பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன். தஞ்சாவூரில் இந்தப் பேரவையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்களுக்கான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
1991 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் நாட்டில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்லாது, பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது. தற்போதைய பாஜக ஆட்சியில் ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் நூறு சத அன்னிய முதலீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு தொழிலிலும் அன்னியர் ஆதிக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம், ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் போன்றவற்றுக்கு உலக வர்த்தக ஒப்பந்தம்தான் காரணம். உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டத்தைக் கொண்டு வருமாறு அன்னிய நிறுவனங்கள் வற்புறுத்துவதால் இங்குள்ளவர்கள் அதைச் செயல்படுத்த முனைகின்றனர்.
அன்னியர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க நம்பிக்கையோடு முயற்சி எடுப்போம் என்றார் வெள்ளையன்.பின்னர், உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களைச் சுரண்ட முயலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மீத்தேன் திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் எம். கணேசன் தலைமை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் த. தேவராஜ், துணைத் தலைவர்கள் எஸ். ராமானுஜம், என். புண்ணியமூர்த்தி, அவைத் தலைவர் எஸ். ஜயபால், மாவட்டச் செயலர் பி. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.