முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேரள அரசின் மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. மறுஆய்வு மனு என்பதால் தலைமை நீதிபதி அறையில் வைத்து இந்த மனுவை விசாரிப்பதா, வேண்டாமா என்று நீதிபதிகள் பரிசீலித்தனர். இதனால், மனு தாக்கல் செய்த கேரள அரசு, பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு ஆகியவற்றின் வழக்குரைஞர்களும் நீதிபதிகளின் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியல் சாசன அமர்வு கேரளத்தின் மனு மீதான உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையில் கேரளத்தின் மனு மீதான உத்தரவு வெளியிடப்பட்டது. அதில், "மறுஆய்வு மனுவில் கேரள அரசு விடுத்த கோரிக்கைகள், அத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றைப் பார்வையிட்டோம். இந்த விவகாரத்தில் முன்பு (மே 7, 2014) பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய முகாந்திரம் எழவில்லை. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி: முல்லைப் பெரியாறு அணையை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த மறுத்த கேரள அரசு, மாநில சட்டப்பேரவையில் "அணை பாதுகாப்புச் சட்டம்' ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, "நூற்றாண்டு பழைமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும். இந்த அணையை சொந்தம் கொண்டாட தமிழகத்துக்கு உரிமை இல்லை' என்ற பல்வேறு புதிய வாதங்களை கேரளம் முன்வைத்தது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு விரிவான ஆய்வை நடத்தி, முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் கூறியது. இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மே 7-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் கேரள அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதில், "1886-ஆம் ஆண்டு சென்னை மாகாணம்- திருவாங்கூர் சமஸ்தானம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லாது; அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனந்த் குழு தவறான மதிப்பீடுகளின்படி இந்த விவகாரத்தை ஆய்வு செய்துள்ளது. இந்த மறுஆய்வு மனுவை நீதிபதிகளின் அறையில் அல்லாமல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.