BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

ரெயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா


சென்னையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, "முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால், சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது எனக் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த 34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.  பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும்.  இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது.  எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.  அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார். இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் கேஜ்ரிவாலுக்கு நிதிஷ்குமார் ஆதரவு


வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

மோடியை எதிர்க்கும் விதமாக கேஜ்ரிவாலுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஐக்கிய ஜனதா தளம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.

வாரணாசியில் மோடியை தோற்கடிக்கும் விதமாக கேஜ்ரிவாலுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதை அந்த கட்சியின் தலைவர் சரத்யாதவ், பொதுச்செயலாளர் தியாகி தெரிவித்து உள்ளனர். கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்வார் என்று ஆம்ஆத்மி கட்சி கருதுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் அதிகமாக வசூலித்த ஆட்டோக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் (1.8 கிலோ மீட்டர் தூரம்) ரூ. 25, அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ. 3.50 (1 மணி நேரத்துக்கு 42 ரூபாய்) என்று நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்ததுடன் சோதனை நடத்த 50 குழுக்களும் அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய சோதனையில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் பிடிபட்டது. பின்னர் இவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தியாக ராயநகர், கே.கே.நகர், அசோக் நகரில் நேற்று ஆட்டோக்களை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 35 ஆட்டோக்கள் பிடிபட்டது. இதையடுத்து 35 ஆட்டோக்களின் பெர்மிட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரயில் காலதாமதமாக வந்ததால் தான் சென்னை சென்டிரலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது- இல.கணேசன்


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான இல.கணசேன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை சென்டிரலில் நேற்று வெடித்த 2 வெடிகுண்டு சம்பவத்தில் ஒரு பெண் பலியாகி உள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். இது இரக்கமற்ற ஒரு கோழை செயல்.

திருப்பதி, காளகஸ்தி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறி வைத்தோ... அல்லது அவர் பேசும் கூட்டத்தில் பதட்டத்தை உருவாக்குவதோ இந்த சம்பவத்தை நடத்தி இருக்கக் கூடும் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம்.

ஆந்திரா எல்லையை அந்த ரெயில் தொடும் சமயத்தில் இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் நிறைவேற்ற இருந்தனர். ஆனால், ரெயில் காலதாமதமாக வந்ததால் சென்னை சென்டிரலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கௌரவப் பிரச்சினை பார்க்கக் கூடாது. இது இருமாநில சம்பந்தப்பட்ட பிரச்சினை. தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு அவர் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும். இதற்காக நாங்கள் அவரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

டி.ஜி.பி. ராமானுஜம் கூட இந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தை குறி வைத்து நடக்கவில்லை என்று கூறி உள்ளார். நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் தேசப்பக்தர்களுக்கு நல்லது நடக்கும். துரோகிகளுக்கு கெடுதல் நடக்கும். அதனால்தான் அவர் பதவி ஏற்கக்கூடாது என இப்படி குண்டு வைக்கிறார்கள்.

ஆனால், மோடி பிரதமர் ஆவது உறுதி. மே 16–ந் தேதிக்கு பிறகு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாதத்தை மோடி ஒடுக்குவார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிடிப்பட்ட தீவிரவாதியுடன் தீவிர விசாரணை நடத்தி இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் (இரட்டை கோபுரம் தகர்ப்பு) நடந்த பிறகு அந்த நாட்டில் ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால் அதன் பிறகு இதுபோன்ற சம்பவம் அங்கு நடக்கவில்லை. ஆனால், இங்கோ எந்த சம்பவத்துக்கும் அரசியல் ஆதாயத்தை தேடுகிறார்கள். இது இனிமேலும் இருக்கக் கூடாது. பயங்கரவாதத்தை தீவிரவாதிகளை அழிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

தந்தையின் திருமணத்திற்கு முழு ஆதரவு- திக்விஜய் சிங் மகன் ஜெயவர்தன்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் (வயது 67), தனக்கும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அமிருதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக டிவிட்டரில் புதன்கிழமை தெரிவித்திருந்தார். அமிருதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டிருப்பதாகவும், அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திக்விஜய் சிங் கூறியிருந்தார். இது குறித்து அவரது மகன் ஜெயவர்தன் கூறுகையில், "எனது தந்தை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட விவகாரம். இதுதொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், எனது தந்தைக்கு முழு ஆதரவு உண்டு" என்றார்.

ஜெய்வர்தன், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரகோகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில்தான் திக்விஜய் சிங் கடந்த 1977-ம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இப்போதே தோற்று விட்டேன் குஜராத் காங்கிரஸ் வேட்பாளர் ஒப்புதல் !!



காங்கிரசு கட்சியின் ஜாம்நகர் தொகுதியில் இரண்டு முறை நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் விக்ரம் மாடம் . குஜராத்தில் வாக்குப்பதிவு புதன்கிழமை முடிந்த நிலையில் விக்ரம் பத்திரிகையாளர்கள் அழைத்து , தான் 30,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்க போவதாகவும் , அதனால் கட்சி தொண்டர்கள் யாரும் பந்தயம் கட்ட வேண்டாம் என கூறினார் . மேலும் தான் ஒரு யதார்த்தவாதி என்றும் உண்மையில் இருந்து ஓடுவதில் ஆர்வம் இல்லை என்றும் கூறினார் .

இவரை எதிர்த்து பாஜக சார்பில்  போட்டியிடுவது இவரது உறவினர் பூனம் என்பவர் .

மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கலாம்- லாலு பிரசாத் யாதவ்


நரேந்திர மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது:

மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளரான கிரி ராஜ்சிங் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். அதற்குப் பதிலாக மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கலாம். அது அவருக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியபோது, பாகிஸ்தானில் லாலு பிரசாத் மிகவும் பிரபலமாக உள்ளார், எனவே அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதுதான் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திராவிட கட்சிகள் நடத்திய அரசியல் விளைவால் தமிழகத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது: சுப்பிரமணியன் சுவாமி


சென்னையில் நடந்துள்ள குண்டுவெடிப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசிய‌ போது, “ஓட்டு வங்கியை மனதில் வைத்து திராவிட கட்சிகளான அதிமுக-வும், திமுக-வும் அரசியல் நடத்தியதன் விளைவால் இந்த அளவுக்கு தீவிரவாதம் வளர்ந்துள்ளது. தேசபக்தி உள்ள கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். அடுத்த சட்டசபை தேர்தலில்தான் அந்த மாற்றம் வரும்” என்று கூறினார்.

நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஓட்டுச் சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்று சட்டத்தில் உள்ளது. மோடி நடத்தியது பொதுக்கூட்டம் அல்ல. கூட்டம் கூடினால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். முட்டாள்தனமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஏர்செல் - மேக்சிஸ் விற்பனை வழக்கு குறித்து பதிலளித்த போது, “ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது தான் இந்த விற்பனை நடந்துள்ளது. அவரையும் மாறன் சகோதரர்களையும் காப்பாற்ற, தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரி மூலம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேக்சிஸ் நிறுவனம் தற்போது சவூதி அரேபியா நிறுவனத்துக்கு பங்குகளை விற்று விட்டது. மத்தியில் ஆட்சி மாறியதும் ப.சிதம்பரம், அவரது மகன் மீதும் விசாரணை நடக்கும்” என்றார்.

மோடியை போல நான் உண்மையை மறைக்கவில்லை: திக்விஜய்சிங் பேச்சு

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்குக்கும் , பெண் நிருபர் அமிர்தா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அமிர்தா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக் கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில்," "நான் எனது சொந்த வாழ்க்கையை மறைக்கவில்லை, மோடி தான் அவரது சொந்த வாழ்க்கையை 30 ஆண்டு காலமாக மறைத்து அரசியல் செய்துள்ளார். எனக்கு எதையும் சந்திக்கும் தைரியம் இருக்கிறது. நான் அம்ருதா ராயை, அவரது விவாகரத்திற்கு பின் திருமணம் செய்வேன்".

மேலும் அவர், "தற்போது நடக்கும் தேர்தல் சாதாரண‌ மக்களுக்கும் பெரும் முதலாளிகளுக்குமான போட்டி.  உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்த்த பெரு நிறுவனங்கள் தான் தற்போது மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றன" என்றார்.

குண்டு வெடிப்பில் உயிரழந்த ஸ்வாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு


சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான ஸ்வாதியின் உடல் நேற்று இரவு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் டி.சி.எஸ். பெங்களூரில் பணி புரிந்து வந்தார். அவரது உடலைப் பெறுவதற்காக, நேற்று மாலையில் தந்தை ராமகிருஷ்ணனும், தாயார் காமாட்சி தேவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை பிண வறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்வாதியின் உடலை பார்த்து அவர்கள் கதறியழுதனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஸ்வாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணக்கோலம் காண சில தினங்களே இருந்த நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர் துக்கத்தில் கதறி அழுதனர். பின்னர், ஸ்வாதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பெங்களூரில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்த ஸ்வாதி, முதல் மாத ஊதியத்தில் தனது பாட்டிக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு திருமணக் கனவுகளுடன் புறப்பட்ட அவருடைய எதிர்பாராத மரணம், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

84 வயது பாட்டி பலாத்காரம், மருத்துவமனையில் உயிரிழந்தார்


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சவாரா பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.

கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர்கள், மயக்க நிலைக்கு செல்லும் முன்னர் அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டின் அருகே விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media