தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் "விஜயகாந்த் தனது அண்ணன், தம்பிக்கே ஏதும் செய்யவில்லை, நாட்டுக்காக அவர் என்ன செய்து விட போகிறார்?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல.. எங்களின் சகோதரர் ராமராஜ் மகனுக்கே ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. எங்கள் சகோதரி மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும் செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்) ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.
ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான் அடிக்கடி கேட்குற பாட்டு’
இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்... ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை, பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’
இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் பால்ராஜ்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.