தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கத்தின் சார்பில் பரோட்டா எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 6 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்று புது அப்பனேரி கிராமத்தை அடைந்தது. ‘‘மைதா பொருட்களையும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பரோட்டாவையும் தவிர்ப்போம். இயற்கை உணவுப் பொருட்களான கம்பு, சோளம், தினை, காய்கறிகள் மற்றும் பழங்களை உண்போம்’’ என்று மாணவர்களும், ‘‘அபாயமான பரோட்டாவை தங்கள் குழந்தைகளுக்கு இனி கொடுப்பதில்லை’’ என்று பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்தனர்.
பேரணியின்போது, பரோட்டா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எல்லா வீடுகளிலும் ஒட்டப்பட்டது. பேரணியின் இறுதியில், மெகா சைஸில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை குழி தோண்டி மூடினார்கள்.
இந்த பேரணி குறித்து பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் கூறும்போது, ‘‘பரோட்டா என்பது மைதாவினால் செய்யப்படும் ஒரு உணவாகும். 2 ஆம் உலகப் போரின்போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக பயன்படுத்த தொடங்கப்பட்டது.
அதில் இருந்து பரோட்டாவும் பிரபலம் அடைந்தது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ‘பனசாயல் பெரோசிடே’ என்னும் ரசாயனத்தை சேர்த்து வெண்மை நிறமாக்கி செய்யப்படுவதே மைதா எனப்படுகிறது. இது தவிர ‘அலோக்கான்’ என்ற ரசாயனம் கலந்து மைதா மாவு மிருதுவாக்கப்படுகிறது.
கோதுமை தீட்டப்படும் போதே 76 சதவீத வைட்டமின்களும், தாது பொருட்களும் நீக்கப்படுகின்றன. அதோடு 97 சதவீத நார்ச்சத்தும் களையப்படுகிறது. மைதாவில் செய்யும் கேக், இனிப்பு பொருட்கள் மற்றும் பரோட்டா ஜீரணத்திற்கு ஏற்றது அல்ல. இதில் நார்ச்சத்து இல்லை, நார்ச்சத்து இல்லாத உணவுகள் ஜீரணிக்க காலதாமதமாகும்.
மைதாவை சாப்பிடுவதால் இருதய கோளாறுகள், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஏற்படும். கேரளாவில் மைதாவைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.