BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 March 2014

ஆலந்தூர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாநி போட்டி


சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஞாநி,  ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலப் பிரிவு இன்று அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை, சென்னை - பெருங்குடியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலப் பிரச்சாரக் குழு தலைவர் டேவிட் பருண்குமார் வெளியிட்டார். அப்போது, பத்திரிகையாளர் ஞாநி உடன் இருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த முறை ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க‌ருணாநிதியின் நினைப்பெல்லாம் குடும்ப இணைப்பில் தானே தவிர, நதிநீர் இணைப்பில் அல்ல-ஜெ.



1996 முதல் கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. தனது அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் நதிநீர் இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கருணாநிதி கிள்ளிப் போட்டாரா என்றால் இல்லை; நிச்சயமாக இல்லை. இந்த நதிநீர் இணைப்பில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு உடன்பாடில்லை. ராகுல் காந்தி இந்தத் திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்து 2009-ஆம் ஆண்டு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி நதிகள் இணைப்பு என்பது ஆபத்தானது என்றும், கடினமான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு நாசகரமான எண்ணம் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்திற்கு தி.மு.க. ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்ததா?

இந்தக் கருத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை தி.மு.க. வற்புறுத்தியதா? இந்தக் கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று தி.மு.க. கூறியதா? மத்திய அரசை கண்டித்து ஒரு அறிக்கையாவது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டதா? குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கடிதமாவது எழுதப்பட்டதா? இவற்றில் எதையுமே தி.மு.க. செய்யவில்லையே.

17 ஆண்டுகளாக எதையுமே செய்யாத தி.மு.க., நதிநீர் இணைப்புக்கு எதிரான கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிக்கக் கூட திராணியில்லாத தி.மு.க.,  நதிகள் தேசியமயம் மற்றும் இணைப்பிற்கு பாடுபடும் என்று கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கருணாநிதியின் நினைப்பெல்லாம் குடும்ப இணைப்பில் தானே தவிர, நதிநீர் இணைப்பில் அல்ல என்பதை உலகமே அறியும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்."

இவ்வாறு  ஜெயலலிதா பேசியிருந்தார்.

தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.



இன்று விருதுநகர் தொகுதியில் ஜெயலலிதா  அத்தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 3300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது தமிழகம் தான்.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி அதிகரித்து வருகிறது. விருதுநகர் பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

ஊழலுக்கு பெயர்போன அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸிற்கு மாற்று தான் தேசிய ஜனநாயக கூட்டணி


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தனிநபர் வருமானத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்திடும் வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம் என்ற புதிய புரட்சி முழக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் மாநாட்டை நடத்தினோம்.

தமிழகத்தில் ஊழலுக்கு பெயர்போன அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸிற்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவுதான் தேசிய ஜனநாயக கூட்டணியாகும். இக்கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழ்நாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. பல இயக்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இது மக்கள் கூட்டணி, தமிழகத்தின் முதல் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.

நாட்டில் ஏழை மக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் லஞ்சமும், ஊழலும்தான் பெரிதும் காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால் இந்திய நாடு எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு அமைய வேண்டும். அது இந்தியாவை கட்டாயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பாரதீய ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற தேமுதிக மற்றும் தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும்.

அவரவர் சார்ந்துள்ள பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேமுதிகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கழக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் ஆகியோரின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் அரும்பாடுபட வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்கின்ற நமது குறிக்கோளோடு, சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு, பகலென பாராமல் நீங்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி 40 தொகுதிகளிலும் நம் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளுகிறேன்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தோழமைக் கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியை மட்டுமே நமது குறிக்கோளாகக் கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்தக் கூட்டணியின் லட்சியமே இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை நல்லரசாக்கவும், அனைவரும் ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம், மகத்தான வெற்றி காண்போம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

மோடி அலை தான் நாடெங்கும் வீசுதேன்னு சொல்றீங்களே, அப்புறம் எதுக்கு 2 தொகுதிகளில் மோடி போட்டி?


நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில்  வாரணாசி, வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவரது இந்த முடிவினை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேலியாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பேசப்படுவதை மறுத்துள்ள அவர் கூறியதாவது:

மோடிக்கு ஆதரவான அரசியல் அலை வீசுவதாக கூறப்படுவது தவறான கருத்தாகும். நாட்டில் ஒரேயொரு முறை தான் அரசியல் அலை வீசியது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது வீசிய அந்த அலையின் மூலம் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியை பெற்றது. தங்களுக்கு ஆதரவான அலை வீசுவதாக 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கூறிய தேசிய ஜனநாயக கூட்டணி ‘இந்தியா மிளிர்கிறது’ என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் சரியான அடியை வாங்கியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தோல்வியை மையமாக காட்டி, அந்த ஆட்சிக்கு எதிரான அலை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று 2009 பாராளுமன்ற தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி அந்த தேர்தலிலும் தோல்வியையே தழுவியது. அதேபோல் தான், மோடிக்கு ஆதரவான அலை வீசி வருவதாக தற்போது கூறப்படுகிறது. ஆதரவு அலை வீசுகையில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? என்னைப் பொருத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான அலையே தற்போதும் வீசிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

காதலை நாங்கள் எதிர்க்கவில்லை, காதல் நாடகத்தையே எதிர்க்கிறோம்-ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,  பா.ஜ.க. கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் அகோரத்தை அறிமுகம் செய்து வைத்து சீர்காழியில் பேசியதாவது:

தமிழகத்தை 47 ஆண்டுகாலம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிசெய்து தமிழக மக்களை குடிகார மக்களாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. தமிழகத்தில் கடந்த கால தி.மு.க. ஆட்சிகாலத்தில் 6 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 18 மணிநேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. காலப்போக்கில் தமிழகம் இருண்ட பூமியாக மாறும் நிலை உள்ளது.

வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்கக்கூடாது. அது உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பா.ம.க.தான் பாடுபட்டு வருகிறது. இதை யாரும் மறுக்கமுடியாது.

தமிழகத்தில் காதலுக்கு பா.ம.க. எதிராக இல்லை. ஆனால் காதல் நாடகத்தை தான் எதிர்க்கின்றோம். ஒரு சில கட்சியினர் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் 134 பா.ம.க. வினரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அகோரத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேணடும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

7 முறை வெற்றி பெற்ற சிவகங்கையில், ப.சிதம்பரம் இம்முறை போட்டியிடவில்லை



தமிழகத்தில் 30 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் நேற்றிரவு  வேட்பாளர்களை அறிவித்தது.

தற்போது எம்.பி.க்களாக உள்ள பி.விஸ்வநாதன், என்.எஸ்.வி.சித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு, ஜே.எம்.ஹாரூண், மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் தங்கள் தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், ஆர்.பிரபு, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஜி.கே.வாசன், கே.வீ.தங்கபாலு ஆகியோர் தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவித்துள்ளனர். சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம், எம்.பி.அன்பரசு, ஜெயமோகன், நாசே ராமச்சந்திரன் மற்றும் எம்.கிருஷ்ணசாமி ஆகியோரது வாரிசுகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏழு முறை வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் இம்முறை போட்டியிடாதது குறிப்பிட‌த்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

மத்திய சென்னை - சி.டி. மெய்யப்பன்

ஸ்ரீபெரும்புத்தூர் - அருள் அன்பரசு

காஞ்சிபுரம் - பி.விஸ்வநாதன்

அரக்கோணம் - நாசே ராஜேஷ்

வேலூர் - ஜெ.விஜய் இளஞ்செழியன்

திருவண்ணாமலை - ஏ.சுப்பிரமணியம்

ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்

கள்ளக்குறிச்சி - ஆர்.தேவதாஸ்

சேலம் - மோகன் குமாரமங்கலம்

நாமக்கல் - ஜி.ஆர்.சுப்பிரமணியம்

ஈரோடு - பி.கோபி

திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

நீலகிரி (தனி) - பி.காந்தி

கோவை - ஆர்.பிரபு

திண்டுக்கல் - என்.எஸ்.வி. சித்தன்

திருச்சி - எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டமான்

பெரம்பலூர் - எம்.ராஜசேகரன்

கடலூர் - கே.எஸ்.அழகிரி

சிதம்பரம் (தனி) - டாக்டர் பி.வள்ளல்பெருமாள்

மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர்

நாகப்பட்டினம் (தனி) - டி.ஏ.பி. செந்தில் பாண்டியன்

தஞ்சாவூர் - டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார்

சிவகங்கை - கார்த்தி ப.சிதம்பரம்

மதுரை - பி.என்.பரத் நாச்சியப்பன்

தேனி - ஜே.எம். ஆருண்

விருதுநகர் - மாணிக் தாகூர்

ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்

தூத்துக்குடி - எ.பி.சி.வி. சண்முகம்

தென்காசி - கே.ஜெயக்குமார்

திருநெல்வேலி - எஸ்.எஸ். ராமசுப்பு

தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் (தனி), கன்னியாகுமரி, தருமபுரி, கரூர், பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) கிருஷ்ணகிரி ஆகிய 9 தொகுதிகளுக்கு ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாரயணசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட்களுடன் ஜெ. கூட்டணியை முறித்ததன் காரணம் புரிகிறது-மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

 விழுப்புரம் (தனி) தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனந்தனின் அறிமுகக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று  நடைபெற்றது, இக்கூட்டத்தில் வேட்பாளர் ஆனந்தனை அறிமுகம் செய்து  அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

அதிமுக-வில் கூட்டணி தொடர்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கிய பேச்சுவார்த்தை 6 சுற்றுகள் முடிந்தும் தொடங்கிய இடத்திலேயே இருந்தது.

இதற்கிடையே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் எங்களை சந்தித்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர், ‘சந்தோஷத்துடன் இணைந்தோம், தற்போது சந்தோஷத்துடன் பிரிவோம்’ என்று சொல்லிப் பிரிந்தார்கள். அப்போது எங்களை விலக்கக் காரணம் தெரியவில்லை. இப்போது பாதி தெரிகிறது. ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பற்றியோ, மோடி பற்றியோ சிறிது கூட விமர்சிப்பதே கிடையாது. பாஜக-வை ஆதரிக்கவே திட்டமிட்டு எங்களுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக்கொண்டார். 18 தொகுதிகளில் போட்டியிடும் நாம் மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் அதிமுக அல்லாத வேறு வேட்பாளர்களை ஆதரிப்போம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும்.’’

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media