BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 24 February 2014

30 அடி உயரம்- 9000 கிலோ எடை கொண்ட ராட்சத மாம்பழம் மாயமான மர்மம்


ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 9000 கிலோ எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது. சுமார் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. இந்த சம்பவம் மக்களிடயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் ராட்சத கிரேனுடன் அப்பகுதிக்கு வந்த சிலர் அந்த மாம்பழ‌ சிற்பத்தை பீடத்துடன் பெயர்த்து எடுத்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது.

எப்படியாவது மாம்பழத்தை மீட்டு பழைய இடத்திலேயே நிறுத்தி வைப்போம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ள‌னர்.

தலைமைச் செயலகம் முன் விவசாயி தீக்குளிப்பு


அசாம் மாநிலத்தில் பட்டா வழங்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி இன்று தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட, 45 வயதான பிரணாப் போரோ என்ற விவசாயி, மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வலியுறுத்தி, திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  போரோவின் தற்கொலை செய்தியால், மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதுபற்றி அசாம் முதலமைச்சர் தருண் கோகெய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வனத்துறை இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் வாழும் அவர்கள் தங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பதை எப்படி செய்ய முடியும்? இதில் எந்த நியாயமும் இல்லை“ என்றார்.

நிலவைத் தாக்கிய சிறிய கோள், ஒரு அரிதான சம்பவத்தை பார்த்த வானவியல் ஆய்வாளர் சுவாரஸ்ய தகவல்



ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவர், சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தொலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது, வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எட்டு நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிகழ்வை, அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த கணத்தில் தான் ஒரு அரிதான மற்றும் அசாதாரண காட்சியை கண்டதை உணர்ந்ததாக மக்களிடையே அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட அந்த கோள் போன்ற பாறையின் எடை 400 கிலோவாகவும், 2 அடி சுற்றளவும், 1.40 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெல்லை அருகே, கருகிய காருக்குள் எலும்பு கூடாக இருந்த மூவர்



பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமையன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். அப்போது காருக்குள் 3 பேரின் உடல் கருகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின் போது உடல் கருகி இறந்தவர்கள் பிரபல கட்டட காண்ட்ராக்டர் பரிபூரணம், அவரது மனைவி மல்லிகா மற்றும் மகள் சுமதி என்பது தெரியவந்தது. தொழில் ரீதியாக பரிபூரணம் என்கிற கண்ணன், தனது நண்பர்களுக்கு ரூ. 1.75 கோடி பணம் கொடுத்திருந்தாராம். கொடுத்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்ற காரணத்தால்  மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தன் மகள் மற்றும் மனைவியை காரின் பின் இருக்கையில் அமர்த்தி விட்டு, தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த கேஸ் சிலின்டரை திறந்தும், காரில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்து , மனைவி, மகளோடு தானும் இறந்து இருக்கிறார், பரிபூரனம். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் காரில் எலும்பு கூடாக இருந்த அவர்களை பார்த்து கதறி அழுதனர். போலீஸார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அரசுகளை நடத்துவது அம்பானி-கேஜ்ரிவால்

ஹரியாணா மாநிலம் ரோதக் நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், நம் நாட்டு அரசுகளை நடத்துவது ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி என்று கூறினார். 

மேலும் பேசிய அவர் கூறியதாவது:
ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அம்பானி மீது வழக்கு பதிவு செய்தபோது, பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட பலரும் நின்று அதைச் செய்ய முடியாது என கூறினார்கள். அவர்கள் அப்படி கூற காரணம் என்ன‌?

நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானத்தில் உலா வருகிறார்கள். தொடக்க காலத்தில் தேநீர் கடை வைத்திருந்ததாகக் கூறப்படும் மோடிக்கு ஹெலிகாப்டரும் விமானமும் கிடைத்தது எப்படி? இவை முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என பலரும் கூறுகின்றனர்.

மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஐம்பது கோடி செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மோடி தனது இமேஜை உயர்த்த நானூறு கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்தப் பணம் அனைத்தும் முகேஷ் அம்பானி தருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மோடிக்கும் ராகுலுக்கும் முகேஷ் அம்பானியே பணம் செலவு செய்கிறார். அவரது ஒரு சட்டை பையில் மோடியும் மற்றொரு பையில் ராகுலும் உள்ளனர். இந்த நாட்டின் அரசுகளை முகேஷ் அம்பானியே நடத்துகிறார். இவருக்கு தைரியமாக சவால் விட முன்வந்த ஒரே அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி.

மேலும் பொது மக்களை பார்த்து, அவர்களே ஹரியாணாவின் பத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியிடம் நிதி அதிகம் இல்லை என்பதால் துண்டறிக்கைகளை மக்களே நகல் எடுத்து விநியோகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உமா மகேஸ்வரி பலாத்காரம் செய்யப்படவில்லை, தடயங்கள் சேகரிக்க ஆளில்லா விமானம்



சிறுசேரி தொழில்பேட்டை பகுதியில் இருக்கும் புதர் பகுதியில் எளிதில் நுழைய முடியாத காரணத்தால், அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று கண்டறிவதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த போலீசாரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளி களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் கூறுகையில், “பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும், இது கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதும் தெளிவாக தெரியவந்துள்ளது” என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013-ல் மட்டும், 330 பெண்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் பெரும் பாலும் காதல் மற்றும் தகாத உறவு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதே போல் தான், உமா மகேஸ்வரியும் காணாமல் போயிருப்பார் என்று அலட்சியம் காட்டியதாக  கூறி கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பையாவை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியமூர்த்தி சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டார்.

வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த சர்மிளா (38) என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு துணி துவைக்கச் சென்றார். பின்னர், அங்குள்ள ஒரு புதரில் கழுத்து, கை மற்றும் காலில் வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இருதினங்களுக்கு முன்பு வேங்டமங்கலத்தில் ஓய்வுபெற்ற மாநகர பேருந்து ஓட்டுநர் அம்பிகாராஜ் (65) அவரது மனைவி கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்டார். தொடர் கொலை சம்பவங்களால், கேளம்பாக்க பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

டிசிஎஸ் பெண் ஊழியர் கொலை: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்; துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம்



சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக வேலை பார்த்து வந்த உமா மகேஸ்வரி கொலை வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்ட‌ டிஜிபி ராமானுஜம் கூறியதாவது:

 13.2.2014 அன்று இரவு 10 மணி அளவில் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வேலை முடித்து புறப்பட்ட பெண், பின்னர் காணவில்லை. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் புதர்களின் நடுவில் அப்பெண்ணின் சடலம் காயங்களுடன் 22.2.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து பயன்படக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் 044-2250 2500, 044-2250 2510, 98410 59989 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலோ அல்லது அவர்களைப் பிடிக்க உதவும் வகையிலோ உபயோக மான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media