BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 January 2014

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு காரணம், அளவிற்கு அதிகமான மருந்துகள்

சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கான காரணங்கள் அவரது பிரதே பரிசோதனைக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அளவிற்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு இருக்கிறார் சுனந்தா என்றும், அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஓட்டல் அறையில் போலீசார்,  மன சோர்வை எதிர்க்க பயன்படும் மாத்திரைகள் நிறைய இருந்தன என்றும் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனையில், சுனந்தாவின் உடலில், 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ஆனால், அதனால் சுனந்தாவிற்கு மரணம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சுனந்தாவின் மரணம் பற்றி சசி தரூரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர் கொடுத்த வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுனந்தாவின் மரணத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் தெளிவாக தெரிந்து விடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேஜ்ரிவால் நடத்தும் தர்ணாவிற்கு 4000 போலீசார் பாதுகாப்பு

டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்களை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை ஏற்று போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடமையை செய்ய தவறிய போலீசாரை பணி நீக்கம் செய்ய‌ வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே வீட்டை முற்றுகையிடச் சென்றார் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர். 

மேலும், காவல் துறையை சீர் படுத்துவதற்காக நடத்தப்படும், இந்த 10 நாள் போராட்டத்தில், டெல்லி மக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் கேஜ்ரிவால்.

போலீசார் தடை விதித்துள்ள இந்த போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்து விட கூடாது என்பதால், 4000 போலீசார் காவலில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தர் பகுதிக்கு அதிரடிப்படையினரை டெல்லி போலீசார் வரவழைத்துள்ளனர்.

டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் அருகே இயங்கி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு அளித்த அங்கீகாரம், இந்திய மருத்துவக் கல்வி கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு, அக்கல்லூரி கல்லூரி மூடப்பட்டது. அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் எதிர்காலம் கேள்வி குறியானதால், மாணவர்கள், டி.டி. கல்லூரியை அரசு ஏற்று நடத்தக் கோரியும், தங்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி கே.கே.சசிதரன், டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கலாம் என்றும், அரசுக் கல்லூரிகளில் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் கூடுதல் இடங்களை ஏற்டபடுத்துமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஆம் அத்மி தனித்து நின்று போட்டியிடும்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் புதிதாக ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேரை புதிதாக சேர்க்கும் திட்டத்தில் அக்கட்சி உள்ளது.  மேலும், தமிழகத்தில் தனித்து ஆம் ஆத்மி போட்டியிடும் என்றும், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரங்க‌ள் பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் பிரசாந்த் பூஷண் அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக ஆகியவை ஊழல் நிறைந்த கட்சிகளாக உள்ளன என்று தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகளை பூஷன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய இந்தியா தவறிவிட்டது. இதுபோல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தவும் இந்திய அரசு தவறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுனந்தா மரணத்தின் பின்னனி

கடந்த 15ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் மத்திய அமைச்சர் சசி தரூரும், அவரது மனைவி சுனந்தாவும் சென்று இருக்கின்றனர். அப்போது அவர்கள், விடாமல் சண்டை போட்டு கொண்டே இருந்தனர் என்று சக பயணிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர்களின் வாக்குவாதம், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் மேஹருக்கும், சசி தரூருக்கும் இடையேயான தொடர்பு பற்றியே இருந்தது என தெரிய வந்துள்ளது. அதே விமானத்தில், மும்பையில் ஏறியிருக்கிறார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி. அவரும், இந்த தம்பதிகள் போட்டு வந்த சண்டையை கேட்டு கொண்டு இருந்தார் என தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்திலும் அவர்களது சண்டை முடியவில்லை.

பின்னர், 15ம் தேதி அன்றே, ஓட்டல் லீலா பேலஸிற்கு வந்த சுனந்தா, அழுது கொண்டே வந்தார் எனவும், அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் தான் அவர்களை சமாதானம் செய்து இருக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக, தனது தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிற்கு போன் செய்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நளினி, சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருமான மெஹர் தராருக்கும் இடையேயான உறவால் மன அழுத்தத்தில் இருந்தார். தரூரும், மெஹரும் இமெயில் மற்றும் பிளாக்பெர்ரி மூலம் தகவல் பரிமாறிக் கொண்டதை அழுது கொண்டே தெரிவித்தார், என கூறியுள்ளார்.

அதீத நம்பிக்கை வேண்டாம்-அத்வானி



பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. அதீத நம்பிக்கையில் இருக்க வேண்டாம், 2004 நடந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு அதீத நம்பிக்கையே காரணம் என அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அத்வானி, பத்து வருடங்கள் கழித்து ஆட்சிக்கு மறுபடியும் வருவதற்கான முயற்சிகளில் எந்த தொய்வும் இருக்க கூடாது. அதீத நம்பிக்கையில், வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட கூடாது, 2004ல் பா.ஜ.க தோல்வியை கண்டதற்கு காரணங்களில் ஒன்று அதிகமான நம்பிக்கை என்று அவர் பேசியுள்ளார்.

மேலும், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களுக்கு தெரியும் ஓட்டிற்காக தான் அவர்கள் பயன்படுத்த படுகிறார்கள் என்றும், எந்த கட்சியும் அவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றும், என அவர் கூறினார்.

பா.ஜ.க ஜாதி, மதம், மொழி என்று எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை, அனைவருக்காகவும் பாடுபடுகிற கட்சி என்று அத்வானி தெரிவித்துள்ளார். மேலும், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்காக, ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media