நேற்று காலை காந்திநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு திரும்பிய நரேந்திர மோடி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் தனது கையில் பாஜகவின் தாமரைச் சின்னத்தை பிடித்தபடி பேசினார். இந்தப் பேட்டி நேரலையில் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பானது.
தன் கையில் தாமரைச் சின்னத்தை வைத்தபடி செய்தியாளர்களிடம் மோடி பேசும்போது, "மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் நாட்டின் விதியை மாற்றி அமைக்கும். தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. தேச நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து கேடுகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அகற்றும். நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன்" என்றார்.
இதன் தொடர்ச்சியாக, மோடி தனது கையில் கட்சி சின்னத்தை ஏந்தியபடி பாஜவுக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக கோரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இது குறித்து, காங்கிரஸ் உடனடியாக தேர்தல் ஆணையத்தை அணுகியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, நரேந்திர மோடி மீது புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று குஜராத் காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் படியே, மோடி மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாக குஜராத் மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தை காட்டி பேசியது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ), 126(1)(பி) ஆகிய பிரிவுகளில் உள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
இவ்வாறான செயல்பாடுகள், ஒரு மாநிலத்தில் மட்டுமின்றி, நாடடின் வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றவைப்பது போலவுமே இருக்கும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.