் திமுகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அழகிரி மட்டுமல்ல யாராக இருந்தாலும், காங்கிரஸின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டு, கட்சியில் சேர விரும்பி னால், அவர்களை விருப்பு, வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்கிறோம்.
Subscribe to:
Posts
(
Atom
)