BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 December 2014

குழந்தை வரளர்ப்பு : காதில் பூச்சி நுழைந்தால் எடுப்பது எப்படி


காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும் காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே எச்சரிக்கையுடன் மேற்சொன்னவாறு செயல்படவும்.

ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் எதிர்க்கட்சிகளுடன் ஒப்பந்தம்

இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறீசேனா, எதிர்க்கட்சிகளுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டார். இலங்கை அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் ராஜபட்ச 3ஆவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ராஜபட்ச அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், ராஜபட்ச அரசில் 2ஆம் நிலை தலைவருமான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக கடந்த 21ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில், கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புத்த மத மூத்த துறவி மதுலுவாவே சோபிதா, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சிறீசேனா ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்காவும் கலந்து கொண்டாரஅந்த ஒப்பந்தத்தில், இலங்கையில் "சர்வாதிகாரம் வாய்ந்த' அதிபர் முறையிலான ஆட்சியை நீக்குவது, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 18ஆவது திருத்தத்தை செல்லாததாக்கி விட்டு, இலங்கையில் சிறந்த ஜனநாயக ஆட்சி ஏற்படுவதற்கு வழிவகை செய்வது, தேர்தல் முறையிலும், அரசமைப்பு ரீதியிலும் சீர்திருத்தம் மேற்கொள்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அமைதியாக வழிபட முடியவில்லையெனில் கோயிலை மூடலாம் : உயர் நீதிமன்றம்

பொதுமக்கள் அமைதியாக வழிபட முடியவில்லையெனில், கோயிலை இழுத்து மூடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இ.சமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: எங்களது கிராமத்தில் இரண்டு கங்கையம்மன் கோயில்கள் உள்ளன. ஊரில் இரண்டு குழுக்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால், கோயிலைப் பூட்டி, வருவாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். அதனால், வழிபட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, கங்கையம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில்களில் வழிபடுவதில் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு இந்த சமுதாயத்தில் பிரிவினை உள்ளது. இது வருத்தமளிப்பதாக உள்ளது. கோயிலைப் பூட்டி, வழிபாட்டு உரிமையில் குறுக்கிட்டனர் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களால் அமைதியாக வழிபட முடியவில்லையெனில், கோயிலை இழுத்து மூடலாம். கோயிலை மூடி, அதிகாரிகள் "சீல்' வைத்தது சரியான முடிவுதான். மேலும், இந்த மனுவை பொது நல வழக்காகக் கருத்தில் கொள்ள முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

நேதாஜியின் இறுதி நாட்கள் : உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். எங்கள் நெஞ்சில் நிறைந்த நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இத்தகைய உணர்வு கொண்ட அனைவரையும் இணைத்துக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப்போர் நடத்தும் என்று கூறியுள்ள வைகோ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்திய நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த மேதையான எச்.வி. காமத்,நேதாஜி மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1956 இல் நேரு அரசு ஷா நவாஸ்கான் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு நேதாஜி மறைந்ததாக அறிக்கை தந்தாலும், அக்குழு உறுப்பினரான சரத் சந்திர போஸ் அதனை மறுத்து, நேதாஜி சாகவில்லை என்றே கூறினார். 1967 க்குப் பின், மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குகா, நேதாஜியின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். 350 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர். 1970 ஜூலை 11 இல், பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோÞலா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை இந்திரா காந்தி அமைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேதாஜி இறந்ததாக அக்குழு அறிவித்தது.

ஆனால், பீகார் மாநிலத் தலைவர் சத்யேந்திர நாராயணன் சின்கா நேதாஜி குறித்த உண்மைகளை அறியப் பல ஆண்டுகள் போராடி, நேதாஜி பயணித்த விமானம் டைரன் என்ற நகருக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தெரிவித்தார். 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, கொல்கத்தாவில் உள்ள ஆசியக் கழகம், மாÞகோ சென்று, பல மாதங்கள் தங்கி, 30 ஆண்டுக்கால ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், ‘மாÞகோவில் உள்ள ரஷ்ய உளவுத்துறையின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்ற இரண்டு கோப்புகளில் நேதாஜி பற்றிய உண்மைகள் அடங்கி இருக்கின்றன; 1945, 47 ஆம் ஆண்டுகளில் இருந்த சில ரஷ்ய ராஜதந்திரிகள் இந்த உண்மையைக் கூறி உள்ளனர்’ என்று அறிக்கை தந்தது.

இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நேதாஜியைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட மறுத்தது. இன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, நேதாஜி பிறந்த ஒடிஷா மாநிலத்தின் கட்டக் நகரில் நடைபெற்ற நேதாஜியின் 117 ஆவது பிறந்த நாள் விழாவில் உரை ஆற்றியபோது, நேதாஜி மறைவு குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள, இந்தியாவின் அனைத்து மக்களும் பொறுமையின் எல்லைக்கே சென்று கவலைப்படுகின்றனர். எனவே, உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறினார்.

தூய்மை கங்கை ரூ.4,975 கோடி மதிப்பில் 76 திட்டங்கள்

கங்கை நதியைத் தூய்மையாக்க, ரூ.4,975 கோடி மதிப்பீட்டில் 76 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சன்வார் லால் ஜாட், மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கங்கை நதியைச் சீரமைத்து, தூய்மையாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கங்கை நதி பாயும் மாநிலங்களான உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 76 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான அளவைக் காட்டிலும், 12.30 மில்லியன் கங்கை நீரை கூடுதலாக நாள்தோறும் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,649 கிராமப் பஞ்சாயத்துகளில் நதி வழித்தடத்தில் மலம் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, மொத்தம் ரூ.4,975 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தவிர, கங்கை ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்று சன்வார் லால் தெரிவித்தார்.

மக்களவைச் செயலராக அனூப் மிஸ்ரா பொறுப்பேற்றார் : காங்கிரஸ் எதிர்ப்பு

மக்களவைச் செயலராக அனூப் மிஸ்ரா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவரது நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் மிஸ்ராவை மக்களவைச் செயலராக நியமித்துள்ளதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை அறிவித்தார். உடனே, மக்களவையில் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, அனூப் மிஸ்ராவை நியமித்த முறைக்கு ஆட்சேபம் எழுப்பினார். கார்கே பேசியதாவது: இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியைக் கலந்தாலோசிக்கும் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதால் என்னிடம் அவைத் தலைவர் கலந்தாலோசிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், சிபிஐ போன்ற அதிகாரிகளின் நியமனத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்கும் வகையில் சட்டங்களை அரசு திருத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மக்களவைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய மக்களவைச் செயலகத்தில் உள்ள எந்த அதிகாரிக்கும் தகுதி இல்லையா? என்று கார்கே கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ""அனூப் மிஸ்ராவின் நியமனம் என்பது நான் எடுத்த முடிவாகும். இந்த விவகாரம் குறித்து கார்கேவுடன் எனது அறையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இது குறித்து விவாதிக்க, இந்த அவை உரிய இடம் அல்ல'' என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media