BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 4 December 2014

உணவே மருந்து : ஆப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது :
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது. மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது :
சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது. இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது :
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது. இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றி விடும்.

சிக்கன் சாப்பிட்டால் சிக்கல்

மனிதனைக் கொல்லும் மிகப் பெரிய சக்தியாக கோழி இறைச்சி மாறிக்கொண்டிருக்கிறது’ என்றுஇந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் (CSE), சமீபத்தில் ஓர் அதிர்ச்சியான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். டெட்ராசைக்ளின் (Tetracyclin), ஃப்ளுரோகு வினோலோன் (Fluroquinolone), அமினோகிளைகோஸைடு (Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன. கோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாம்.

அணு ஆயுதங்கள் விவகாரம் : ஐ.நா. சபை தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு



அணு ஆயுதங்கள் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாக்களித்தன. "அணு ஆயுதங்கள் இல்லாத உலகம்' என்ற இலக்கை அடையும் நோக்கில், ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் ஒன்று செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 169 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில், சீனா, பூடான் உள்ளிட்ட 5 நாடுகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. முன்னதாக, அந்த வரைவின் பிரிவுகள் குறித்து தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 9ஆவது பகுதி மீது தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தப் பகுதியில், "இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள், அணுஆயுதம் இல்லாத நாடு என்ற வகையில் என்.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்; தங்கள் நாட்டில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களையும், சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில், 165 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் எதிராக வாக்களித்தன. பூடான், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

சட்டப்பேரவை இன்று கூடுகிறது : 3 நாள்கள் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. வியாழன் (டிச. 4), வெள்ளி (டிச. 5) திங்கள்கிழமை (டிச.8) ஆகிய மூன்று நாள்களில் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. வியாழக்கிழமை கூடவுள்ள பேரவையின் கூட்டத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அவை முன்னவர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அதிமுக சார்பில் அமைச்சர் வைத்திலிங்கம், அரசு கொறடா மனோகரன், திமுக சார்பில் சக்ரபாணி, கம்பம் ராமகிருஷ்ணன், தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டப்பேரவை செயலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், பெ.கந்தசாமி, நா.மகாலிங்கம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.ரங்கநாதன், ஏ.அ.சுப்பராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து, கூடுதல் செலவுக்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட அரசினர் அலுவல்கள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை விடப்படுகிறது. பின்னர், வரும் திங்கள்கிழமை (டிச.8) சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கையின் மீது விவாதமும், பதிலுரையும் நடைபெறுகிறது. மேலும், மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கீடு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பின்னர் பேரவை ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவன ஈர்ப்பா? ஒத்திவைப்பா? சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானமும், பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்புத் தீர்மானமும் கொடுக்கப்படுவது வழக்கம். கவன ஈர்ப்புத் தீர்மானம் என்றால், எதிர்க்கட்சிகள் அளிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை பேரவை அனுமதிக்கப் பெற்ற நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பேரவைக் கூட்டத் தொடர் மூன்று நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்க்கட்சியினரால் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்து அதன் மீது விவாதம் நடத்த இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டு வர விரும்பினால் அதுகுறித்து பேரவை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஆனால், அதை பேரவையில் எழுப்புவதற்கு பேரவைத் தலைவர் தனது ஒப்புதலைத் தெரிவிக்க மறுக்கலாம். அதன்பிறகு, அதை பேரவையில் எழுப்ப முடியாது. இதனால், கவன ஈர்ப்போ அல்லது ஒத்திவைப்புத் தீர்மானங்களையோ அளித்து ஒரு பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை கூடவுள்ள பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க முடியுமா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்புகின்றனர். அதேசமயம், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு உரிய வகையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஏ.எஸ். தேர்வு : வயது வரம்பை மாற்றும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வை எழுதுபவர்களின் வயது வரம்பைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் - ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினர் வி. ஏழுமலை புதன்கிழமை துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் எத்தனை முறை பங்கேற்க வேண்டும் என்ற எண்ணிக்கையைக் குறைக்க அரசு ஏதும் திட்டமிட்டுள்ளதா?' என்று கேட்டிருந்தார்.

அப்போது, அவையில் இருந்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்: 'மத்தியப் பணியாளர்கள், பயிற்சித் துறை அல்லது இதர துறைகளில் சேர தேர்வெழுதுவோரின் வயது வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளதாக சில ஊடகங்களில் அண்மையில் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நாங்கள் அப்போதே மறுத்துவிட்டோம். குடிமைப் பணிகளுக்கான தேர்வில் மாற்றம் கொண்டு வரும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த நவம்பர் 23ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டறிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, யுபிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதுவோருக்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவில் 32 வயதாகும். அவர்கள் ஆறு முறை தேர்வில் பங்கேற்கலாம். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) பிரிவில் தேர்வெழுதுவோருக்கான வயது 35 ஆகும். இப்பிரிவினர் 9 முறை தேர்வில் பங்கேற்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான வயது வரம்பு 37 ஆகும். இவர்கள் எத்தனை முறை வேண்டுமானலும் தேர்வெழுதெலாம்' என்றார் ஜிதேந்திர சிங்.

சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு நிறுத்திவைப்பு

சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்குத் தடை விதிக்கும் உத்தேச முடிவை மத்திய அரசு நிறுத்திவைக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்குத் தடை விதிக்கும் வகையில், சிகரெட், புகையிலைப் பொருள்கள் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார். மேற்கண்ட தடையைக் கொண்டு வந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை வெங்கய்ய நாயுடு, தில்லியில் புதன்கிழமை நடத்தினார். அப்போது, பேசிய பலரும் சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, இவ்விஷயத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசிப்பதாகவும், அதுவரை சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கும் முடிவு நிறுத்திவைக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளத்தின் மறுஆய்வு மனு தள்ளுபடி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேரள அரசின் மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. மறுஆய்வு மனு என்பதால் தலைமை நீதிபதி அறையில் வைத்து இந்த மனுவை விசாரிப்பதா, வேண்டாமா என்று நீதிபதிகள் பரிசீலித்தனர். இதனால், மனு தாக்கல் செய்த கேரள அரசு, பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு ஆகியவற்றின் வழக்குரைஞர்களும் நீதிபதிகளின் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியல் சாசன அமர்வு கேரளத்தின் மனு மீதான உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையில் கேரளத்தின் மனு மீதான உத்தரவு வெளியிடப்பட்டது. அதில், "மறுஆய்வு மனுவில் கேரள அரசு விடுத்த கோரிக்கைகள், அத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றைப் பார்வையிட்டோம். இந்த விவகாரத்தில் முன்பு (மே 7, 2014) பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய முகாந்திரம் எழவில்லை. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி: முல்லைப் பெரியாறு அணையை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த மறுத்த கேரள அரசு, மாநில சட்டப்பேரவையில் "அணை பாதுகாப்புச் சட்டம்' ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, "நூற்றாண்டு பழைமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும். இந்த அணையை சொந்தம் கொண்டாட தமிழகத்துக்கு உரிமை இல்லை' என்ற பல்வேறு புதிய வாதங்களை கேரளம் முன்வைத்தது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு விரிவான ஆய்வை நடத்தி, முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் கூறியது. இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மே 7-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் கேரள அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதில், "1886-ஆம் ஆண்டு சென்னை மாகாணம்- திருவாங்கூர் சமஸ்தானம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லாது; அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனந்த் குழு தவறான மதிப்பீடுகளின்படி இந்த விவகாரத்தை ஆய்வு செய்துள்ளது. இந்த மறுஆய்வு மனுவை நீதிபதிகளின் அறையில் அல்லாமல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media