BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 December 2014

கொலை, வழிப்பறியில் ஈடுபடும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு



மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக குற்றங்களில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லங்களுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் பொதுவான சிறைகளில் அடைக்கப்படாமல் கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுவர். இந்த கூர்நோக்கு இல்லங்கள் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இதில் மதுரை, கோவையில் மட்டும் அரசானது தனியார் அமைப்புடன் சேர்ந்து நடத்துகிறது. மதுரை கூர்நோக்கு இல்லத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகின்றனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு வரும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த ஆண்டில் கூர்நோக்கு இல்லத்துக்கு 260 சிறார்கள் வந்தனர். 2014- அக்டோபர் வரை 568 சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லத்துக்கு வருவோரில் 8 வயது முதல் 17 வயதுக்குள்ளான சிறுவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களிலும் 16 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் கொலை மற்றும் கொள்ளை, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இல்லத்திற்கு வரும் சிறார்களில் சுமார் 35 சதவிகிதம் கொலை, கொலை முயற்சி வழக்கிலும், சுமார் 35 சதவிகிதம் பேர் வழிப்பறி, திருட்டு வழக்கிலும், 30 சதவீதம் பேர் அடிதடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். சிறார் குற்றங்கள் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகவும், மதுரையில் ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரத்தில் அதிகம் என்றும் தெரிவித்தனர். பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் சிறார்கள் அதிகமாக குற்றமிழைப்பதும் தெரியவந்துள்ளது.

சிறார் குற்றங்களைத் தடுக்கவே பள்ளிக் கல்வித்துறையில் நடமாடும் உளவியல் வாகனப் பிரிவும், சாலைகளில் திரியும் சிறார்களை மீட்க காவல்துறையில் சிறார் மீட்புப் பிரிவும் உள்ளது. ஆகவே இவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தி சிறார் குற்றங்களை தடுக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிப்புறங்களில் குற்றங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது வகுப்பறைக்குள்ளேயே குற்றங்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கும் சமூகத்தின் போக்கு கவலையளிப்பதாக உள்ளது என காவல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்

தென் மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்


தமிழகம், புதுவை உள்பட ஆறு மாநிலங்களில் 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்காத நிலையில், மாநிலங்கள் வாரியாக டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்

வலுவான உளவுத் துறை: டிஜிபிக்கள் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்



நாட்டின் பாதுகாப்புக்கு உளவுத் துறை வலுவாக இருப்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற 49-ஆவது காவல் துறை தலைமை இயக்குநர்கள் (டி.ஜி.பி.க்கள்) மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தினார்.

நேதாஜி மாயமானது தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு



நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மாயமானது தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இந்தத் தகவல்களை வெளியிட்டால், அயல்நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மாயமானது தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுபாஷ் அகர்வால் என்பவர் கோரியிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் அண்மையில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: நேதாஜி மாயமானது தொடர்பாக மொத்தம் 41 கோப்புகள் உள்ளன. இவற்றில், 20 கோப்புகள் ரகசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகளில், நேதாஜியின் பிறந்த இடமான ஜானகிநாத் பவனை அப்போதைய ஒடிசா அரசு கையகப்படுத்தியது, நேதாஜியின் மறைவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கும், அவரது மனைவி, மகளுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் ரகசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள 4 கோப்புகளில், நேதாஜியின் அஸ்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக அவரது மனைவி, மகளுடன் நடைபெற்ற கடிதப் போக்குவரத்து, நீதிபதி முகர்ஜி குழுவின் விசாரணை தகவல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கோப்புகளில் உள்ள தகவல்களை வெளியிட்டால், அயல்நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும். எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8(1)ன் படி இந்தத் தகவல்களை வெளியிட முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடந்த நேதாஜியின் 117-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில் பேசுகையில், "நேதாஜி மாயமானது தொடர்பான ஆவணங்கள் அடிப்படையிலான தகவல்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், நேதாஜி மாயமானது குறித்த தகவல்களை பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு வெளியிட மறுப்பது குறிப்பிடத்தக்கது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media