BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 30 November 2013

திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?

பார்ப்பன எதிர்ப்பு! ஆரிய எதிர்ப்பெல்லாம் வேஷமா? திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?


இதற்கு முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேனேஜர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட அதற்கு காரணமானவர்கள் என்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர், நடக்கவே நடக்காது ஜெயலலிதாவும் ஜெயேந்திரரும் பார்ப்பனர்கள், எனவே ஜெயேந்திரரை கைது செய்ய வாய்ப்பே இல்லை என்று பத்திரிக்கைகள் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் ஜெயேந்திரர் தப்பி ஓடிவிடாமல் அவரை துரத்தி துரத்தி பிடித்தது அப்போதைய அதிமுக அரசு. வட இந்திய சேனல்கள் இதை இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பலவாறு செய்திகள் வெளியிட்டன. பாஜக தொடர்புகள் மூலம் அதிமுக தலைமையை குளிர்விக்க முயற்சிகள் நடந்தன, எல்லாவற்றையும் உதறிவிட்டு ஜெயேந்திரரை கைது செய்தது ஜெயலலிதா அரசு, இதற்கு ஜெயேந்திரர் மற்றும் ஜெயலலிதாவிடையேயான தனிப்பட்ட பகையே ஜெயலலிதா அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருக்க காரணம் என்றும் செய்திகள் வெளியாகின.

ஜெயேந்திரர் விசாரணை, பெண் தொடர்புகள் குறித்த வாக்குமூல வீடியோக்கள் எல்லாம் டிவிகளுக்கு லீக் ஆகின, நார்கோ அனாலிசிஸ் உட்பட அனைத்து விசாரணைகளும் நடந்தேறின. சங்கரராமன் மகன், மனைவி உட்பட பலரும் தைரியமாக விசாரணைக்கு ஒத்துழைத்து ஜெயேந்திரருக்கு தண்டனை வாங்கி தர ஒத்துழைத்தனர், அதிமுக அரசு காலத்தில் வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் நியாயமாக நடக்காது என்று கூறி ஜெயேந்திரர் தரப்பு மனு செய்ய வழக்கு பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாறியது.

அதிமுக அரசு இருந்தவரை சரியான டிராக்கில் போய் கொண்டிருந்த வழக்கு விசாரணை திமுக ஆட்சி பதவியேற்ற உடன் நொண்டியடிக்க ஆரம்பித்தது, ஜெயேந்திரர் நீதிபதியிடம் போனில் செய்ய வேண்டியதை செய்கிறோம் என்று பேரம் பேசிய டேப்புகள் வெளியாகின, ஆனால் இவைகள் பொய் என்று வழக்கம் போல மடத்து தரப்பால் சொல்லப்பட்டது.

189 அரசு தரப்பு சாட்சிகளில் கிட்டத்தட்ட அனைவருமே பிறழ் சாட்சிகள் ஆனார்கள், போலிஸ் விசாரணையின் போதும் வழக்கின் ஆரம்ப காலத்திலும் காட்டிய வேகத்தை அரசும் காட்டவில்லை, போலிஸும் காட்டவில்லை, சாட்சிகளும் பல்டி அடித்தனர், குறிப்பாக சங்கரராமனின் மனைவியே பிறழ் சாட்சி ஆனார், இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு கீழ் கண்டவாறு பேட்டி அளித்த சங்கரராமன் மனைவி

 கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி''

கொலையான சங்கரராமன் மனைவியையே இப்படி பயமுறுத்தப்பட்டிருந்தால் மற்ற சாட்சிகள் நிலையை சொல்லவா வேண்டும்? அந்த நேரத்தில் அரசுகள் சாட்சிகளுக்கு சரியான பாதுகாப்பை உறுதிசெய்யாமல் இருந்தது, சங்கரமடம் தொடர்ந்து சாட்சிகளை கலைக்கும் வேலையை செய்த போது கண்டு கொள்ளாமல் இருந்தது என திமுக அரசு காலத்தில் இந்த வழக்கை நீர்க்க வைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும திமுக அரசு கண்டுகொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் தரப்பு தைரியமாக சாட்சிகளை மிரட்டி இன்று சாதித்துள்ளது.

இது ஆரிய சதி, இது பார்பன எதிர்ப்பு என்றும் தங்களுக்கு தேவை என்றால் ஆரிய திராவிட  போர் என்றும் எதிர்ப்பவர்களை ஆரிய கைகூலிகள் என்றும் இன்று வரை வசை பாடும் திமுகவின் ஆட்சியில் தான் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட  ஆரிய தலைமை பீடம் வழக்கிலிருந்து தப்பிக்க வழி வகை செய்யப்பட்டது என்பது பெரும் முரண்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்று கண்ணீரோடு பேட்டியளித்த சங்கரராமன் மனைவியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா அரசு அப்பீலுக்கு போகுமா? நீதிமன்றங்கள் மீது மிச்சமிருக்கும் நம்பிக்கையுடன் அப்பீலை எதிர்பார்க்கலாமா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media