சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன், பெயர் ஹர்சன், 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ரோபோ கருவி உதவியுடன் மீட்கப்பட்டான்.
ரோபோவில் பொருத்தப்பட்ட மனிதனின் கை போன்ற இரு ராட்சத கைகளை, ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தி, ஹர்சனை மீட்க முயற்சிக்கப்பட்டது. சிறிது உயரம் தூக்கிய நிலையில் சிறுவன் நழுவி கீழே விழுந்தான். மீண்டும் முயற்சி செய்ததில், கருவியின் ராட்சத கைகள் ஹர்சனை கெட்டியாகப் பற்றிக் கொண்டன. தீவிர போராட்டத்துக்கு பின்,சிறுவன் பத்திரமாக வெளியே தூக்கிவரப்பட்டான். இதைப் பார்த்த மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோவை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டவர், மணிகண்டன் (வயது 42). அவர் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் தன்னை பாதித்ததாகவும், அவர்களைக் காப்பாற்றும் வகையில் கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என, இந்த ரோபோவை கண்டுபிடித்து இருக்கிறார்.
ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க ரூ.60, 000 ஆகும் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய மணிகண்டன், "கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத் துறைக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியிருந்தேன். இதற்காக எனது சொந்த காசை செலவிட்டு சென்னைக்குச் சென்று, கருவியின் செயல்விளக்கத்தை செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப் படவில்லை." என்று தெரிவித்தார்.