"சினேகாவின் காதலர்கள்" என்று ஒரு திரைப்படத்தை இயக்குனர் முத்துராமலிங்கம் புதுமுகங்களை வைத்து எடுத்து வருகிறார், ஆனால் இந்த படத்தின் தலைப்பிற்கு இது வரை நடிகை சினேகா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆனால் "சரவணன் என்கிற சூர்யா" என்று ஒரு படத்திற்கு பெயர் சூட்டினாலும் சூட்டினார் புதுமுக இயக்குனர் முருகராஜா, அவருக்கு சிக்கல் ஆரம்பித்தது.
நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணனாம், ஊரிலேயே அவர் ஒருவர் தான் சரவணனாம், இவர் ஒருவர் தான் சூர்யாவாம், "சரவணன் என்கிற சூர்யா" படத்திற்கு ‘கில்டு’ அமைப்பு தடை விதித்து, ‘ மேலும் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது நடிகர் சூர்யாவிடம் இருந்து "நோ அப்ஜெக்ஷன்" சர்ட்டிபிகேட் பெற்று வரும்படி தயாரிப்பாளரிடம் "கில்டு" அமைப்பினர் கூறினார்கள்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் நடிகர் சூர்யாவை அணுகியபோது "நோ அப்ஜெக்ஷன்" சர்ட்டிபிகேட் தரமுடியாது என்று சொன்னது மட்டுமின்றி படத்தின் டைட்டிலை மாற்றியே தீர வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இயக்குனர் முருகராஜா காவல்துறையில் ஒரு மனு அளித்தார், அதில் "சரவணன் என்கிற சூர்யா", என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறேன், இந்த படத்தின் தலைப்பை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது, ஆனால் நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு இப்போது கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, மேலும் நடிகர் சூர்யா ஏன் இதை பெரிது படுத்துகிறார் என்றே தமிழ் திரையுலக பிரபலங்கள் பேச ஆரம்பித்தனர், ஆனால் இயக்குனருக்கு தொடர் நெருக்கடிகளும், சூர்யாவை பகைத்துக்கொண்டு திரையுலகில் இருக்க முடியாத நிலை புதிய இயக்குனருக்கு ஏற்பட்டது, மேலும் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது, படத்தை எடுத்து முடித்தும் வெளிவர முடியாத நிலையில் சூர்யா போன்ற அரசியல், சினிமா தொடர்புகளுடைய பெரிய இடத்து ஆட்களோடு மோதி நஷ்டப்பட வேண்டாமென்று "சரவணன் என்கிற சூர்யா" வை "போஸ்பாண்டி" என்று மாற்றியுள்ளார், இந்த தலைப்பை தனது அடுத்த படத்துக்காக பதிவு செய்து வைத்திருந்தாராம் இயக்குனர்.
சினேகாவின் காதலர்கள் என்றே படம் வரும்போது "சரவணன் என்கிற சூர்யா" வந்தால் என்னவாம்? ஆனால் இந்த பிரச்சினையில் நடிகர் சூர்யாவும் குறிப்பாக நடிகர் சிவக்குமாரும் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாம், மேடைக்கு மேடை என் மகன் தூய ஆத்மா, பரமாத்மா என்று பேசும் நடிகர் சிவக்குமார் இந்த சாதாரண படத்தலைப்பிற்கு போய் தன் புஜபல பாராக்கிரம சக்திகளை ஒரு புது இயக்குனரிடம் காண்பித்து முடக்கியது திரை உலகில் நல்லவர்கள் என்று நம்பப்படும் சிவக்குமார், சூர்யா மீது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.