BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 June 2014

தாய் நாட்டிற்காக ஸ்பெயின் அணியில் விளையாடும் வாய்ப்பை மறுத்த மெஸ்ஸி !!

கடந்த காலங்களில் மெஸ்ஸி நாட்டிற்காக சரியாக ஆடவில்லை , நாட்டிற்கு ஆடும் போது பார்சிலோனா அணிக்கு விளையாடும் அந்த உற்சாகம் இல்லை என பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார் .

இதைப் பற்றி அவர் "மெஸ்ஸி தி பாட்ரியாட்" என்னும் புத்தகத்தில் , சொந்த நாட்டு மக்கள் இவ்வாறு கூறுவது வேதனையளிக்கிறது . எனக்கு ஸ்பெயின் நாட்டு அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது , ஆனால் மறுத்து விட்டேன் , ஏனென்றால் நான் என் நாட்டை நேசிக்கிறேன் , என் நாட்டின் நிறத்தை தான் அணிய விரும்புகிறேன் . நான் அர்ஜெண்டினா அணியின் தீவிர ரசிகன் என்று தெரிவித்துள்ளார் .


பண்ணையார் கால காங்கிரசாகும் திமுக - சிறப்பு கட்டுரை


இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டுள்ளார் திமுகவின் தலைவர் மு.கருணாநிதி, அதை மகிழ்ச்சியாக கொண்டாடுவாரா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மகிழ்ச்சி பறிபோனது வெறும் தேர்தல் தோல்வியால் என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம், எம்ஜிஆர் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த போதும், ராஜீவ்காந்தி கொலையை அடுத்து மோசமாக தோற்றபோதுமே கலங்காத கருணாநிதியா இந்த தோல்விகளுக்கு கலங்கப்போகிறார். இல்லை தான் ஆனால் அப்போதெல்லாம் தோற்றுப்போனாலும் கழகம் கட்டுக்குலையாமல் இருந்தது. தற்போது கழகம் கட்டுக்குலைந்து போய் கட்டுபாடற்று கழகமே இல்லாத நிலையாகிவிடுமோ என்ற கவலை இருக்கும் கருணாநிதிக்கு.

பண்ணையார் கால காங்கிரசில் எப்போதும் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பம் என்று மாவட்டத்துக்கு ஒரு குடும்பம் கோலோச்சும், அந்த குடும்பத்திலிருந்து தான் எப்போதும் மாவட்ட தலைவர்கள் வருவார்கள், எம்.எல்.ஏ வாக இருந்தாலும், எம்பி ஆக இருந்தாலும் சேர்மேன் ஆக இருந்தாலும் எல்லாமே அந்த குடும்பத்திற்கு தான் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டும், தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்களாகவே இருக்க வேண்டும், ஓட்டு கேட்பதை கூட காரிலிருந்து இறங்காமல் ரோட்டில் நின்றே கேட்டுவிட்டு போய்விடுவார்கள்.

காங்கிரசின் இந்த போக்கு பிடிக்காமல் இருந்த இளைஞர்கள் தான் திமுக தொடங்கப்பட்ட உடன் சாரி சாரியாக இளைஞர்கள் திமுகவினுள் இணைந்து கொண்டனர், இளைஞர்களின் தன்னலமில்லா உழைப்பும் யார் வேண்டுமானாலும் அரசியலில் சாதிக்கலாம், குடும்ப பாரம்பரியம், பணம் தேவையில்லை என்று மாற்றத்தை கொண்டுவந்தது திமுக, ஆனால் இன்று அந்த திமுகவா உள்ளது?

குறுநில மன்னர்களை போல மாவட்டத்துக்கு மாவட்டம் காலம் காலமாக அதே மாவட்ட செயலாளர்கள், அதே மந்திரிகள், மாவட்ட செயலாளர் இறந்து போனால் அவரது மகன் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ போனால் அவரது மகன் எம்.எல்.ஏ, எம்பி போனால் அவரது மகன் எம்பி, மந்திரி போனால் அவரது மகன் மந்திரி என்றிருந்தால் தொண்டர்கள் வெறும் போஸ்டர் ஒட்டவும், பூத் ஏஜெண்ட்டுக்கும் மட்டும் தானா என்ற கேள்வி அனைவரிடம் எழுந்ததால் தான் சொந்த கட்சி காரர்களே கடந்த தேர்தலில் உற்சாகமின்றி வேலை செய்தார்கள், கழகத்தினரே வேட்பாளார்களிடமும் மா.செ.களிடமும் கட்சி வேலை செய்ய காசு கேட்டார்கள்.

தேர்தல் உள்ளடி வேலைகளுக்கு பண்ணையார் காங்கிரஸ் பெயர் போனதென்றால் தற்போது திமுக அதையும் தாண்டி செயல்படுகிறது, திமுகவினர் கூட்டணி கட்சிகளுக்கு தான் முன்பு உள்ளடி வேலை செய்தார்கள், தற்போதோ சொந்த கட்சிக்கே தங்களை தாண்டி யாரும் கட்சியில் வளரக்கூடாது என்று பலவீனமான வேட்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் நிறுத்த செய்தார்கள், அதையும் தாண்டி யாரும் நின்றால் உள்ளடி வேலைகள் செய்து தோற்கடிக்கின்றார்கள் இதை தட்டி கேட்கவும் கண்டிக்கவும் இயலாத பலவீனமான தலைமையாக கருணாநிதி உள்ளார்.

2ஜி ஊழலால் தான் தோற்றது என்று இந்த தேர்தலுக்கும் கனிமொழி மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் பழி போடுகிறார்கள், 1991-96ல் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஊழல் குற்றச்சாட்டுகளால் கடுமையாக பெயர் கெட்டு போயிருந்தது, 96ல் ஜெயலலிதாவே தோற்று போனார் ஆனால் 1998ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது, ஊழல் குற்றச்சாட்டுகள் கட்சியின் பெயரை கெடச்செய்கிறது என்றாலும் கூட கட்சியின் அமைப்பில் ஏற்பட்டுள்ள தொண்டர்களின் நிர்வாகிகளின் சோர்வே மிகப்பெரிய தோல்வியை திமுகவுக்கு தந்துள்ளது.

அதிமுக  எதிர்கட்சியாக இருக்கும் போது தலைவி கொடநாட்டிற்கு ரெஸ்ட் எடுக்க போய்விடுவார்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் தங்கள் பிசினசில் பிசியாகிவிடுவார்கள், தொண்டர்கள் கூட ரெஸ்ட் எடுக்க போய்விடுவார்கள், தேர்தல் நெருங்கும் வரை அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு அமைதியாக இருப்பார்கள், ஆனால் திமுகவினரோ தேர்தலில் தோற்று எதிர்கட்சியாக இருக்கும் போது தான் போராட்டங்கள் நடத்துவது, அறிக்கைகள் அளிப்பது என பிசியாக இருப்பார்கள், ஆனால் 2011ல் திமுக தோற்றபின் மூன்று ஆண்டுகளாக திமுகவினர் எங்கே உள்ளார்கள் என்று தேடும் அளவிற்கு அமைதியாக உள்ளார்கள்.

அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அமைச்சரை மாற்றுகிறார்கள் என்று திமுகவினர் கேலி பேசுகிறார்கள், ஆனால் பொதுமக்கள் மத்தியிலோ இன்றைக்கு மந்திரி நாளைக்கு எந்திரி யாரும் அம்மா ஆட்சியில் ஆடமுடியாது என்று சொல்லி அதையே பாசிட்டிவாக பார்க்கிறார்கள்.

திமுக இந்த தேர்தலில் வாங்கிய இந்த வாக்கு சதவீதம் கூட திமுகவிற்கு இணையான மாற்று கட்சி என்று எக்கட்சியின் மீதும் மக்களுக்கு இதுவரை பெரிய நம்பிக்கை வராததால் தான் இந்த இரண்டாவது இடம் கூட,  அந்தந்த சில மாவட்டங்களில் மட்டும் கொஞ்சம் பலமாக இருக்கும் தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக போன்ற கட்சிகள் மூன்றாவது அணி என்று இணைந்து வாங்கிய வாக்குகள் திமுகவின் வாக்குகளுக்கு இணையாக வாக்குகள் வாங்கி உள்ளன என்பது திமுக தலைமை கவனிக்க வேண்டியது.

திமுக தலைமை அடியோடு மாநிலம், மாவட்டம், வட்டம், நகரம், கிளைக்கழகம் வரை பழையவர்களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டு புரட்டி போட்டால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் இல்லையென்றால் கழகம் காலியாகிவிடும், ஆனால் செய்வாரா கருணாநிதி?

இந்த கட்டுரையை நீங்கள் சரி என்று கருதினால் ஷேர் செய்யுங்கள்

எட்வர்ட் ஸ்னோடென் வாழ்க்கை படமாகிறது !!!

மெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் . இப்போது அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து வெளியிட ஆஸ்கர் விருது வென்ற ஆலிவர் ஸ்டோன் முடிவு செய்துள்ளார் .

ஸ்னோடன் தன் வாழ்வில் எடுத்த ஆபத்தான முடிவுகளை வைத்து கதை எழுதி அதை படமாக வெலியிட ஆலிவர் ஸ்டோன் முடிவு செய்துள்ளார் . 


பெண் நீதிபதி கற்பழிக்கப்பட்டார்!


உத்தர பிரதேச மாநிலத்தில், சில தினங்களுக்கு முன்பு தான், இரு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்வம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அடங்காத நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் நீதிபதி கற்பழிக்கப்பட்டு, நேற்று மயக்க நிலையில் கிடந்திருக்கிறார். அவர் பலத்த காயங்களுடன் காணப்பட்டார்.  அப்பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடைத்தது. நீதிபதியை கற்பழித்தவர்கள், அவரை கொல்வதற்காக, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்த சொல்லி வற்புறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீதிபதியின் நிலை தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதால், சம்பவம் குறித்து மேலும் தகவல்களை அறியப்படவில்லை.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, தமிழக முதல்வர் பேசியது என்ன?


டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

"தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினேன்.

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இதற்கு, ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக, என்னிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக கூறினார்.

சென்னையில் உள்ள முக்கிய இடங்களின் ஊர் பெயர்கள் வந்ததன் பின்னணி


சென்னை: -

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.


மதராஸ் :-

முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.


கோடம்பாக்கம் -

கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.


மாம்பலம்:

மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :-

ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.


சைதாப்பேட்டை: சதயு புரம் :

சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.


கிண்டி:-

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.


பரங்கிமலை:-

ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).


சேத்துப்பட்டு:

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.


எழுமூர்:

இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.


ராயபுரம்:

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.


சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :

சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.


தண்டையார்பேட்டை :

பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.


புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:

புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.


அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:

ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.


செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :

செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.


பெருங்களத்தூர் :

பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.


பல்லாவரம்:

பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.


பரங்கிமலை:-

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.


பூந்தமல்லி :

பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.


நந்தம்பாக்கம்:

நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.


ராமாபுரம்:

ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.


போரூர்:

முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.


குன்றத்தூர்:

குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).


ஸ்ரீ பெரும் பூதூர்:

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.


சுங்குவார் சத்திரம்:

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.


நந்தனம்:-

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.


யானை கவுணி :

திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.


மாதவரம்:

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.


வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:

முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.


ஈக்காட்டுதாங்கல் :

ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......


முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.


முகலிவாக்கம் :

கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.


அயனாவரம்:

அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினால் தற்கொலை செய்த மாணவரின் பெற்றோரிடம் ரூ. 1லட்சம் வழங்கினார் ஞானதேசிகன்


கடந்த மாதம் 16–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மனம் உடைந்த அரியலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வினோத் (29) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது படத் திறப்பு விழா வீரக்கன்னில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டு வினோத்தின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் வினோத் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் நிதியை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வெற்றி தோல்வியை மனித வாழ்வில் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாஜ்பாய்க்கு பின் பா.ஜனதாவே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பான்மையுடன் மோடி பிரதமர் ஆகியுள்ளார். நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும். தோல்வி நிலையானது அல்ல. தோல்வியில் துவண்டு தொண்டர்கள் உயிரை விடுவது சரியல்ல. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிய சென்னையில் வருகிற 7–ந் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

முல்லைப் பெரியாறு விவகாரம், ஒன்றுமே இல்லாதது. தமிழகத்துக்கு எப்போதுமே தண்ணீர் தர நாங்கள் தயார்!- கேரள முதல்வர் உம்மன் சாண்டி

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, "நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து அனைத்துவிதமான வகைகளிலும் உறுதி அளிக்கிறோம்." என்று கூறினார்.

முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேட்டியின் போது அவர் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு விவகாரம், ஒன்றுமே இல்லாதது. நாங்கள் தமிழகத்துக்கு எப்போதுமே தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், அணையின் பாதுகாப்பு குறித்துதான் நாங்கள் அச்சப்படுகிறோம். அணை எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? சாதாரண சூழ்நிலை என்றால் சரி. ஆனால், அசாதாரணமாக ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது? தவிர, அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படும் பூமியில் அச்சம் இல்லாமல் மக்கள் எப்படி வசிக்க முடியும், சொல்லுங்கள். அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) கடுமையாக பாதிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்காக 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டிருப்பதால் அதனை அத்தனை ஆண்டுகள் பயன்படுத்த முடியுமா என்ன? ஒரு அணையின் ஸ்திரத் தன்மையைப் பொறுத்துதான் முடிவு எடுக்க வேண்டும். அப்படிதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முடிவு எடுத்தோம்.

நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து அனைத்துவிதமான வகைகளிலும் உறுதி அளிக்கிறோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித் தர தயார். புரிந்துணர்வு ஒப்பந்தமா? வாருங்கள் அதையும் போட்டுக்கொள்வோம். மத்திய அரசைக் கொண்டு முத்தரப்பு கமிட்டி அமைத்தும் தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம். இன்னும் வேறு எந்த வகையானாலும் சரி. அனைத்துக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். தண்ணீர் பகிர்மானம் விஷயத்தில் நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்பட மாட்டோம். அதனை விசாரித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

விரைவில் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பலமான இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்கும்-ஜி.கே.வாசன்


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "மத்தியில் மாற்று அரசு அமைய வேண்டும் என்று மக்களிடம் இருந்த தாக்கமே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம்." என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங் களின் மூலம் மக்களுக்கு ஏராள மான பலன்கள் கிடைத்துள்ளன. மக்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனி ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான கோட்பாடுகளை, காங்கிரஸ் உயர்நிலைக் குழு உருவாக்கும். அதன்மூலம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பலமான இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்கும். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஒருசேர இயக்கப் பணிகளை திறம்பட மேற்கொண்டு கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார் கருணாநிதி- எஸ்.வி.சேகர்


இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், நடிகர் எஸ்.வி.சேகர். அப்போது, கிளி மூக்கு கொண்ட சுக பிரம்ம மகரிஷியும் மார்க்கண்டேயரும் அமர்ந்திருக்கும் புகைப்பட அட்டையை கருணாநிதியிடம் அவர் கொடுத்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: முதன்முதலாக 1992-ல் கருணாநிதியிடம் சுக பிரம்ம மகரிஷியின் இந்த படத்தை அளித்தேன். இது யார் என்றார். ‘‘ஐயா, இவர் குபேரனுக்கே வெங்கடாஜலபதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்த சுக பிரம்ம மகரிஷி. அவர் மார்க்கண்டேயருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது’’ என்றேன்.

அதற்கு அவர், ‘‘இப்படி கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்?’’ என்றார். ‘‘இதைவிட பெரிய மூக்குள்ள பெண்ணைப் பார்த்துவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறவும், சிரித்துவிட்டார். அவரை சந்திக்கும்போதெல்லாம் இந்த படத்தைக் கொடுப்பேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார். அவர் பகுத்தறிவுவாதியாக, மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

கோபிநாத் முண்டே மறைவு தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது-வைகோ

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"மராட்டிய மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், இந்நாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டே அவர்கள் இன்று காலையில் டில்லி விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்தில் உயிர் நீத்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

தன்னுடைய கடுமையான உழைப்பாலும் அனைவரையும் வசீகரிக்கின்ற இயல்பாலும் படிப்படியாக வளர்ந்து, கோபிநாத் முண்டே மராட்டிய மாநிலத்தின் மதிக்கத்தக்க தலைவர் ஆனார்.

அவரது மைத்துனரான பிரமோத் மகாஜன் மத்திய அமைச்சராக பணியாற்றிய காலங்களில் நான் கோபிநாத் முண்டே அவர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

கடந்த 26 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்ற ஒரு வார காலத்திற்குள் கோபிநாத் முண்டே விபத்தில் பலியான செய்தி அவரது துணைவியாருக்கும், மூன்று புதல்வியருக்கும், குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தாங்க முடியாத பேரிடியாகிவிட்டது.

அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்

முண்டே அவர்களின் மறைவால் கண்ணீரில் துடி துடிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். -ஜெயலலிதா


இன்று கார் விபத்தில் மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

"மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான முண்டே, கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்தார்.அவரது மறைவு மகாராஷ்டிர மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரது மறைவு மூலம் இந்திய மக்கள் குறிப்பாக மகாராஷ்டிர மாநில மக்கள் ஒரு நல்ல தலைவரை, ஒரு சிறந்த மனிதாபிமானியை, ஒரு உண்மையான தேசியவாதியை, சமுதாயத் தொண்டாற்றிய நபரை இழந்து விட்டனர்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரத்தில் இருந்து வெளிவர எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தர வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media