BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 5 June 2014

வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், கோச்சடையான் படத்திற்கு வரி வசூலிக்கப்படுவதற்கு நீதிமன்றம் கண்டனம்


சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையா  ‘கோச்சடையான்’ படத்துக்கு கேளிக்கை வரி வசூல் விவகாரத்தில் நீதிமன்ற‌ அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

கோச்சடையான் படத்துக்கு வணிக வரித்துறை கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12–ந் தேதி உத்தரவிட்டது.
ஆனால் தமிழகம் முழுவதும் கோச்சடையான் படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலித்து உள்ளனர். சில தியேட்டர் உரிமையாளர்கள் நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட கூடுதல் கட்டணமும் வசூலித்து இருக்கிறார்கள். இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதி பதிகள் உத்தரவில் கூறியதாவது:

கோச்சடையான் படத்துக்கு பொது மக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலிக்க கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும் கேளிக்கை வரி வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது தமிழக வணிகவரி துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.

இந்த மனுவுக்கு சரியான பதில் மனுவை வணிக வரிதுறை முதன்மை செயலாளரும், கமிஷனரும் ஒரு வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடையை அடுத்து, சேவல் சண்டைக்கு தடை விதிப்பதற்கு பரிந்துரைக்கும் உயர்நீதிமன்றம்



மதுரை மாவட்டத்தில் கோயில் திருவிழாவின்போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி எஸ்.கண்ணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிப்பது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். அவர்க‌ள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. மனிதர்களின் ஏற்பாட்டில் தான் இரண்டு சேவல்களும் சண்டையிட்டுக் கொள்கின்றன. வீரியத்துடன் சண்டையிட வேண்டும் என்பதற்காகவும், எதிரி சேவலுக்கு காயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவும் சேவல்களுக்கு மதுபானம் கொடுக்கின்றனர். ஒரு சேவல் இன்னொரு சேவலை தாக்குவதை பார்த்து ரசித்து மகிழ் கின்றனர்.

ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்கி காயப்படுத்தி, ரத்தம் சிந்த வைத்து, காயம் பட்ட சேவல் கடைசியில் உயிரி ழப்பதை தாக்கிய சேவலின் வெற்றி யாகவும், அதன் உரிமையாள ரின் வெற்றியாகவும் கொண்டாடு கின்றனர். மனிதத் தன்மை உள்ள யாரும் இத்தகைய குரூர மகிழ்ச்சியை விரும்ப மாட்டார்கள். இதுபோன்ற சண்டைகளைக் காணும் சிறுவர்களும் மற்றவர் களும் மனரீதியாக தவறாக வழிநடத் தப்பட்டு, வன்முறை பாதைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும், பறவை களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற் கான உரிமை உள்ளது. கடந்த 1960-ம் ஆண்டின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் 11(ஏ) பிரிவானது எந்த மிருகத்துக்கும் எவ்வித வதையும் ஏற்படுத்துவதை தடை செய்கிறது.

ஆகவே, எல்லா உயிரினங்களை யும் கருணையுடன் நடத்த வேண்டிய அடிப்படை கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. தேவையின்றி எந்த உயிரினத்தையும் வதை செய்யவோ, காயம் ஏற்படுத்தவோ மனிதர்களில் யாருக்கும் உரிமை இல்லை.

ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் களைக் கருத்தில் கொண்டு, சேவல் சண்டை, பிற விலங்குகள் மற்றும் பறவைகள் சண்டைகள் தடை செய்யப்பட வேண்டும். எனவே, சேவல் சண்டையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தே.ஜ.கூட்டணி, தேமுதிகவுக்கு சாதகமாக அல்லது பாதகமாக ? என அறிய விரும்பும் விஜயகாந்த்


தேமுதிக உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலு வலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

தேமுதிக சார்பில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் விஜயகாந்த் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களின் பணி சிறப்பாக இல்லை என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் கருது கிறார். இதை அவர் மாவட்டச் செயலாளர்களிடமே கூறி, எச்சரித்தார். வரும் காலங்களில் ஆக்கபூர்வமான பணிகளை மேற் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி, தேமுதிகவுக்கு சாதக மாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள கூட்டணியே 2016 சட்டசபைத் தேர்தலிலும் தொடரவும் வாய்ப் புள்ளது. மாவட்ட நிர்வாகங்களை பலப்படுத்தும் வகையில் விரைவில் மாவட்டச் செயலாளர்களின் தனி கூட்டத்தையும் விஜயகாந்த் நடத்தவுள்ளார். " என்று அவர்கள் தெரிவித்தனர்.

அன்றாட வாழ்வில் தனிநபர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் முயற்சி இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க பெருமளவில் உதவும்-மோடி

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக திகழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் வலைப்பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

 'சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக திகழ்வதாலும், இயற்கை வளங்களை முறையாக கையாள்வதாலும் எதிர்கால சந்ததியினருக்கு நம்மால் மகிழ்ச்சியை உறுதி செய்யமுடியும்.

சுற்றுச்சூழல் தினமான இன்று, இந்த பூமியை தூய்மையான, பசுமையான இடமாக மாற்ற மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'நமது கலாச்சாரமே சுற்றுச்சூழலோடு ஒன்றிணைந்து வாழும் வகையில் அமைந்துள்ளது. அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதைப் போற்றி பாதுகாக்க வேண்டும். அன்றாட வாழ்வில் தனிநபர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் முயற்சி இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க பெருமளவில் உதவும்' என்று மோடி கூறியுள்ளார்.

பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

 
ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாண பகுதியில் கல்விச் சேவையில் ஈடுபட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கனில் முகாம்களில் இருக்கும் குழந்தைகளுடன் இருந்த போது கடத்தப்பட்டிருக்கிறார். அவர் கடத்தப்பட்டது அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிரியார் பிரேம்குமார், தமிழகத்திலும் பழங்குடியின மக்கள் நலனுக்காக பணியாற்றி இருக்கிறார். தீவிரவாதிகள் பிடியில் உள்ள அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளது.

எனவே, பாதிரியாரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கும் விவகாரத்தில் பிரதமர் என்ற முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் தலையிட்டால்தான் பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்றத் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார் !!


ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் நேற்று திருப்பதியில் கூடிய தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பைனர்கள் ஒருமனதாக சட்டமன்றத் தலைவராக சந்திரபாபு நாயுடுவை தேர்வு செய்தனர் . இதன்மூலம் அவர் பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல் முதல்வராக ஆக உள்ளார் . வருகிற ஜுன் எட்டாம் தேதி பதவியேற்க உள்ளார் . இந்த விழாவில் தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்ற சந்திரசேகர ராவ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது .

தெலுங்கு தேசம் கட்சி இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 102 சட்டமன்ற தொகுதிகளில் வென்றுள்ளது .

சந்திரபாபு நாயுடு தான் ஒன்றுப்பட்ட ஆந்திராவில் நீண்ட காலமாக முதல்வர் இருக்கையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

MH-370 விமானம் தேடும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஏலம் !!!



மலேசிய விமானமான MH-370 இந்த வருடம் மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனது . இதை தேடும் பணியில் பல நாட்டினர் ஈடுபடட்டனர் . ஆனால் இப்போது தேடும் பணி மந்த நிலையில் செல்கிறது . இதனால் ஆஸ்திரேலிய அரசு தேடும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது . இதனால் பல தேடுவதில் வல்ல தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பி விடுத்துள்ளது . அந்த டெண்டர் அறிக்கையின் படி தேட விரும்பும் நிறுவனத்திடம் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்க வேண்டும் .


இந்த டெண்டரை வாங்கும் நிறுவனம் சுமார் 60,000 சதுர கிமீ தேட வேண்டும் . இதை தேட அவர்களுக்கு 300 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும் . ஒவ்வொரு 25 நாட்களும் 5,000 சதுர கிமீ தேட வேண்டும் . ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் . அடுத்த 24 மணி நேரம் என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதையும் சமர்பிக்க வேண்டும் . இடுவே அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது .

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் ஒருவர் விலகல் !!!!

சமூக சேவகியாக இருந்து அரசியலுக்கு வந்த அஞ்சலி டமானியா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . இவர் நடந்து முடிந்த தேர்தலில் நிதின் கட்காரியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

அவர் எழுதியுள்ள கடிதத்தில் , நான் கனத்த இதயத்துடன் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுகிறேன் . கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . நான் வெளியேறுவதை வைத்து எந்த ஒரு கதையையும் தயவு செய்து உருவாக்க வேண்டாம் என்று எழுதியுள்ளார் .

ஏற்கனவே கட்சியின் முக்கிய தலைவர்களான ஷாஜிய இல்மி மற்றும் அஷுடோஷ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

நட்சத்திர வீரர் ரொனல்டொ உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா ??

இன்னும் ஏழு நாட்களில் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியனோ ரொனல்டொ காயம் காரணமாக கிரிஸ் நாட்டிற்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடவில்லை .

இதனால் அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது . ஆனால் அவரது சக நாட்டு வீரரான நானி கூறுகையில் , ரொனால்டொ விரைவில் குணமாகி உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பார் என்றார் .

பலரும் கால்பந்து உலக கோப்பையை எதிர்பார்த்து இருக்கும் இந்த வேளையில் ரொனல்டொவின் காயம் பலரை அதிர்ச்சியாக்கி உள்ளது .

சேலையூர் காவல்நிலையத்தில், கற்பழிப்புக்கு ஆளான பெண்ணை மிரட்டி குற்றவாளிகளை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்?


சென்னை மாநகர காவல்துறையின் கீழ் செயல்படும் சேலையூர் காவல்நிலையத்தில் திருட்டு முதல் கற்பழிப்பு வரை எல்லாமே கட்ட பஞ்சாய்த்துதான்…
24.5.14ம் தேதி இரவு 10மணி அளவில் சிட்லபாக்கம் ரமணா தெருவில் அதிவேகமாக வந்த காரிலிருந்து 17-18 வயது பெண், அலங்கோலமாக வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டாள்.. அந்த பெண் அப்பா என்ற கதறியபடி வீட்டிற்கு சென்று அப்பா, நாலு பேர் என்னை கற்பழித்துவிட்டனர் என்ற கதறினார். பாவம் தந்தை அந்தோணி மகளுக்கு முதலுதவி செய்துவிட்டு, புகார் மனுவை எழுதிக்கொண்டு சேலையூர் காவல்நிலையம் ஒடினார்..
உண்மையில் சிட்லபாக்கம் ரமணா தெருவுக்கு சிட்லபாக்கம் காவல்நிலையம்தான் வரும். ஆனால் சேலையூர் காவல்நிலையம் அருகில் இருப்பதால் சேலையூர் காவல்நிலையம் வந்தார். என்னய்யா…புகாரா என்ற சேலையூர் காவல்நிலையம் ஆய்வாளர் குணவர்மன்.. கற்பழிப்பு புகாரை படித்துவிட்டு, ஏட்டுவிடம் இதற்கு சி.எஸ்.ஆர் போட்டுவிடு… இந்த ஆளை இங்கேயே உட்காரவை என்று சென்றுவிட்டார்..
இரவு 12.10மணிக்கு வந்த ஆய்வாளர் குணவர்மன்.. என்னடா உன் பொண்ணுதான் நான் பையன்களை தள்ளிக்கிட்டு போய் இருக்கு..சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்கும் என்று மிரட்டினார். மரியாதையா வழக்கு புகாரை வாபஸ் வாங்கி எழுதிக்கொடுத்துவிடு.. இல்லைன்னா உன் பொண்ணு மீது விபச்சார வழக்கு.. உன் மீது மாமா வேலை பார்த்ததாக வழக்கு போட்டு குடும்பத்துடன் சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார்.
பெண்ணின் அப்பா அந்தோணி இல்லை சார். என் பொண்ணு பெங்களூரில் பாட்டி விட்டிலிருந்து படித்து வந்தது. சிட்லபாக்கம் வந்து இரண்டு மாசம்தான் என்று சொல்லி முடிக்கு முன்பு, இவனை ஜட்டியோடு உள்ளே தள்ளுடா என்ற சத்தம் போட..
அந்தோணி ஜட்டியுடன் இல்லை, நிர்வாணமாக லாக் அப்பில் வைக்கப்பட்டார். போலீசாரை அழைத்து, இந்த மகனையும், மகளை அழைத்து வா என்றார்.. கற்பழிக்கபட்ட பெண் மற்றும் 10 வயது தம்பி இருவரும் நள்ளிரவு 2மணிக்கு காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார்கள்.. தந்தை நிர்வாண கோலத்தில் பார்த்த பெண் கதற… அந்தோணி என்ன வேண்டுமானாலும் எழுதி வாங்கிங்க.. எங்களை விட்டுவிடுங்க.. என்றவுடன்..
புகாரை வாபஸ் பெற்றதாக எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினார் சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மன்..
அடுத்த நாள் காலை அந்தோணி வீட்டிற்கு சென்ற ஆய்வாளர் குணவர்மன், இரண்டு நாளில் வீட்டை காலி செய்துவிட்டு ஒடிவிடு என்று மிரட்டினார்.
அடுத்த நாளே அந்தோணி, பெண், மகனுடன் தலைமறைவாகிவிட்டார். அந்தோணி நடத்தி வந்த சி.டி கடை பூட்டியபடி உள்ளது..
அந்தோணியின் பெண்ணை கற்பழித்த நான்கு பேரும், தாம்பரம் பகுதியில் ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகர்களின் மகன்கள்..
அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளர் குணவர்மனுக்கு வாரி இறைக்க…குணவர்மன்.. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை, நிர்வாண கோலத்தில் மிரட்டி புகாரை திரும்ப பெறுவதாக எழுதி வாங்கி உள்ளார்..
பெண் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் சென்னை மாநகர காவல்துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதியை நினைக்கும் போது..காவல்துறை அதிகாரிகளுக்கு மனிதாபிமானமே இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது..
சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மன் என்ன செய்திருக்க வேண்டும்.. இந்த முகவரி சிட்லபாக்கம் காவல்நிலையம் எல்லையில் வருகிறது என்று சிட்லபாக்கம் காவல்நிலையம் அனுப்பி இருக்க வேண்டும்.. சிட்லபாக்கம் காவல்நிலையம் அனுப்பாமல் இவரே விசாரணை செய்த்தை பார்க்கும் போது, கற்பழித்த நான்கு மிருகங்களுக்கும் சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மனுக்கு தொடர்பு உள்ளது உறுதியாக தெரிகிறது..
இந்த விசயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பணம் பாதாளம் வரை பாயும்…அரசியல்வாதிகளின் பணம்… பிணமும் வாயை பிளக்கும்..
சென்னை மாநகர காவல்துறை ஜார்ஜ் ஐ.பி.எஸ்.. நடவடிக்கை எடுப்பாரா..
தமிழகத்தின் பெண் முதல்வர் காதுகளுக்கு இந்த கற்பழிப்பு-கட்டபஞ்சாய்த்து விவகாரம் செல்லுமா
- Sankarraj Ayyalusamy 
shared via தின இதழ் கண்ணன் வெளியிட்ட செய்தி அப்படியே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் உள்ள கொடூரத்தினால் இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை நாங்களும் பகிர்கிறோம். நீங்களும் பகிருங்கள்.

மத்திய அமைச்சர் முண்டேவின் மறைவு செய்தி வந்த பிறகும், ஜெயாவுடனான சந்திப்பை ரத்து செய்யாத மோடி


செவ்வாய்கிழமையன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு டெல்லி சென்ற‌ ஜெயலலிதாவுக்கு முண்டேவின் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாணக்கியபுரியின் புதிய தமிழக இல்லத்துக்கு மதியம் 12 மணிக்கு அவர் வந்தார். மதியம் சுமார் இரண்டு மணி வரை முதல்வரின் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், வெகுதூரத்தில் இருந்து வந்திருப்பதால் தமிழக முதல்வர், ஓமன் நாட்டு அதிபரின் சந்திப்பு களை மட்டும் ரத்து செய்ய வேண்டாம் எனக் மோடி கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்தனர். முண்டேவின் உடல் மகாராஷ் டிராவுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்தச் சந்திப்பை வைக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியதாகவும் அதற்கேற்ப நேரத்தை மட்டும் மாற்றி அமைத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவின் வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுவிட்ட பிரசாத், தமிழக முதல்வரை அவர் தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்திலேயே வந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இவரைபோல் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இவர், தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவர‌ங்கத்தைச் சேர்ந்தவர். எனவே நிர்மலாவுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நாளில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவருடைய அலுவலகத்திலேயே தமிழக முதல்வர் சந்தித்துள்ளார். கடந்தமுறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருமுறைகூட தமிழக முதல்வர் சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பும்படியும் அவருடன் கலந்து ஆலோசித்து அவைகளை அமல்படுத்த வழி செய்வதாகவும் முதல்வரிடம் ஜேட்லி உறுதி அளித்துள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தனது அலுவலகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவை, ஜேட்லி லிப்ட் வரை சென்று வழியனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளின் பலாத்கார முயற்சிக்கு இனங்காத பெண் தலையில் சுடப்பட்டு கொலை


மேகாலயாவில் 35 வயது பழங் குடியின பெண் ஒருவர், தீவிரவாதிகளின் பாலியல் பலாத்கார முயற்சிக்கு, எதிர்ப்பு தெரிவித்ததால் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். காரோ தேசிய விடுதலைப் படை (ஜி.என்.எல்.ஏ) தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இப்பெண் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜி.என்.எல்.ஏ. தீவிரவாதிகள் நான்கைந்து பேர், அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வெளியில் இழுத்துச் சென்றுள்னர். முதலில் அவரை அடித்து உதைத்த அவர்கள், அவரிடம் அத்துமீறி நடந்துள்ளனர். பின்னர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அப்பெண்ணின் தலையில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அப்பெண் தலை பிளவுபட்டு இறந்ததாக மாநில போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media