வைகை அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை அணை. அணை கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதலால், அணைக்கு வரும் தண்ணீரால் அடித்து வரப்பட்ட மண்ணால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் சுமார் 20 அடி வரை சேறும், சகதியுமாக உள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டில், பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிலையம், அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியை ஆய்வு செய்தது. அப்போது, அணையில் வண்டல் மண், மணல் மற்றும் சவுடு மண் அதிக அளவில் படிந்திருந்ததை கண்டறிந்தது. இதனால், அணையின் முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடியில், 974 மில்லியன் கன அடி (14.16 சதவீத பரப்பளவு) தண்ணீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது தெரிய வந்தது.
அணை கட்டப்பட்ட 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1960-இல் முதன்முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர், 28 ஆவது முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவை அடைந்தது. இந்த காலக் கட்டங்களில் சுமார் 1.38 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வீணாக வெளியேறியுள்ளது. ஒவ்வொரு முறையும் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போதும், 974 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. அணையில் ஆய்வு செய்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அணையில் அதிக அளவு வண்டல் மண் படிந்துள்ளது. எனவே, அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீருக்காக கேரளத்துடனும், கர்நாடகத்துடனும் போராடும் தமிழக அரசு, வைகை அணையிலிருந்து வீணாகும் தண்ணீரை சேமித்து பயன்படுத்த, தூர்வாரும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
இது குறித்து, தேனி, மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எம். பாண்டியன் கூறியது: கடந்த 15 ஆண்டுகளாக அணையைத் தூர்வாருவோம் என அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தூர்வாரப்படவில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர் என்றார்.
அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் :
அணை முழு கொள்ளளவை அடைய அதில் படிந்துள்ள 27.579 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு மண்ணை தூர்வார வேண்டும். இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம். மணலை கட்டடப் பணிக்கு விற்பனை செய்யலாம். சவுடு மண்ணை செங்கல் காளவாசல்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். புதிய அணை கட்ட வேண்டுமானால், ரூ. 1500 கோடி வரை செலவாகும். வைகை அணையை தூர் வார ரூ. 250 கோடி மட்டுமே செலவாகும் என பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வீணாகியுள்ள தண்ணீர் (மில்லியன் கன அடி)
2007 9 நாள்கள் 1,741.13
2008 26 நாள்கள் 1,776.56
2009 3 நாள்கள் 405.48
2010 20 நாள்கள் 4,048.19
2011 17 நாள்கள் 3,035.75
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.