தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
9-3-2014 அன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். இதில் எது உண்மை?. அ.தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றால், அதற்கான சட்டம் இயற்றப்பட்டதா? எந்தத்தேதியில் அதற்கான ஆணை வெளிவந்தது?.எந்த நாளேட்டில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது? திட்டவட்டமாகவும் குறிப்பாகவும் ஜெயலலிதா கூறத்தயாரா? 2006-ம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தியமைத்ததும், அவர்களின் பரிந்துரையைப் பெற்றுத்தான் இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற அம்சத்தை சேர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சி என்றும், அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது அவர்கள்தான் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களை கேட்கிறேன். இன்னமும் ஜெயலலிதா அணியினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவிக்கின்ற பல்வேறு இயக்கத்தோழர்களை கேட்கிறேன். ஜெயலலிதா செய்ததுதான் இடஒதுக்கீடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர்.
உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று அவர் கருதியிருந்தால், அவர் பதவியிலே இருந்த அந்த 5 ஆண்டு காலத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் பரிந்துரையை பெற்று, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை?
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசும் ஜெயலலிதா கடந்த காலத்தில் அவர்களைப் பற்றி பேசியது என்ன?. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவிலேயே ஒரு ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?” என்று கூறியவர்தான் ஜெயலலிதா.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து தலா ஓர் இடத்தில் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு ஓர் இடமாவது அளித்திருக்கிறதா?.
வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், தி.மு.க. சார்பாக 2 இஸ்லாமிய சகோதரர்கள், தோழமைக்கட்சிகள் சார்பில் 2 இஸ்லாமிய சகோதரர்கள் என்று மொத்தம் 4 பேர், அதாவது 10 சதவீதம் என்கிற அளவிற்கு முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்க, அ.தி.மு.க.வில் ஒரே ஒருவருக்குத்தான் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதியா? ஜெயலலிதாவா?
இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக - இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன்.
ஆனால் என்னைப் பற்றித்தான் ஜெயலலிதா நான் ஏமாற்றுவதாகவும், வஞ்சிப்பதாகவும் பேசியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமிய பெருமக்களுக்காக நாம் செய்த சலுகைகளையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிட வேண்டும்.
‘முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல, வேறு சமுதாயத்தினரும் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் ஜெயலலிதா பேட்டி கொடுத்ததையும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க. அரசுதான் என்பதையும் விளக்கிட வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.