மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின் தமிழகத்திற்கு முதல்முறையாக வருகை தந்துள்ளார், திருச்சியில் இன்று பாஜக இளைஞர் பிரிவின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
மோடியின் பேச்சில் காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பாக்கிஸ்தான் மீதான கடும் விமர்சனங்கள், எல்லையில் பலியான ராணுவ வீரர்களுக்கு நன்றி சொல்தல், வந்தே மாதர முழக்கம் என டிப்பிக்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டமாக நடந்தேறியது.
கூடிய கூட்டம் பற்றி சொல்ல வேண்டுமெனில் பாஜக எதிர்ப்பாளர்கள் 40ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் கூடினார்கள் என்கிறார்கள், ஆதரவாளர்களோ 3 இலட்சம், நாலரை லட்சம் என்கிறார்கள் ஆனால் சுமாராக ஒரு இலட்சம் பேர் கூடியிருப்பார்கள் என்று தெரிகிறது.
முதலில் பேசிய இல.கணேசன் திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும் பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள் என்று கோரினார், பின்பு மோடி ஹிந்தியில் பேசினார், அதை ஹெச்.ராஜா மொழி பெயர்த்தார்.
முதலில் அனைத்து வடநாட்டு தலைவர்களையும் போல தமிழில் நான்கு வார்த்தைகள் பேசினார், ஹிந்தி என்றாலே காது விடைத்து கோபப்படும் தமிழ்நாட்டிலே காங்கிரஸ் தலைவர்கள் வந்தால் கூட ஆங்கிலத்திலே தான் பேசுவார்கள், ஆனால் மோடி நான்கு தமிழ்வார்த்தைகளுக்கு பின் ஹிந்திக்கு தாவி கேப் விடாமல் பேசினார். பாவம் ஹெச்.ராஜாதான் கிடைத்த கேப்பில் மோடியின் ஹிந்தியை அரைகுறையாக தமிழில் மொழி பெயர்த்தார்.
மோடி பேச்சின் சில ஹைலைட்ஸ்
எனது அரசியல் வாழ்கையில் இதுபோன்ற கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை கீழே இருக்கும் இளைஞர்களின் முகம் தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு என் மனதில் தனியே ஒரு இடம் இருகின்றது .... புதிய சுதந்திரத்தினை செதுக்கும் சிற்பிகளாகிய உங்களுக்கு என் நன்றிகள் என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் தமிழக இளைஞர்கள் இன்று நீங்கள் எனக்கு புதிய சக்தியைத் தந்துள்ளீர்கள் என்றார். எல்லையில் நமது ராணுவ வீரர்களை கொன்ற பாக்கிஸ்தானுடன் நியூயார்க்கில் மன்மோகன் பேச்சுவார்த்தை நடத்துகிறார், இது பலியான நம் வீரர்களுக்கு இழைக்கும் அநீதி என்றார் பலியான நமது வீரர்களுக்காக நன்றி சொல்வோம் அந்த தியாகிகளுக்கு வந்தே மாதரம் மூலம் நன்றி சொல்வோம்
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவோம், நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் ஏமாற்ற மாட்டோம் என்பதை தமிழக இளைஞர்கள் மூலமாக நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் உறுதி தருகிறேன் பாஜக இளைஞரணியினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
மோடியின் கூட்டம் பிசுபிசுத்து போகும் என பாஜக எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்க, மோடி மந்திரம் பெரும் பூஸ்ட் கொடுக்கும் என்று பாஜகவும், மோடி ஆதரவாளர்களும் எதிர்பார்க்க இரண்டுக்கும் இடையில் நடந்து முடிந்துள்ளது மோடியின் திருச்சி கூட்டம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.