பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான கோவை "போத்தீஸ்" கட்டிடம், மூடக்கோரி போராடும் ஃபேஸ்புக் பதிவாளர்
சாங்கிய ரிஷி
ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரை பலி கொடுத்தோம், ஆனால் இந்த கட்டிடம் பாதுகாப்பாக இல்லை என்று மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியும் கோவையில் "போத்தீஸ்" நிறுவனம் கடை நடத்தி வருகிறது, லாபவெறி எத்தனை பேரை பலிவாங்க காத்திருக்கிறதோ? இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவாளர் சாங்கிய ரிஷி எழுதிய பதிவும் அதைத்தொடர்ந்து போத்தீஸ் கடையை மூட கோரி போராட மக்களை திரட்டவும் செய்துள்ளார், ஆனால் மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் இதை கண்டு கொள்ளவில்லை, இது குறித்து அவர் எழுதிய பதிவு கீழே.
கோவை காந்திபுரத்தில் கிராஸ் கட் ரோட்டில் அமைந்துள்ள போத்தீஸ் என்ற பிரமாண்டமான கடைக்கு சென்றிருக்கிறீர்களா? செல்வதாக உத்தேசம் இருக்கிறதா? இந்த செய்தி உங்களுக்கு தான்.
குறிப்பிட்ட இந்தக் கட்டிடம் லீமாஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.(லாட்டரி அதிபர் மார்ட்டின் அவர்களின் மனைவி லீமா ரோஸ்). பின்பு கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான விதிகள் பின்பற்றப் படவில்லை என்று, அந்தக் கட்டிடத்தை சீல் செய்தனர். பிறகு மேல் இரண்டு மாடிகள் இடிக்கப் பட்டது. மாநகராட்சி முடிவை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவும் பெற்றனர். வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. (எந்த மாற்றமும் செய்யப் படக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் இவர்கள் உள்ளே மாற்றங்களை செய்திருப்பதாக தி ஹிந்து குறிப்பிடுகிறது)
இந்த நிலையில் இவர்கள் கட்டிடத்தை போத்தீசுக்கு வாடகைக்கு விடுகின்றனர். சொல்லவா வேண்டும்? ஸ்ரீதேவிக்கு அருகில், கிராஸ் கட்டில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்தால் கசக்குமா? விதிமீறலாவது மண்ணாவது? சிவ கார்த்திகேயனுக்கு கொட்டிக் கொடுத்து விளம்பரத்தில் நடிக்க வைத்தால் மக்கள் வந்து குவியப் போகிறார்கள். கடையை பிரமாண்டமாய் அழகுபடுத்தி வியாபாரத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கு இந்தக் கட்டிடத்தில் பாதுகாப்பு இல்லை. நூறு சதவிகித விதிமீறல் இந்தக் கட்டிடத்தில் உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் , கடையின் சுவற்றிலேயே பெரிய நோட்டீஸ் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். நம் மக்களுக்கு அதைப் பற்றி பிரச்சினையே இல்லை.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?
பணம் இருந்தால் மக்களை முட்டாள் ஆக்கி விட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய கோடீஸ்வரப் பெரு முதலாளிகள். ஆனால் கோவை மக்கள் அப்படி அல்ல.
இப்போது தான் சில மாதங்கள் முன்பு , அவினாசி ரோட்டில் விதிகளை மீறிய கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் உயிர்களைப் பலி கொடுத்தோம். இனி மீண்டும் அந்தத் தவறு நடக்கக் கூடாது.
எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக் கொள்வோம். விதிமீறல் கட்டிடத்தை தன் லாப நோக்குக்காக , பொதுமக்கள் புழங்கும் கட்டிடமாக பெரிய வியாபாரத்தை நிகழ்த்தி கோவை மக்களை மதிக்காமல் நடந்து கொள்ளும் இந்த போத்தீசுக்கு கோவை மக்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம், இதற்காக பொதுவில் கோவை மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறோம்.
அனைத்து மக்களும் இதில் எங்களோடு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
சாங்கிய ரிஷியின் போராட்டத்தை ஆதரிப்போம், இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.