BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 28 October 2014

உணவே மருந்து : நல்ல உணவுக்கு அளவுகோல்


நாம் உண்ணும் உணவு சரியானதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவுகோல் உள்ளது. ஆதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும். 

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.  அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம். அந்த நேரத்தில் உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே! அப்படிப் பார்க்கும்போது பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை. அதே சமயம் அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். ஆதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள். எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.  ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.


இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும். அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன. அதனால்தான் இயற்கை உணவுகள் பெரும்பாலும் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை என்னும் அதேநேரம் சமையல் உணவுகள் தண்ணீரை நிறையவே சார்ந்திருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னொரு புஷ் போட்டி?

அமெரிக்க அதிபர்களாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஜார்ஜ் புஷ் 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவரது மகன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்தார். இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. அவர் பெயர் ஜெப் புஷ். இவர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய புதல்வர். ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரராவார். ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர். இவரது மகன் ஜார்ஜ் பி. புஷ், ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், அதிபர் தேர்தல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிட குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என அவரது மகன் கூறினார். அதிபர் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடுவதை அவரது தந்தையும் சகோதரரும் எப்போதுமே ஆதரித்து வந்ததாக ஜார்ஜ் பி. புஷ் கூறினார். ஆனால் ஜெப் புஷ்ஷின் தாயார் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. ஜெப் புஷ்ஷின் தந்தை, ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் இராக் எதிராக அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியன. ஜெப் சகோதரர் ஜார்ஜ் டபிள்யு புஷ் பதவி வகித்த காலத்தில், இராக் அதிபர் சதாம் உசைன் பதவி நீக்கம், அவரது மரண தண்டனை நிறைவேற்றம் நடைபெற்றன. 2001-ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தேடப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிரப் புயலாக மாறிய "நிலோஃபர்'



அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள நலியா கிராமம் அருகே வரும் 31ஆம் தேதி கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  மத்திய அரசு அவசர ஆலோசனை: நிலோஃபர் புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் முன்கூட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தியது.

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த வாதம்: "வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள் பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில், அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும் நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன் சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத் தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார். கூடுதல் சாட்சிகள்: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட கூடுதல் நபர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய அனுமதி கேட்டு, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி திங்கள்கிழமை விசாரித்த போது, சிபிஐ வழக்குரைஞர் கே.கே.கோயல் ஆஜராகி, "சிபிஐ மனு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர் பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் மீது பதில் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை' எனக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்று இந்த மனு மீதான அடுத்த விசாரணையை வரும் நவம்பர் 10-ஆம் தேதி சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

பின்னணி: "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவிக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ரூ.200 கோடி அளவுக்கு நிதிப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிவர்த்தனையை சட்டவிரோதம்' என்று மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத் குமார், தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாகி அமிர்தம் ஆகிய 10 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவை வரும் 31-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.

கருப்புப் பணம்: மேலும் 8 பேர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்



வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான "டாபர் இந்தியா'வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டு வங்கிகளில், பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம், அதன் இயக்குநர்கள் ராதா சதீஷ் டிம்ப்லோ, சேத்தன் எஸ் டிம்ப்லோ, ரோகன் எஸ் டிம்ப்லோ, அண்ணா சி டிம்ப்லோ, மல்லிகா ஆர் டிம்ப்லோ ஆகிய 8 பேர் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்களில், பர்மனின் பெயர், பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது. மற்ற 7 பேர் விவரம், பிற வெளிநாடுகளின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது.

இதேபோல், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மற்ற அனைவரது பெயர்களையும் வெளியிடுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. எனினும், வெளிநாட்டு வங்கிகளில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் அனைவரது கணக்குகளையும் சட்டவிரோதமானவையாகக் கருத முடியாது. ஏனெனில், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் கிடைக்கும்வரை பிற விவரங்களை அரசால் வெளியிட முடியாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில், நாட்டு மக்களுக்கு ரகசியத்தைக் காக்கும் அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகையால், அந்த உரிமையை அரசால் நிராகரிக்க முடியாது. மேலும், அரசமைப்பு சட்டத்தின் 32(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுகிறவரை, வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட மற்ற பெயர் விவரங்களை அரசால் வெளியிட முடியாது.

முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: கருப்புப் பணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முதலீடு செய்த அனைவரது பெயர்களையும், அவை கருப்புப் பணம் இல்லாத பட்சத்திலும் வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்தப் பெயர்களை வெளியிட்டால், அதுதொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்வதில் பிரச்னை ஏற்படும். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்பட அரசு தன்னிடம் இருக்கும் விவரங்களை வெளியிடாமல் வைத்திருப்பதில், எந்த உள்நோக்கமும் கிடையாது. பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு வசதியாகத்தான், முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அரசு கோருகிறது.

பல்வேறு ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த விவரங்களை இந்தியா பெற்றுள்ளது. சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அதில் வரி ஏய்ப்பு செய்தோரின் விவரங்களை அரசு வெளியிடும் என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாபர் மறுப்பு: இதனிடையே, பிரதீப் பர்மன் வெளிநாட்டு வங்கியில், கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லை என்று டாபர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிரதீப் பர்மன், வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தபோதுதான் அந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. அனைத்துச் சட்டங்களுக்கும் உள்பட்டே நாங்கள் செயல்படுகிறோம். நாங்களே முன்வந்து கணக்கு தொடர்பான தகவலை அளித்தோம். மேலும், சட்டப்படி வருமான வரி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லை-லோடியா: இதேபோல், சுவிட்சர்லாந்து வங்கியில் தனக்கு கணக்கு கிடையாது என்று பங்கஜ் சிமன்லால் லோடியா மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வருமான வரித் துறையிடம் இந்தத் தகவலை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்' என்றார்.

ராதா டிம்ப்லோ கூறுகையில், "மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை முதலில் நான் படித்துப் பார்க்க வேண்டும்; அதன்பிறகுதான் கருத்துத் தெரிவிக்க முடியும்' என்றார். பின்னணி: மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, லீச்டென்ஸ்டெய்ன் நாட்டின் எல்.எஸ்.டி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 பேரின் பெயர்ப் பட்டியலை தாக்கல் செய்தது. அதில், அம்ரூவோனா தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபேலியா, அம்ப்ரீஷ் துபேலியா, பவ்யா மனோஜ் துபேலியா, மனோஜ் துபேலியா, ரூபால் துபேலியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சிலரது பெயர் விவரங்களை சீலிட்ட உறையில் ரகசியமாகத் தாக்கல் செய்தது. எனினும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரமில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மத்தியில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media