கருப்புப் பண விவகாரத்தில், நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங்கிடம், ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு தனது அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக மோடி தெரிவித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது: கருப்புப் பண விவகாரத்தில், நாட்டு மக்களை மோடி ஏன் ஏமாற்றுகிறார்? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் எவ்வளவு என்பது கூட அரசுக்கு தெரியாது. ஆனால், மக்களவைத் தேர்தலின்போது, இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.400 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக யோகா குரு (பாபா ராம்தேவ்) தெரிவிக்கிறார். ரூ.400 லட்சம் கோடி இருப்பதாக அவர்களுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது? இதுகுறித்து அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 லட்சம் கொடுக்கப் போவதாக மக்களவைத் தேர்தலின்போது மோடி தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கிறது. அதாவது, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்ததையேதான் தற்போதைய மத்திய அரசும் தெரிவித்துள்ளது. அதாவது, கருப்புப் பண விவகாரத்தில் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்பற்றிய நிலைப்பாட்டை மோடி எடுத்துள்ளார் என்று திக்விஜய் சிங் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.