BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 March 2014

வான்வழிப் பயணம் ஏன்?- சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு ஜெ. பதில்


மதுரை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் சிதம்பரம் தான் வான்வழியாகவே பயணிப்பதை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

மேலும் அவர் பேசுகையில், ‘வான் வழியாகச் செல்பவர்களுக்கு மண்ணில் நடப்பது தெரிய வாய்ப்பில்லை என எண்ணை விமர்சனம் செய்திருக்கிறார் சிதம்பரம். அவருக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். 1982 முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் எனது கால்படாத இடமே இல்லை என்னும் அளவுக்குப் பட்டி, தொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மாதக்கணக்கில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

சிதம்பரத்துக்கு வாக்குகேட்டு அவருக்காகக் கூடப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யும்போது சிதம்பரம் திறந்த ஜீப்பில் பின்னால் வந்தார். தற்போது குறைந்த காலத்தில் அனைத்து தொகுதிக்கும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும், சாலை வழியாகச் சென்றால் காவலர் பணிச்சுமை கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும்தான் வான்வழியாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது 27.3.2009 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் என்ன குறிப்பிட்டார் என்பதையும் அதற்கு நான் என்ன பதில் எழுதினேன் என்பதையும் சிதம்பரம் படித்துப் பார்க்க வேண்டும். விரக்தியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ .

இவ்வாறு ஜெயலலிதா பேசியிருந்தார். 

குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல, வடிவேலு தான் நல்ல மனுஷன்-பால்ராஜ்



தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் "விஜயகாந்த் தனது அண்ணன், தம்பிக்கே ஏதும் செய்யவில்லை, நாட்டுக்காக அவர் என்ன செய்து விட போகிறார்?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல.. எங்களின் சகோதரர் ராமராஜ் மகனுக்கே ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. எங்கள் சகோதரி மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும் செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்) ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.

ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான் அடிக்கடி கேட்குற பாட்டு’

இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்... ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை, பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’

இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் பால்ராஜ்.

ரயில்களில் பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கை களுக்கு 3 ஆண்டு சிறை



எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. பயணிகளிடம் பணம் கேட்டு சிலர் தொல்லை செய்கின்றனர். காசு தராதவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

ர‌யில்களில் திருநங்கைகளின் பணம் பறிக்கும் செயலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருத்தணி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் புறநகர் ரயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் பாதுகாப்புக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளிடம் திருநங்கைகள் அச்சுறுத்தி பணம் பறித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 384-வது பிரிவின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 508-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யும்போது, நீதிமன்றம் வெறுமனே 500 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கிறது. இனிமேல் சட்டப்பிரிவு 384 பயன்படுத்தப்படும்’’ என்றார்.

‘அச்சம் என்பது மடமையடா’ பாடலை ஜெ. இனிமேல் பாடக்கூடாது-ப.சிதம்பரம்



சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு தேமுதிக, அதிமுக கட்சியினர் அக்கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் தரும் வகையில் ப.சிதம்பரம் பேசியது:

பாஜகவுக்கு காவடி தூக்க தமிழகத்தில் 3 கட்சிகள் உள்ளன. பாஜகவுக்கு காவடி தூக்கமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள தேமுதிக இளைஞர்களை வரவேற்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள மேடைக்கும் தனி குட்டி விமானத்தில் பயணம் செய்கிறார். தரையில் கால்பதிக்காமல் செல்லும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வருகிறேன் என்கிறார். அவருக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அச்சுறுத்தலால் விமானம் அல்ல. நெஞ்சில் அச்சம் என்பதால்தான் விமானம். பிரதமருக்கு அச்சுறுத்தல் இல்லையா. சோனியா காந்திக்கு அச்சுறுத்தல் இல்லையா. நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது நக்சலைட் பகுதியில் பயணம் செய்தேனே, எனக்கு அச்சுறுத்தல் இல்லையா? யாருக்கு அச்சுறுத்தல் இல்லை. நெஞ்சில் அச்சமுள்ள ஜெயலலிதா, இனிமேல் அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாடக்கூடாது.

காங்கிரஸ் மீதும், என் மீதும் தொடர்ந்து தமிழக முதல்வர் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு வருகிற 3-ம் தேதி சிவகங்கையில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் விரிவான பதிலை அளிக்கவுள்ளேன் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

விஜயகாந்தை பற்றி சிதம்பரம் பேசியதாவது:

விஜயகாந்த் எனக்கு நண்பர்தான். விமானத்தில் வரும்போதும், போகும்போதும் விஜயகாந்த் எனக்கு பழக்கமானவர்.
நான் சினிமா பார்ப்பதில்லை. விஜயகாந்தும் நடிப்பதை நிறுத்தியுள்ளதாக சொல்கிறார். சென்னையில் பேசும்போது நான் ஊழல் செய்துள்ளதாக விஜயாகாந்த் பேசியுள்ளார். யாரோ பேசிய பேச்சு, விடிஞ்சா போச்சு என்பார்களே. அதுபோல் கருதி அவரை உங்கள் சார்பாக மன்னித்துவிடுகிறேன் என்றார்.

விடுதலைப் புலிகளுக்கு களங்கம் செய்யும் 'இனம்' படத்தை, தமிழகத்தில் திரையிடக் கூடாது-வைகோ


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு களங்கம் செய்யும் 'இனம்' படத்தை, தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
'இனம்' (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். 'பயங்ரவாதி' என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.
இப்பொழுது அவர் இயக்கிய 'இனம்' எனும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அதுகுறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.
ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத் தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.
சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன. அச்சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.
பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குளத்துத் தண்ணீரில் அந்தப் பெண் நிற்கும்போது உடைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலையின் தலையும் முகமும் கரையில் தெரியும் வகையில் காட்டப்பட்டுள்ளது.
இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.
இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான் நோக்கம் ஆகும்.
இலங்கையில் கடந்த 66 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கும், போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டதற்கும், ஐ.நா. சபை பிரதிநிதிகள் தாக்கப்பட்டதற்கும், இரத்த வெறிபிடித்த புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
2170 இந்து கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தகர்க்க புத்து பிட்சுகளே ஏவினார்கள். கிறித்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டதற்கும், அண்மைக் காலமாக இசுலாமிய மசூதிகள் தாக்கப்படுதற்கும் முழுக்க முழுக்க புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.
மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ் சிவன் படத்தை இயக்கி உள்ளார்.
சமீப காலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நிருபிக்கின்றன. அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கோர காட்சிகளை கண்களால் காண முடியாது. அந்த சம்பவம் பற்றி நாவால் கூற முடியாது. காதுகளால் கேட்க முடியாது.
நெஞ்சு கொதிக்கிறது. தன்மானத் தமிழ் இரத்தம் துடிக்கிறது. மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?
தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?
இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.
உன்னதமான திரைக் காவியங்களை நான் பெரிதும் மதிப்பவன். ஏன், மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'செம்மீன், வடக்கன் வீரகதா 1921, நாயர் ஷாப், துலாபாரம், பழசிராஜா' போன்ற படங்கள், சிறந்த கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்கள் போன்றவற்றின் பரம இரசிகன் ஆவேன் நான். மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.
ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் 'இனம்' எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு 'இனம்' திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வைகோ கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குடிநீரை விற்ற வரலாறு கிடையாது-ஸ்டாலின்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம.செந்தில்நாதனை ஆதரித்து நேற்று ஸ்டாலின் பேசியதாவது:

திருப்பூரை மாவட்டமாக்கியது திமுக. மூன்று ஆண்டுகள் ஆகியும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படவில்லை. கோவை, திருப்பூரில் ரூ.800 கோடி அளவிற்கு காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வெளி மாநிலத்தில் அதிக விலைகொடுத்து தனியார் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். மின் பிரச்சினையில், பிரச்சினை தீர்க்கப்படும்...பற்றாக்குறை போக்கப்படும் என இன்னமும் பழைய பல்லவிதான் பாடிக்கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் மின்வெட்டு 2 மணிநேரம். ஜெயலலிதா ஆட்சியில் 24 மணிநேரமும் மின்வெட்டு இருக்கிறது.

ஜெயலலிதாவைப்போல் வாய்க்கு வந்ததைப் பேசவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை, காணொளிக்காட்சிதான் நடக்கிறது.

சேதுசமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பல நன்மைகள் கிடைத்திருக்கும். திமுகவின் சாதனைகளை பட்டியல் போடலாம். ஆனால், அந்த தகுதி அதிமுகவுக்கு உண்டா? தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குடிநீரை விற்ற வரலாறு கிடையாது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மோடியை கொன்று விடுவேன் எனக் கூறிய வேட்பாளரை கண்டித்த ராகுல்


உத்தரப் பிரதேசத்தில் நேற்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சஹரான்பூரிலும் பேசுவதாக இருந்தது. மோடியை கொன்று விடுவேன் என கூறிய அத்தொகுதி  வேட்பாளர் இம்ரான் மசூத் விவகாரத்தால் அவர் சஹரான்பூர் கூட்டத்தைப் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் திட்டமிட்ட படி சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். பொதுக்கூட்ட மேடையில் இம்ரான் மசூத்தின் மனைவி ஷைமா அமர்ந்திருந்தார்.

முன்னதாக காஜியாபாத் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மசூத் இவ்வளவு கடினமான வார்த்தைகளால் பேசியிருக்கக்கூடாது. அவரது பேச்சு காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் கோபம் கொள்வது கிடையாது. எங்களது பணிகளை அமைதி, அன்புடன் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி இதே கருத்தைத் தெரிவித் தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்று காங்கிரஸ் தலைவர்கள் ஆத்திரப்பட்டு பேசுவது கிடையாது என்று அவர் கூறினார்.
மோடிக்கு எதிரான மோசமான விமர்சனத்தால் சஹரான்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media