BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

ஜெயா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மின் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவரே சொல்வது வேடிக்கை- கனிமொழி

த‌மிழகம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி எம்.பி.,  தருமபுரியில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது,  "ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மின் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவரே சொல்வது வேடிக்கையாகத்தான் உள்ளது. தன் தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவது ஜெயலலிதாவின் தொடர் வாடிக்கை. இது ஒன்றும் புதிதல்ல. " என்று கூறினார்.

மேலும் அவர், மோடி தனக்கு திருமணம் ஆனதை முதல் முறையாக வெளியிட்டுருப்பதை பற்றி கேட்கப்பட்ட போது, "இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தகவலை மறைத்தது சரியா, தவறா என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். " என்று பதிலளித்தார்.

2ஜி விவகாரத்தை பற்றி கேள்வி எழுந்த போது, " நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பற்றி பேச வேண்டாம். " என தெரிவித்தார்.

16 ஆண்டுகளாக நடந்து வந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

16 ஆண்டுகளாக நடந்து வந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்,  திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி இருந்த போது, ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக, அப்போதைய ஆட்சியர் உமாசங்கர் புகார் அளித்தன் பேரில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, அப்போதைய இயக்குநர் எம்.சத்யமூர்த்தி, திட்ட இயக்குநர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க செயல் அலுவலர் ஏ.ஆரோக்கியராஜ் மற்றும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த டி.பாரதி ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து செயல்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ போலீசார் குற்றம்சாட்டினர். கூட்டுறவு சங்க செயல் அலுவலர் ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்டதால், மற்ற 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

சிபிஐ வழக்குகளுக்கான சென்னை 9-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.மாலதி இன்று அளித்த தீர்ப்பில், அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்யமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர். அத்துடன், பாரதியோடு சேர்ந்து அவர்கள் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்கள் 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக விமர்சித்துக் கொண்டாலும், தமிழக முதல்வருடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு உள்ளது: மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மோடி, ஏ.என்.ஐ. டெலிவிஷன் நெட்வொர்க்-குக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பொறுத்தவரையில் அரசியலில் விரோதியோ, தீண்டத்தகாதோரோ யாருமில்லை என்று குறிப்பிட்டார். மோடி சென்னை வந்த அதே நாளில், அவரை விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தாரே என்ற கேள்விக்கு, "நாங்கள் அரசியலில் கொள்கை ரீதியில் வேறுபட்டு ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில், எனக்கு அவருடனான நல்லுறவு மிகச் சிறப்பாகவே உள்ளது" என்றார்.

அரசியல் ரீதியில் எதிர் துருவமான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன்கூட தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பேணுவதாக குறிப்பிட்ட அவர், "நாங்கள் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டிருக்கிறேன். இதுதான் நமது ஜனநாயகத்தின் மேன்மை" என்றார்.

நீங்கள் பிரதமாரானால் ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்வீர்களா? என்று வேறொரு தொலைகாட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்டதற்கு, "எந்த ஓர் அரசும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுப்படவே கூடாது. சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும்" என்று பதிலளித்தார் மோடி.

குஜராத்தை விட தமிழகம் முன்னணி நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் கூறும் ஜெயலலிதாவின் புள்ளி விவரங்கள்

கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா,  குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் இருக்கும் மாநிலம் என புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க‌ அரசு விளங்குகிறது. ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை விட தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

குழந்தை இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் 11-ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 122 என்ற அளவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 14.3 விழுக்காடு தொழிலாளர்கள் பட்டதாரிகள். ஆனால், குஜராத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்களே பட்டதாரிகளாக உள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலைமை குஜராத்தில் நிலவுகிறது. மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் 15,252 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெறப்பட்டு இருக்கிறது. அதே காலகட்டத்தில் குஜராத்தில் 2,676 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடாக பெறப்பட்டு இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். 15,252 கோடி ரூபாய் எங்கே? வெறும் 2,676 கோடி ரூபாய் எங்கே?

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது, ஆனால் குஜராத் 11-ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. ஆனால், குஜராத்தில் வெறும் 22,220 தொழிற்சாலைகள் தான் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். ஆனால், குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான்.

2011-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 732. ஆனால், குஜராத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 16 தொழில்கள் தான் துவங்கப்பட்டன.

உணவு தானிய உற்பத்தியில் 2011-2012 ஆம் ஆண்டு 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் அளவை எட்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி வெறும் 88.74 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது.

2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 103 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்று பல துறைகளில் குஜராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவிலேயே பலருக்கு வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான் கண்களை திறந்து விட்டதைப் போல தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை எல்லாவற்றிலுமே இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற ஒரு மாய தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அது உண்மை அல்ல. உண்மை நிலை என்னவென்றால் குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு எனது தலைமையில் வெற்றுப் பேச்சிலும் விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல், மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. சதா சர்வ காலமும் மக்கள் நலன் பற்றியே சிந்தித்து கர்ம சிரத்தையுடன் கடமை ஆற்றியதால் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இவ்வாறு ஜெயலலிதா தமிழகம், குஜராத் மாநிலத்தை விட முன்னணியில் இருக்கிறது என புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்.

சிதம்பரத்தை மறுவாக்கு அமைச்சர் என அழைக்கும் மோடி, பதிலுக்கு மோடியை 'என்கவுன்டர் முதல்வர்' என்று கூறிய சிதம்பரம்





தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, ஒவ்வொரு கூட்டத்திலும் 'ரீ-கவுன்டிங் மினிஸ்டர்' (மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர்) என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விமர்சித்து வருகிறார். குறிப்பாக, 'மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடாததில் இருந்தே மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது' என மோடி சாடி வருகிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மோடியின் இந்த விமர்சனம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மோடி ஏராளமான பொய்களைக் கூறுபவர். சிவகங்கையில் மறு எண்ணிக்கை நடக்கவில்லை. அது அவருக்குத் தெரியும்.அப்படி இருந்தும் அவர் பொய் பேசுகிறார். அவர் மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று அழைத்தால், நான் அவரை என்கவுன்டர் முதல்வர் என்று அழைப்பேன்" என்றார் ப.சிதம்பரம்.

வாஸ்து பிரகாரம் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்த அமைச்சர் .!!!

இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது . கர்நாடக மாநிலத்தில் கோலார் தொகுதியில் அமைச்சர் முனியப்பா வாக்குப்பதிவு செய்ய வரும்போது வாக்குப்பதிவு இயந்திரம் தெற்கு  நோக்கி இருந்ததை கண்டார் . வாஸ்து பிரகாரம் வடக்கு நோக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார் . அப்படியே வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டது .

வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டதால் , அந்த இடத்தில் இருந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டார் . ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றப்படுவது சட்டத்திற்கு புறம்பானது .

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, தமிழகம் முழுக்க 30,000 ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட 5,360 நடமாடும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்தக் குழுவினர் வரும் 20-ம் தேதியில் இருந்து தங்களது பணிகளைத் தொடங்குவர் என்றும் தெரிவித்தார்.

பிரவீண் குமார் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்முறையாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம், ‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’ என்றும், வாக்குப்பதிவு தினத்தன்று காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு, ‘வாக்களித்து விட்டீர்களா’ என்றும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உள்ளோம். எங்களிடம் உள்ள 60 லட்சம் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு இந்த நினைவூட்டல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதுதவிர, எப்.எம். ரேடியோ மற்றும் தனியார் தொலைக் காட்சிகளிலும் ‘வாக்களித்து விட்டீர்களா’ என்ற நினைவூட்டல் விளம்பரங்களை ஒலி, ஒளிபரப்ப அனுமதி கேட்க இருக்கிறோம்.

தேர்தல் நாளன்று ஊழியர் களுக்கு விடுமுறை தரவேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி, விடுப்பு தர மறுக்கும் நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். விடுப்பு தராத நிறுவனம் குறித்து ஊழியர்கள், எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு (1950) புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை விட நன்மை செய்தவர்கள் யாருமில்லை-சோனியா

கன்னியாக்குமரியில் நேற்று நடைப்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எத்தனையோ வளர்ச்சித் திட்டங் களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழே இருந்து மீட்டுள்ளோம்.

தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், ‘இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை’ என்கின்றனர். இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் கட்சியை விட நன்மை செய்தவர்கள் இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சாலை, புதிய பள்ளிக்கூடங்கள், அரசியல் தீர்வு ஆகியவற்றை பெற காங்கிரஸ் அரசுதான் வழிவகை செய்துள்ளது. ஜனவரி 2-ம் தேதி இலங்கை, தமிழக மீனவர்களை சந்திக்க வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கே சாரும். ஆனால், அதற்கு இடம் அனுமதி கொடுப்பதற்கு அதிமுக அரசு காலதாமதம் செய்தது.

பாஜக தனி நபர் கையில் சிக்கி இருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினையையும் தன்னால் தீர்க்க முடியும்’ என்று அவர் சொல்லி வருகிறார். அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். தனி நபர் கையில் அதிகாரம் செல்லக் கூடாது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை, மீனவர்களுக்கு பாதுகாப்பு, கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல் ஆகியவை நிறைவேற்றப்படும். இளமையான, வலிமையான அரசு அமைய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.

அக்டோபர் மாதத்தில் தொடங்கும் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து

வரும் அக்டோபர் மாதம், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ர‌யில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ரெயில்களும் ஓரிரு மாதங்களில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன. தற்போது கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரையிலும் ரயில்கள் மேல்மட்ட பாதையில் இயக்கப்பட்டு இறுதி கட்ட சோதனைகள் நடக்கிறது.

கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரெயில்கள் இயக்கப்படுகிறது. விரைவில் ஆலந்தூர் வரை உள்ள 7 ரெயில் நிலையங்களிலும் ரெயில் நின்று செல்வது, சிக்னல்கள் செயல்பாடுகள் குறித்தும் சோதனை செய்யப்பட உள்ளது. தற்போது அசோக்நகர் வரை வெற்றிகரமாக சோதனைகள் நடந்து இருக்கிறது.

கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கிண்டி மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட ஒரு சில ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகளை செய்து வந்த ஒப்பந்தகாரர்களுக்கும், மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது வேறு ஒப்பந்தகாரர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களுக்கு பதிலாக அக்டோபர் 2-வது வாரத்தில் வணிக ரீதியாக போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால், மோடி பொதுமக்கள் முன்பு தூக்கிலிடப் படவேண்டும்; மன்னிப்பு கூடாது - மோடி ஆவேசம்

நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் கலவரத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்களே..? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, "இந்த மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் என்ன நடைமுறை?  மன்னிப்பு கேட்பதும் இருக்கக் கூடாது. மோடி மன்னிக்கப்படவும் கூடாது. இதைப் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வாகி விட முடியாது. இந்த குற்றச்சாட்டில் ஒரு எள் அளவு உண்மை இருந்தாலும், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில், பொதுமக்கள் முன்பு மோடி தூக்கிலிடப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இதைப்போன்ற தவறை செய்ய யாரும் துணியாத வகையில், அந்த தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குற்றம் செய்திருந்தால், மோடி மன்னிக்கப்படவேக் கூடாது." என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media