சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் முதல் இந்திய அரசுமுறைப் பயணம் தொடர்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பெய்ஜிங்கில் செய்து வந்த முன்னேற்பாடுகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. இந்தியாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கின் நிகழ்ச்சி நிரல், அவர் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறவிருக்கும் பிரச்னைகள் ஆகியவையும் இறுதி செய்யப்பட்டுள்ளன. பெய்ஜிங் வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ஜீ ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அதிபரின் இந்தியப் பயண நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் அவரிடம் அளிக்கப்பட்டது.
அத்துடன், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்குமாறு ஒரு கடிதத்தையும் ஜீ ஜின்பிங் தோவலிடம் அளித்தார். அப்போது ஜீ ஜின்பிங் பேசுகையில், ""எனது பயணத்துக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக தோவலை அனுப்பியுள்ளதன் மூலம், சீனாவுடனான நல்லுறவு தங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அரசும், பிரதமர் மோடியும் உலகத்துக்குத் உணர்த்தியுள்ளனர்'' என்று பாராட்டினார். அண்மையில், பிரேசிலில் நடைபெற்ற "பிரிக்ஸ்' நாடுகள் மாநாட்டின்போது மோடியுடனான தனது சந்திப்பை நினைவுகூர்ந்த அவர், ""மோடியுடன் நடத்திய உரையாடல் மிகவும் திருப்திகரமாக இருந்தது.
இந்திய - சீன நல்லுறவு மிகவும் முக்கியமானது என்பதிலும், கருத்தொற்றுமையை நிலைபொறச் செய்வது, ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் இரு நாட்டு மக்களும் நன்மையடைவர் என்பதிலும் எங்களிடையே ஒருமித்த கருத்து நிலவியது. எனது இந்தியப் பயணத்தின் மூலம், அந்நாட்டின் வளர்ச்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்தும் எனக்கு நல்ல புரிதல் ஏற்படும் என நம்புகிறேன்'' என்றார். முன்னதாக, சீனாவின் தேசிய கவுன்சில் உறுப்பினர் யாங் ஜீச்சியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யையும் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அடுத்த செவ்வாய்க்கிழமை (செப். 16) ஜீ ஜின்பிங் தனது இந்திய சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை (செப். 19) அவர் சீனா திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.எ னினும், ஜீ ஜின்பிங்கின் இந்திய நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை வெளியிட இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.