BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 April 2014

இன்டர்நெட் மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாக்களிக்க முடியுமா?





வெளிநாடுகளில் இருந்தபடியே வாக்களிக்க 114 நாடுகள் அனுமதிக்கின்றன. ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில், மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது வாக்குகளை இணையதளம் மூலம் செலுத்த அனுமதிப்பது தொடர்பாக,  அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஷம்ஷீர் என்பவர் இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தூதரக அளவில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், தபால், இணையம் மூலம் வாக்கு செலுத்துதல், மின்னணு முறையில் வாக்கு செலுத்துதல் போன்ற நடைமுறைகளை வெளி நாடுகளிலிருந்து வாக்களிக்கப் பின்பற்றலாம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வழக்கு, விசாரணைக்கு வந்த போது, இணையதளம் மூலம் என்.ஆர்.ஐ. வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

என்னை அடிக்க நினைப்பவர்கள் நான் எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள். நான் அங்கு வருகிறேன். -கெஜ்ரிவால்

வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபடி சென்ற அவருக்கு, மாலை அணிவிக்க வந்த ஒருவர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதில் அவரது மூக்குக்கண்ணாடி உடைந்து விட்டதுடன் அவரது கன்னமும் வீங்கி விட்டது.

 இச்சம்பவத்தை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது வலைத்தளத்தில் “என்னையே ஏன் தொடர்ந்து தாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை? இவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் யார்? அவர்களின் விருப்பம் என்ன? இதன் மூலம் அவர்கள் சாதிப்பது என்ன? நாட்டின் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகுமா? அப்படி என்றால் என்னை அடிக்க நினைப்பவர்கள் நான் எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள். நான் அங்கு வருகிறேன். பின்னர் உங்களது விருப்பப்படி என்னை அடியுங்கள். ஆனால் இதற்காக நான் ஒருபோதும் பதில் தாக்குதல் நடத்தமாட்டேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை நேர்மையாக போராடுவேன்." என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரத்தில் மின்வெட்டு காரணமாக 60 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது-கனிமொழி

காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று வாலாஜாபாத்தில் பிரச்சாரம் தொடங்கினார். அத்தொகுதியில் பத்தி இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

கடந்த 2011–ம் ஆண்டு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கைத்தறி துறையை சீர்படுத்த 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரே ஒரு கைத்தறி பூங்கா அமைப்பதாக மட்டுமே அறிவிப்பு வந்துள்ளது. கைத்தறி பொருள்கள் ஏற்றுமதிக்காக ஒரு கைத்தறி ஏற்றுமதி கழகம் உருவாக்க உறுதி அளித்தார்கள். ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை.

காஞ்சீபுரத்தில் அதிக அளவில் நெசவாளர்கள் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக 60 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் 12 சதவீத அன்னிய முதலீடுகள் தமிழகத்திற்கு வந்த நிலை மாறி இன்று அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தமிழகத்தில் சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தலைவர் கலைஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை ஜெயலலிதா அரசு சரியாக செயல்படுத்தவில்லை. புதிய தலைமை செயலகத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டார்கள். ஆனால் அங்கு மருத்துவர்கள் தேர்வு முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதற்கு தமிழக மக்கள் அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் அரசாங்க வேலைவாய்ப்பில், கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறி விடுவார்கள். பிறகு நாம் மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.

பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் 100 அடிக்க கீழே போய்விட்டது. அதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் குடிநீரை ரூ.10–க்கு அரசு விற்கும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அ.தி.மு.க. அவர்களது 2011 தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றனர். அந்த வாக்குறுதி என்ன ஆனது?.

இவ்வாறு கனிமொழி எம்.பி.பேசினார்.

யுவராஜ் சிங்கை ஆதரித்து, சச்சின் வெளியிட்டுள்ள செய்தி

டி20 உலக கோப்பை இறுதியில், இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்து, சமூக வலைதளங்களில் வசைமொழிகளுக்கு உள்ளாகி வருகிறார், யுவராஜ் சிங். இந்நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து, சச்சின் டெண்டுல்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதாவது:

"கணிக்க இயலாத தன்மையே கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான விளையாட்டாக ஆக்குகிறது. நாங்கள் சிறப்பாக செயல்படும்போது வரும் ரசிகர்களின் கைதட்டலை கிரிக்கெட் வீரர்களாக மகிழ்கிறோம். ஆனால், அதைவிட நாங்கள் கஷ்டப்படும்போது ரசிகர்கள் தரும் ஆதரவையும் உற்சாகத்தையுமே அதிகம் மெச்சுகிறோம்.

யுவி, 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் படைத்த சாதனையிலும், 2011-ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் வெற்றியில் அவரது பங்கிலும் நாம் அனைவரும் பெருமையடைந்தோம்.

யுவிக்கு நேற்று கடினமான ஒரு தினமாக அமைந்தது. அதற்கு அவரை விமர்சிக்கலாம். ஆனால், அதற்காக அவரை திறமையற்றவராக நினைத்தலோ கூடாது. கிரிக்கெட் விளையாட்டிலும், விளையாட்டைத் தாண்டியும் பல தடைகளைத் தாண்டி வந்துள்ள யுவியின் மன தைரியத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன்.

மீண்டும் கண்டிப்பாக இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி, தன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமையும் திறனும் யுவிக்கு உள்ளது என்பதை நான் அறிவேன்.

யுவி, பல இனிமையான நினைவுகளில் உங்களின் பங்கை, ஒரு கசப்பான தினம் குறைத்துவிட முடியாது. நீங்கள் இன்று சரிவை சந்தித்திருக்கலாம். ஆனால், வீழ்ச்சி என்பது உங்களுக்கு வெகு தூரம்."

இவ்வாறு சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

ராமர் கோயில் பற்றிய பாஜக அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று நடைபெற்ற அதே நாளன்று, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் மூத்த தலைவர் மோதிலால் வோரா, தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

“முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி விதிமுறை மீறலாகும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை மீறி பாஜக இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. அந்த அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மதச்சார்பற்றத் தன்மைக்கு எதிரானதாகும். மதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை


தமிழகத்தில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலை பாகுபாடு இல்லாமல் நடத்துவதற்காக ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கமிஷனராக இருந்த ஜார்ஜ், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதி, 2011 மே முதல் 2012 செப்டம்பர் வரை சென்னை மாநகர கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள‌ பங்களாவை காலி செய்கிறார் மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன் சிங், ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7-ம் எண் பங்களாவில் குடியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே, மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும் பிரதமர் பதவியில் அமர மாட்டேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். தற்போது 5-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மன்மோகன் சிங்கிற்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.

பிரத‌மர் பதவிக்காலம் முடிவடைந்த பின்பு, அவருக்கு வேறு இடத்தில் அரசு பங்களாவை ஒதுக்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அரசு பங்களாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்த பங்களாவில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் குடியிருந்தார். 1920-ம் ஆண்டு சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அந்த பங்களா, நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட டைப் 3 வகையை சேர்ந்தது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை வட்டாரம் கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் குடும்பத்தினர் அந்த பங்களாவை பார்த்து, அங்கு குடியேற விருப்பம் தெரிவித்தனர். பங்களாவை புதுப்பிக்கும் பணி ஏப்ரல் 30-ம் தேதி முடிவடைகிறது. இதற்கு ரூ.35 லட்சம் செலவானது” என்றனர்.

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவுடன் முஸ்லிம் இயக்கங்கள் கூட்டணி வைக்கலாமா?

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ  பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

கடந்த 2002-ம் ஆண்டு மக்களவையில் பாஜக உறுப்பினர் கொண்டு வந்த பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பனத்வாலாவும் எதிர்த்தார்.

2009ல் அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், மசோதாவை எதிர்க்காமல் புறக்கணிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதை மறுத்து, மசோதாவை எதிர்த்து வாக்களித்தேன்.

ஆனால், அப்போது அந்தக் கூட்டணியில் இருந்த திமுக, மசோதாவை ஆதரித்து வாக்களித்தது. பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவுடன் முஸ்லிம் இயக்கங்கள் கூட்டணி வைக்கலாமா?

தமிழகத்தில் திமுக மீதுள்ள வெறுப்பில் அதிமுகவும், அதிமுக மீதுள்ள வெறுப்பில் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.

இந்த நிலையை மாற்று கின்ற அணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்து மக்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்தத் தொகுதியில் டாக்டர் மாசிலாமணியை நான்தான் வற்புறுத்தி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறேன். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media