BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 June 2013

தொலைகாட்சி விவாதங்களை தடை செய்யும் முஸ்லீம் அமைப்புகள் - கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷாநவாஸ்

முஸ்லீம் சமூகம் தொடர்பான எந்த விவாதத்தையும் தடை செய்யும் முஸ்லீம் சமூகத்தினரை குறித்து கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷானவாஸ்.

தாலி தேவையா? இல்லையா? என்று ஒரு தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியும் ஆனால் பர்தா தேவையா இல்லையா என்று விவாதம் நடத்தினால் அந்த விவாதத்தை பார்க்காமல் கூட வெறும் முன்னோட்ட காட்சிகளை வைத்து நிகழ்ச்சியை தடை செய்வார்கள், இதனால் பர்தா ஏன் போட வேண்டும் என்று அவர்களுக்கு இருக்கும் கருத்தை கூட பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள், அது மட்டுமின்றி முஸ்லீம் அமைப்புகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் முஸ்லீம் அமைப்புகளை ஒரு கடும் போக்கு சமூதாயமாக காட்டுகிறது. இது குறித்து ஆளூர் ஷானவாஸ் எழுதிய கருத்துகள் கீழே.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது என்றே தெரியவில்லை.

சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புதிய தலைமுறை டிவியின் 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் சர்ச்சை பற்றியும் பதர் சயீதின் முறையீடு பற்றியும் ஒரு முழுமையான அலசல் ஒளிபரப்பாக இருந்தது. அதற்கான முன்னோட்டம் கூட நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

தலாக் குறித்து பொது வெளியில் எதிர்மறையான கருத்துக்கள் தீவிரமாக பரப்பப்பட்டு வரும் இவ்வேளையில், பதர் சயீதின் கலகக்குரல் அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் ஊடகங்கள் இப்பிரச்சனையை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் கூட இதுகுறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே புதிய தலைமுறை டிவியிலும் இப்பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம் சமூகம் குறித்த சென்சிட்டிவான ஒரு பிரச்சனையை அலசுவதால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொண்டே புதிய தலைமுறை டீம், மிகுந்த பொறுப்புணர்வை கையாண்டது. இது தொடர்பாக என்னை அவர்கள் தொடர்பு கொண்டபோது போதிய வழிகாட்டுதல்களை வழங்கினேன். முக்கியமாக யார் யாரிடம் பேட்டி எடுத்தால் சிறப்பாக அமையும் என்ற பட்டியலையும் கொடுத்தேன். அத்தோடு என்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்தேன்.

தலித் மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 'வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்' எனும் உரிமையை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி ஆதிக்கச் சாதியினர் ஒழிக்க நினைப்பது போல், முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தனித்த உரிமையான சரீயத் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி பதர் சயீத் ஒழிக்க நினைக்கிறார் என்று சொன்னேன். என்னைப்போலவே பலரும் தலாக் சட்டத்தின் அவசியம் பற்றியும், அதன் நோக்கங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் தடைபட்டுள்ளது. தடைபட்டது என்று சொல்வதை விட தடுக்கப்பட்டது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நிகழ்ச்சி ஏன் வரவில்லை என்று நாம் விசாரித்த போது, சில முஸ்லிம் அமைப்பினர், முன்னோட்டக் காட்சியைப் பார்த்து விட்டு டிவி நிலையத்துக்கு தொலைபேசி செய்து ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதனால் டிவி நிர்வாகம் பின்வாங்கி விட்டதாகவும் அறிய முடிந்தது.

ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் என்னவென்றே தெரியாமல் அதன் முன்னோட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு அந்நிகழ்ச்சியையே முடக்க முயல்வது நியாயம்தானா? இத்தகைய அதிகாரத்தை இந்த அமைப்புகளுக்கு யார் வழங்கியது? டிவிக்காரர்களை மிரட்டும் இந்த பால்தாக்கரே தனத்துக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

முஸ்லிம்களைப் பற்றிய நல்ல செய்திகளே ஊடகங்களில் வருவதில்லை என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் நமது அடாவடிகளால் இவ்வாறான நல்ல பதிவுகளை வரவிடாமல் தடுக்கிறோம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

முஸ்லிம்களிடமும் வலுவான ஊடகங்கள் இல்லை; வலுவான ஊடகங்களிலும் முஸ்லிம்கள் குறித்த அலசல்கள் வரக்கூடாது என்றால், பொது வெளியில் இருந்து முஸ்லிம்கள் தனிமைப் படுவதை எவராலும் தடுக்க முடியாது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஊடக அரசியலை தெளிவாகப் புரிந்து கொண்ட நல்ல உள்ளங்கள் அதிகம் இருப்பீர்கள். அப்படிப் பட்டவர்கள் புதிய தலைமுறை டிவியை தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் படி வேண்டுகோள் விடுங்கள்.

தொடர்பு எண்: 044-45969500 Fax: 044-45969536

அடுத்த வார 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் குறித்த அலசல் இடம்பெறுவதும், இடம்பெறாமல் இருப்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.

ஆளூர் ஷாநவாஸ்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media