BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 March 2014

ஆண்டிப்பட்டி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஒரு இடத்தில்,  தனியாருக்கு சொந்தமான  தோட்டத்தில் இன்று காலை ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது முகத்தை கூட அடையாளம் காணமுடியவில்லை.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அரசு மருத்துவமனையை சேர்த்த மருத்துவர்கள், அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த பகுதியில் காணாமல்போன பெண்கள் குறித்தும் போலீசார் விபரம் சேகரித்தனர்.

வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்கு ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்



வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா உள்பட 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கருணை மனு மீது காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டதை காரணம் காட்டி 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதை சுட்டிக் காட்டி பிரிவு 21-ன்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரித்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பிறகு அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. பிரிவு 72-ன்படி கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தபிறகு நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்புக்கு உள்பட்டதாகி விடுகிறது. ஒருவேளை உரிய காரணம் இன்றி கருணை மனு நிராகரிக்கப் பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதினால் அந்த கருணை மனு குடியரசுத் தலைவரின் மறுஆய்வுக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை காலதாமதத்தை காரணம் காட்டியிருப்பதால் குடியரசுத் தலைவருக்கே மீண்டும் பரிந்துரைத்திருக்கலாம்.

தீவிரவாத செயல்கள் தொடர்பான தடா உள்ளிட்ட சட்டங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது

அதிகரித்தது காய்கறி விளைச்சல், வீழ்ச்சியடைந்தது விலைகள்


பிற மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டில் உள்ள அங்காடிக்கு வ‌ரும் காய்கறிகளின் வரத்து கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வருகின்ற காரணத்தால், காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது.

இதுப்பற்றி, கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் சௌந்திரராஜன் கூறுயதாவது:

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சில்லறை விலையில், கிலோ ரூ.100- க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.15-க்கும், ரூ. 25- க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.12- க்கும், ரூ.40-க்கு விற்ற தக்காளி ரூ.7- க்கும் கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.

அதே போல் ஒரு மாதத்துக்கு முன் ரூ.15 க்கு விற்ற ஒரு முருங்கைகாய், தற்போது ரூ.2 க்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் கிலோ 10 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், புடலங்காய், கேரட்ஆகியவை கிலோ 20 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன என்று கூறினார்.

மேலும், சராசரியாக 220 முதல் 240 காய்கறி லோடுகள் வரை கோயம்பேடு சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது 300 முதல், 350 லாரிகள் வந்துக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை கடற்படையினர் மீது ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு


கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் ஒரு விசைப்படகில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்து, படகுகளை சேதப்படுத்தியும் சென்றனர். இது குறித்து விசைப்படகின் உரிமையாளர் சகாயராஜ் கடந்த பிப்ரவரி 2 அன்று ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுபோல கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பாம்பன் நாட்டுப்படகு மீனவர் ஜான் பிரிட்டோ பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை நெடுந்தீவு மீனவர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் ஜான் பிரிட்டோவின் வலைகளை அபகரித்துச் சென்றனர். இதுகுறித்து ஜான் பிரிட்டோ பாம்பன் காவல் நிலையத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் இலங்கை கடற்படையினர் மீதும், 24 தினங்கள் கழித்து பாம்பன் காவல்துறையினர் இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்டாலினை, மோடி வணங்குவது போல் போஸ்டர், போலீஸிடம் சென்ற பாஜக‌


 திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில்,  மு.க. ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் மன்மோகன்சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சிரம் தாழ்த்தி வணங்குவது போல படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

இந்தப் போஸ்டருக்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாகக் கூறி பாஜக சார்பில் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுப்பற்றி விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

8 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற ஆசாமி கைது

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த  8 வயது சிறுவனை காணவில்லை என அவனது தாயார் கடந்த மாதம் 12-ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அதே கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் புதர்களுக்கிடையில் அந்த சிறுவன் பிணமாக கிடந்தான். இந்த மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், அதே கிராமத்தில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் செண்ட்ரிங் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமன் பட்டேல் என்பவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது, தான் அந்த சிறுவனை தோட்டத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் துணியால் அவனது கழுத்தை நெறித்து கொன்றதாக அவன் ஒப்பு கொண்டு இருக்கின்றான். இதன் பேரில், ரமன் பட்டேல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

ராகுல் காந்தியின் கண்டனத்தையும் மீறி, இனி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோடியை ஆண்மையற்றவர் என்றே அழைப்பேன் என்கிறார் சல்மான் குர்ஷித்


உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி,  ஏன் அதை தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர் என்று கடுமையான‌ வார்த்தைகளால், மோடியை தாக்கி பேசினார்.

காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தியுமே கூட‌, சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது என கூறினார்.

கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சல்மான் குர்ஷித் உத்தரபிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான பருக்காயத்தில் கூறியதாவது :-

"நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது தன் கடமையை செய்ய தவறி விட்டார். முதல்வர் பதவிக்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. கடமையை செய்யாமல் தன் பொறுப்பில் இருந்து தோல்வி அடைந்தவரை ஆண்மையற்றவர் என்றுதான் சொல்வேன். அவரை வேறு எப்படி சொல்ல முடியும்? இன்று மட்டுமல்ல அவர் பற்றி பேசும் போதெல்லாம் நான் இப்படித்தான் சொல்வேன்.",என மறுபடியும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

சல்மான் குர்ஷித்தின் பேச்சு அநாகரீகமாக உள்ளது என நினைத்தால், உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று, மாட்டுக் கொட்டகையில் புதைத்த மனைவி கைது

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள கீழவன்னிப்பட்டு தேவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 65) என்பவரது மனைவி காந்திமதி (47).  காந்திமதிக்கும் வேறொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மது அருந்தி விட்டு வந்த ஆறுமுகத்திற்கும், காந்திமதிக்கும் இடையே வழக்கம் போல சண்டை ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த காந்திமதி உருட்டுக்கட்டையால் ஆறுமுகத்தைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆறுமுகத்தின் சடலத்தை அவர்களது வீட்டு மாட்டுத் தொழுவத்திலேயே புதைத்துள்ளார், காந்திமதி. சில தினங்களிலேயே மாட்டுக் கொட்டகையிலிருந்து துர்நாற்றம் கிளம்பவே, மீண்டும் ஆறுமுகத்தின் சடலத்தை தோண்டியெடுத்து சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசியுள்ளார். சந்தேகத்துக்குரிய வகையில் சாக்குமூட்டை ஒன்று தெருவில் கிடப்பதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழுகிய நிலையில் ஆறுமுகத்தின் உடலை மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காந்திமதி கதறி அழுதபடி தனது கணவரை யாரோ அடித்துக்கொன்று பிணத்தை இங்கு வந்து வீசிச்சென்று விட்டதாக அழுது நாடகமாடியுள்ளார். ஆறுமுகம் கொலை தொடர்பாக ஊர் மக்கள் மற்றும் காந்திமதியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த காந்திமதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் காந்திமதியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கணவர் ஆறுமுகத்தைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். தற்போது காந்திமதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media