ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத் துறை அனுப்பியிருந்த சம்மன் அடிப்படையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின்போது மாறன் சகோதரர்களிடம் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், சில தனியார் நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியது, ஏர்செல் பங்குகள் கைமாற்றப்பட்ட போது மாறன் சகோதரர்களின் செயல்பாடு, சன் டைரக்ட் நிறுவனத்தின் பங்குகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பானஆவணங்களை இருவரும் தனித்தனியாக தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மத்திய அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மீண்டும் விசாரணை?: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள், 2004-06 ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சகோதரரின் நிறுவனத்துக்கு (சன் டைரக்ட்) சாதகமாகச் செயல்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல, தயாநிதி மாறனின் சலுகையைப் பயன்படுத்தி சில வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றதாக கலாநிதி மாறன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், நிர்வாகம் மற்றும் அரசுப் பணி விதிமீறல் தொடர்பாக இருவரிடமும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மீண்டும் மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.