அழகிரியின் வலதுகரமாக விளங்கிய எஸ்ஸார் கோபி, தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
எஸ்ஸார் கோபியின் இந்த அதிரடி நடவடிக்கை, அழகிரி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து கோபி கூறியதாவது:
அழகிரியின் ஆதரவாளனாக அவருடன் பல ஆண்டுகளாக இருந்தேன். சமீபகாலமாக அவர் கட்சியை விமர்சித்து பேசுவதுடன், கட்சித் தலைவர் மனது புண்படும்படி தொடர்ந்து நடந்துகொள்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இது குடும்பப் பிரச்சினைதான். சரியாகி விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கட்சியை விமர்சிப்பதும், தேர்தலில் திமுக தோற்கும் என்று கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. திமுகவை மிக மோசமாக விமர்சித்த வைகோவை சந்திப்பதும் அவருக்கு ஆதரவு தருவதும் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போதைய நிலையில் எங்களுக்கு அழகிரியைவிட திமுகவும், தலைவரும், தளபதியும்தான் முக்கியம். என்னைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதியை சந்திக்க வருவார்கள்.
என் மீது பல வழக்குகள் இருப்பது உண்மைதான். யாரால் என் மீது வழக்கு வந்தது? அழகிரியுடன் இருந்ததால்தானே இத்தனை வழக்குகளையும் சந்தித்தேன். வழக்குகளிலிருந்து விடுபடத்தான் திமுக தலைமையுடன் இருக்கிறேன் என்று கூற முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு என் மீது 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் 100 வழக்குகள் போட்டாலும் கட்சியையும், தலைமையையும் விட்டுத் தர மாட்டேன்.
இவ்வாறு எஸ்ஸார் கோபி கூறினார்.