மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்று இன்று நடந்தேறியுள்ளது, கடந்த சில ஆண்டுகளாக மோடியின் கவனமான காய் நகர்த்தல்கள் இன்று பாஜக என்ற கட்சியை தன் தோளில் தூக்கி வளர்த்த அத்வானியை தூக்கி எறிய வைத்து மோடியை தூக்கி பிடிக்க வைத்துள்ளது.
1989 தேர்தலுக்கு முன்பு பாஜக வெறும் 2 எம்பிகளை மட்டுமே கொண்டிருந்தார்கள், ஆனால் 1989ல் காங்கிரசுக்கு எதிரான விபிசிங் கின் ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியாக இணைந்து போட்டியிட்டதில் பாஜக 85 இடங்களை பெற்றது, இதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் பாஜகவின் இரும்பு மனிதர் என கூறப்பட்ட எல்.கே.அத்வானி, அத்வானிக்கு பின் 1991ல் 120 இடங்கள், 1996ல் 161 இடங்கள் 199ல் 182 இடங்கள் என காங்கிரசுக்கு மாற்றாக பாஜக வளர்ந்தது. ரத யாத்திரை நடத்தி மதவெறியை தூண்டி பாபர் மசூதியை இடித்தது வரை அத்வானியின் பங்கு பெரும்பங்காக இருந்து கட்சியை வளர்த்தார், ஆனால் இன்று அவர் யாரை காத்தாரோ, யாரை சிபாரிசு செய்து முதல்வராக்கினாரோ அவராலேயே தூக்கி எறியப்பட்டுள்ளார்.
1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது என்றாலும் வாஜ்பாய் அந்த ஆட்சிக்கு வெறும் முகமூடியாக மட்டுமே இருந்தார், கட்சியும் ஆட்சியும் அத்வானியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு படுகொலைகளை அடுத்து குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்தேறின.
குஜராத்தில் மோடி மட்டுமல்ல, இந்துத்துவா பெயரை சொல்லி யார் நின்றாலும் வெற்றிபெறுவார்கள், ஏனெனில் காந்தி பிறந்த மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், அரசு ஊழியர்கள், காவல்துறை என அனைத்திலும் சிறுக சிறுக ஊடுறுவிய இந்துத்துவா சக்திகள் குஜராத் மக்களின் ஒட்டு மொத்த மனப்பாண்மையையும் மாற்றியுள்ளன. மற்ற மாநிலங்களில் எல்லாம் முஸ்லீம்களும் மற்றவர்களை போன்றே இந்தியாவின் குடிமக்கள் என்று பெரும்பாலானோர் கருதினாலும் குஜராத்தில் மட்டும் வெளிப்படையாக மக்கள் மனம் முஸ்லீம்கள் இந்திய நாட்டின் இரண்டாம் தர குடிமகன்கள் என்றே கருத்து தெரிவிக்கின்றனர். எனவே குஜராத் ஃபார்முலாவை வைத்து இந்தியா முழுதும் வெற்றி பெறலாம் என்று பாஜக நினைத்தால் அது வெறும் கனவே.
கடந்த சில ஆண்டுகளின் மோடியின் கவனமான காய் நகர்த்தல்கள் இன்று மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் நிலைவந்துள்ளது. தீவிர இந்துத்துவாக்களான ஆர்.எஸ்.எஸ் மோடியை போன்று கடும்போக்குள்ள ஒருவரை தேடிக்கொண்டிருந்தது, இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் குறிப்பாக காங்கிரஸ்க்கு ஆதரவான அம்பானி பிரதர்ஸ்சை மோடி தனது சகாக்களாக ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டது என திட்டம் போட்டு காய்நகர்த்தினார்.
காங்கிரஸ் அரசின் மோசமான கையாலாகாத ஊழல் அரசின் போக்கினால் வெறுப்புற்றிருந்த மத்திய தர வர்க்கம் தங்களுடையை கோபத்தை ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது, இந்நிலையில் மோடி நிர்வாகதிறமை மிக்கவர், குஜராத் செழிக்கின்றது என்று கணிசமான செல்வாக்கு சமூக வலைதளங்களில் உயர்ந்தது. லெட்டர் டூ த எடிட்டர் எழுதுவதற்கென்றே ஆட்கள் வைத்து வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் சின் பழைய டெக்னிக்கை சமூக வலைதளங்களில் மோடி புகழ் பாட 500க்கும் மேற்பட்டோர்கள் கொண்டு முதலில் மோடி புகழ் பரப்பப்பட்டாதக சில நாட்களுக்கு முன் சிலர் குற்றம் சாட்டினர், எது எப்படியென்றாலும் மோடிக்கு மத்திய தர இந்தியர்களிடம் இந்த பிரச்சாரம் நன்றாக வேலை செய்துள்ளது என்பதன் சாட்சியே இன்று மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.
குஜராத்திற்காக ஒரு இலட்சம் கோடி உலக வங்கியில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு பிரச்சாரம் உலவுவது உண்டு, சங்கர பாண்டி வாத்தியார்னா, எல்லாரும் பள்ளிக்கூட வாத்தியார்னு தப்பா நெனச்சுகிட்டு இருக்கீங்க. ஆனா அவரு, எழுதப்படிக்கத் தெரியாத, சிலம்பங்கத்துக்குடுக்கற குஸ்தி வாத்தியார்னு நெறைய பேருக்கு தெரியறதில்ல என்று சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் சொல்வது போல உலக வங்கி என்றவுடன் அது என்ன மோ நம்ம ஊர் ஐசிஐசிஐ பேங்கோ, ஸ்விஸ்பேங்கோ போல் அதில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து பணம் டெப்பாசிட் செய்யலாம் என்று நினைத்து பரப்பிவிட்டார்கள் போல, உலக வங்கி பணம் டெப்பாசிட் வாங்குவதல்ல அதன் வேலை, மேலும் இந்தியாவின் $237.1 பில்லியன் டாலர் கடனில் ஒரு இலட்சம் கோடியை செலுத்தி பாதி கடனை அடைத்திருக்கலாமே குஜராத், இது போன்றே பல கதைகளை உண்மை போல பரப்பி உள்ளார்கள், மிக மோசமான ஊழல் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரசின் மீது வெறுப்படைந்துள்ள மத்திய தர வர்க்கமோ இந்த கட்டுகதைகளை சிறிதும் ஆராயாமல் நம்பி லைக்கும் ஷேரும் போட்டுக்கொண்டுள்ளார்கள்.
பாஜகவின் முக்கிய கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை எதிர்த்து ஏற்கனவே விலகியுள்ளது, அத்வானியும் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார் என்றாலும் சுஷ்மா சுவராஜ் போன்ற மோடி எதிர்ப்பாளர்கள் கூட மோடியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மண்ணின்மைந்தர் பிரதமர் ஆக வாய்ப்பு என்றும் இந்துத்துவா ஆழ மக்கள் மனதில் ஆழ ஊடுறுவியுள்ள குஜராத்தில் பாஜக மீண்டும் ஒரு பெரும் வெற்றியை பெறலாம், ஆனால் பீகாரில் முக்கிய கூட்டணி கட்சியை இழந்துள்ளது, காங்கிரஸ் மீது ஆத்திரத்தில் இருந்தாலும் கூட வேறு வழியின்றி இந்தியா முழுதுமுள்ள முஸ்லீம் சமூகம் பாஜக மட்டுமின்றி பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுக்கும் வாக்களிக்காது என்பதால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் திமுக, அதிமுக என்று யாருமே பாஜக கூட்டணிக்குள் வரவாய்ப்பு குறைந்துள்ளது. கர்நாடகாவிலோ பாஜக பிய்ந்து தொங்குகிறது, இங்கெல்லாம் நடுத்தர வர்க்கம் பாஜகவுக்கு வாக்களித்தாலும் அது வெற்றி பெறும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.
முசாஃபர் கலவரத்தை கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் குஜராத்தை அடுத்து அதே மாதிரியான ஃபார்முலாவை உத்திரபிரதேசத்தில் பாஜக பரிசோதித்து பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தென்னிந்தியாவில் மோடி ஃபேக்டரினால் கிடைக்கபெறாத கூட்டணி ஆதரவும், இனி பிரச்சாரம் முழுக்க மோடி மீது குறிவைத்து சொல்லப்படும் குஜராத் படுகொலைகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லியும் தனது பிரதமர் வேட்பாளை காக்கும் தற்காப்பு போரில் இறங்கும் பாஜக எந்த அளவுக்கு வெற்றியை பெறும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.