BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 May 2014

காங்கிரஸ் எந்தவொரு மூன்றாவது அணிக்கும் ஆதரவு அளிக்காது - ராகுல் காந்தி .

தற்போது நடந்து வருகின்ற மக்களவை தேர்தலில் யார் அடுத்த ஆட்சி பீடத்தில் அமரப் போவது என அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் . சில நாட்களாக காங்கிரஸ் மூன்றாவது அணியை ஆதரித்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பர் என தகவல் வந்தன .

ஆனால் இதனை மறுத்து இன்று ராகுல் அளித்த பேட்டியில் , காங்கிரஸ் எந்தவொரு மூன்றாவது அணிக்கும் ஆதரவு அளிக்காது . காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெறும் , இதனை அனைவரும் காண்பர் என்றார் ..

தூர்தர்ஷன் தொலைகாட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது- நரேந்திர மோடி

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நரேந்திர மோடியின் நேர்காணல் நிகழ்ச்சியின் சில பகுதிகள் நீக்கப்பட்டதை, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் சர்க்கார் ஒப்புக்கொள்வதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரியின் அழுத்தத்தின் காரணமாகவே மோடியின் நேர்காணலின் சில பகுதிகள் நீக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து நரேந்திர மோடி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி சுதந்திரம் இன்றி தவிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியதாவது:

"நாம் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்ட அவசர காலத்தை கண்கூடாக பார்த்துள்ளோம். அது நமது ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி. அதே நிலையே தற்போது மீண்டும் பார்க்கப்படுகிறது. நமது தேசிய தொலைக்காட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அந்த தொலைக்காட்சி தனது தொழில் சுதந்திரத்தைக் காக்க பெரும் பாடுபடுகிறது”

இவ்வாறு நரேந்திர மோடி டிவிட்டரில் கூறியிருந்தார்.

MODI என்றால் Model Of Dividing India- கபில் சிபல்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை(A B C D- ஆதர்ஷ் ஊழல், போபர்ஸ், கோல்( நிலக்கரி சுரங்க) முறைகேடு, மாப்பிள்ளை-Damad) என்றும் (R- ராகுல், S- சோனியா, V- வதேரா, P- பிரியங்கா) என்றும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல், 'மோடி’ மாதிரி என்பதனை விவரித்து அர்த்தம் கூறும் வகையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மோடிக்கு, எவ்வாறு பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை, நகராட்சி கவுன்சிலர்கள் கூட அவரைவிட நல்ல முறையில் பேசுவார்கள். 'மோடி’ மாதிரி என்று நாடு முழுவதும் கூறி வருவது வேறு ஒன்றும் இல்லை, அவை (Modi - Model of Dividing India) என்பது தான் அது. பாஜக பிரதமர் வேட்பாளர், வாக்குகளை பெற இனவாதத்தை பயன்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.

கேங்ஸ்டர் ' முக்தர் அன்சாரி பரோலில் விடுவிக்கப்பட்டார் !!

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினரும் , குவாமி எக் தல் இயக்கத்தின் தலைவருமான  முக்தர் அன்சாரி சி.பி.அய் சிறப்பு நீதிமன்றத்தால் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக  இன்று பரோலில் விடுவிக்கப்பட்டார் . இவர் மே 10 ஆம் தேதி வரை பரோலில் இருப்பார் .

இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிரிஷ்ணா ஆனந்த் கூட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் உத்தர பிரதேசம் கோஷி தொகுதியில் போட்டியிடுகிறார் .

இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக 3 மாதங்களுக்கு முன்பே தெரிவித்தேன்- இல.கணேசன்

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,  "இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தெரிவித்தேன். சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாதி ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டிருப்பது நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகியுள்ளது." என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான முயற்சியை மத்திய - மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மோடியை குறி வைத்து மோடியின் பிரச்சாரத்தின் போது பீதியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடந்த சதித் திட்டமாக பாஜக கருதுகிறது.

மோடி பிரதமரானவுடன் பயங்கரவாத பயிற்சி இலங்கையில் நடைபெறுவது தடுக்கப்படும். தேச விரோத சக்திகளை ஒடுக்கும் போது மத்திய, மாநில அரசுகள் என்றோ மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகள் என்றோ, பாகுபாடுகள் இன்றி சேர்ந்து செயல்படவேண்டும். இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் இனிமேல் நடக்கக்கூடாது.

பாஜக அணியின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற ஆதரவு தேர்தல் முடிவுகளில் தெரியும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்கின்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருந்தன. ஆணையத்தின் தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டால் இன்னும் சிறப்பாக தேர்தல் நடத்த முடியும்".

இவ்வாறு இல. கனேசன் பேசினார்.

நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, கொடநாட்டில் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா?- கருணாநிதி


சென்னையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து தமிழக அரசை குறை கூற திமுக தலைவர் கருணாநிதிக்கு தகுதியில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் 1998ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது, முதலமைச்சர் என்ற முறையில், நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.

14-2-1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மறுநாள், 15-2-1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன்.

கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு, அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.

விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று கோரினார்.

மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது, “தி.மு.கழக ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக் கூட உத்தரவாதமில்லை” என்றார். மானாமதுரையில் பேசும்போது, “குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை, இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்கவேண்டுமா?” என்று கேட்டார்.

1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது இப்படியெல்லாம் பேசியவர் தான் ஜெயலலிதா. தற்போது நான் அப்படியெல்லாம் கூடப் பேசவில்லை.

என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால், இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா; எனவே காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதைத் தான் தவறு என்று கூறி முதல் அமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

நான் வெளியிட்ட அதே அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, தாய்மார்கள் காலிக் குடங்களோடு நடத்திடும் மறியல் போராட்டங்கள், கடுமையான மின்வெட்டு, ஆம்னி பேருந்துகளில் கடுமையான கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, காடீநுந்து போன நெற்பயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய முதல் அமைச்சர் எங்கே என்று கேட்டிருந்தேனே; முதலமைச்சர் ஜெயலலிதா வசதியாக இவற்றையெல்லாம் மறந்து விட்டாரே? ஏன்?

நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால், 98ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே,அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா? முதலமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா?

கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே, என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், முதலமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவமனையிலே சிகிச்சை பெறுபவர்களையெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே, அவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?

நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, எதையும் தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களையெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்! சொல்வது யார் தெரியுமா?

ஒவ்வொரு ஊரிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கெலிகாப்டர் தளம் அமைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், கெலிகாப்டரிலும் பயணம் செய்து, வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட அனுமதிக்காமல் பிரச்சாரம் செய்து விட்டு, இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து, நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, நேராக கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா என்பதைத் தமிழ்நநாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்".

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவெடிப்பு குறித்து கருணாநிதி பேச தகுதியே இல்லை; குண்டு வைத்த‌ சதிகாரர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்

குண்டு வெடிப்புக்கு காரணமான‌ சதிகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்க விடாமல் இருப்பதில் அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 34 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின் றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி ஜாஹீர் உசேனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குண்டு வெடிப்பு

இந்நிலையில், பெங்களூர் குவாஹாட்டி ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தபோது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையத்துக்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது, ரயில்வே பாதுகாப்புப் படையினரு டன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்வர். அந்த வகையில் தமிழகக் காவல் துறையினர் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ரயில் புறப்பட்டதிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் ரயிலில் வெடித்தது டைம்பாம் ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரயில் குறிப்பிட்ட நேரத்தில் சென்ட்ரல் வந்து, கிளம்பியிருந்தால் ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும்போது குண்டு வெடித்திருக்கும் என்றும் தாமதமாக வந்ததால் அது சென்னையில் வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், குண்டு தமிழகத்தில் வெடித்துள்ளதால், அது தமிழக காவல் துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று கூறியுள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிக்கப்படாத பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதுமுற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இவர்கள் கூறும் கருத்துகளைப் பார்க்கும்போது, தீவிரவாதிகளிடமிருந்து நிறைய தகவல்கள் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. அப்படி ஏதேனும் தகவல் பெற்றிருந்தால் அதை தமிழகக் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை, தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசு அனுப்புவதை தமிழக அரசு தடுத்து விட்டதுபோல சில பத்திரிகைகளில் செய்து வந்துள்ளன. மத்திய உள்துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ அல்லது குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்படின் அனுப்புவதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த உள்துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின் உதவியைக் கோருவதாகக் கூறியுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்புக் குழுவினர் வந்து விசாரித்து வருகின்றனர்.

தனது ஆட்சிக் காலத்தில் 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் போன்றவற்றை தடுக்கத் தவறிய கருணாநிதிக்கு, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து பற்றி தமிழக அரசை குறைகூறத் தகுதியில்லை. குண்டுவெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த நடிகை ரோஜா


நடிகையும் இயக்குனர் செல்வமணியின் மனைவியுமான ரோஜா, ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.

நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்தனர். தகவல் அறிந்து, விரைந்து சென்ற மருத்துவ குழுவினர், ரோஜா உடல்நிலையை பரிசோதித்தனர்.

வெயில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அவர் 2 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதற்குப்பின் ரோஜா உடல்நலம் தேறினார்.

கட்சி நிர்வாகிகள் கே.ஜே.குமார், சக்கரபாணி செட்டி, அம்முலு ஆகியோர் அவரை ஓய்வு எடுக்குமாறும், பிரச்சாரத்தை மறுநாள் தொடரலாம் என்றும் ஆலோசனை கூறினர். ஆனால் நடிகை ரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அங்கிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று ‘மின்விசிறி’ சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

சிறு தவறுகளை கூட தவிர்க்க வாக்கு எண்ணிக்கை முறையில் புது மாற்றங்கள்- பிரவீண் குமார்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, சிறு தவறுகள் கூட ஏற்படாமல் இருப்பதற்காக புதிய நடை முறையை பின்பற்ற இருப்பதாக தலைமை தேர்தல் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் அறையில் 14 மேசைகள் இருக்கும். அந்த மேசைகளில் எண்ணப் படும் வாக்குகள், ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் அறிவிக்கப்படும். வழக்கமாக, மொத்தமாக எண்ணப் பட்டுள்ள வாக்குகளின் விவரம்தான் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிக்கப் படுவது வழக்கம். அதில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மேசை யில் எண்ணப்படும் வாக்குகளும் தனித்தனியாக தொகுக்கப் பட்டு, முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மேசையில் எண்ணப்படும் வாக்குகள், தேர்தல் நுண்பார்வை யாளரால் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டு, தேர்தல் துறைக்கு ஆன்லைனில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகுதான், ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியாகும். அதுமட்டுமின்றி வேட்பாளரின் ஏஜென்டுகளுக்கு மேசை வாக்குகள் பற்றிய விவரங்கள் ஒரு தாளில் கொடுக்கப்படும்.

இதனால், ஒவ்வொரு சுற்று முடிவு அறிவிப்புக்கும் 20 நிமிடம் வரை வழக்கத்தை விட கூடுதலாக நேரம் ஆகும். எனவே முன்பு சொன்னதுபோல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படும்.

இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

"குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஓடிய நபரை தேடிவருகிறோம்"-சிபிசிஐடி

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலையில் வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை, உளவுப் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலைய 9-வது பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் அடையாளம் தெரியாத 2 பேர் கையில் சிவப்பு பையுடன் அதில் ஏறுகின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறங்குகின்றனர். அப்போது அவர்களிடம் அந்த பை இல்லை. அடுத்த சில நிமிடங்களில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் குண்டு வெடிக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் எஸ்-5 பெட்டியின் மிக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி யுள்ளன.

குண்டுகளை வைத்தபின், அந்த சிவப்பு பையை தண்டவாளம் அருகிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். குண்டு வெடித்த பின்னர் சோதனைக்காக அழைத்து வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய், அந்த பையை கண்டுபிடித்து கவ்வி எடுத்து போலீஸாரிடம் கொடுத்தது. அந்த பையில் வெடிமருந்து வாடை அடித்ததால்தான் அதை மோப்ப நாய் கவ்வி எடுத்துள்ளது. பையில் சோதனை செய்த போலீஸார், வெடிமருந்து துகள்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹிர் உசேன், அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே, ஜாஹிர் உசேன் கைதுக்கும் இரட்டை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நம்புகின்றனர். எனவே, தமிழகத்தை குறிவைத்துதான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இருந்து குண்டு வெடிக்கும் காட்சிகள் கிடைத்துள்ளன. "குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் உசேனுக்கும் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media